கந்தர்வர்களின் தலைவன் சித்ரதன் வான்வழியே எங்கோ போய் கொண்டிருக்கிறான். என்னதான் உயரத்தில் திரிந்தாலும் அவன் நிழல் தரையில் விழுந்து முட்களுக்குள்ளும், புதர்களுக்குள்ளும் சிக்கிக் கிழிபடத்தான் செய்கிறது. இப்போது கங்கைக் கரையை ஒட்டிப் பறக்கிறான். அவன் நிழல் நீரில் மிதக்கிறது.
மன்னன் ரேணுகாவின் மகளும், ஜமதக்கினி முனிவனின் பத்தினியும், நான்கு பிள்ளைகளுக்கும் தாயுமான ரேணுகா கங்கையிலே நீராடிக் கொண்டிருக்கிறாள். கரையில் நைந்து நிறமெல்லாம் பறந்துபோன காவி வஸ்திரம் காற்று அடித்துச் சென்று விடாதிருக்க அதன் மேல் கல்.
சற்று தூரத்தில் கொக்கு ஒன்று மனிதர்கள் தெய்வத்தை நோக்கி தவமிருப்பதுபோல் – தவத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்தத் தவம் மீனுக்காக. அப்படியானால் கொக்குக்கு மீன் கடவுளா?
கடவுளையே தின்று ஜீரணித்துவிடுகிறதே இந்தக் கொக்கு!
ரேணுகாவின் மனம் தத்துவ விசாரத்தில் ஈடுபடுகிறது. பிரம்மனுக்கு ஒரு கேள்விக்குறியும், ஒரு வலம்புரி சங்கும், ஒரு எழுத்தாணியும் இருந்தால் போதும் கொக்கு செய்துவிடுவான். மனிதர்களைச் செய்ய எவைகளைப் பயன்படுத்துகிறானோ தெரியவில்லை.
வந்தோம், நீராடினோம், சென்றோம் – என்றிருப்பவள் இன்றுதான் இப்படி அசட்டுத்தனமாய் சிந்திக்கிறாள். மனசு மற்ற நாட்களைவிட லேசாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது.
நீராடும் ரேணுகாவை ஆழமாய்த் தழுவி ஓடுகிறது கங்கை நதி.
ஜமதக்னி முனிவரும் நீராட இங்குதானே வருகிறார்? கங்கையே தழுவுவது எப்படி என்பதை அவருக்குச் சொல்லித்தந்தால் என்னவாம்? தண்ணீருக்குக் காது உண்டா? நாம் சொல்வது காதில் விழுமா? என்ற கவலை இல்லாமல் கேள்வி கேட்கிறாள்.
அவள் மேல் சித்ரரதன் நிழல் படருகிறது. மயிர்கால்கள் கூர்ச்செரிகின்றன. ஒரு நாணம் வந்து உடம்பை அமுக்குகிறது. திடீரெனத் தனக்கு ஏற்பட்ட இந்த மாற்றத்தால் நிலைகுலைந்து காரணம் தேடினாள். நிழல்அவளை விட்டு அப்பால் போனதும் கூச்சமில்லை. நாணம் இன்னும் மிச்சமிருக்கிறது. ஓகோ . இந்த நிழல்தான் சூத்ரதாரியா?
அண்ணாந்து பார்த்தாள். அழகன் – அதிரூபன் – வானத்தில் போகிறான். அவள் மனதுக்குள் மோகனக் கல் விழுகிறது. நினைவலைகள் பின்னோக்கி அவளைச் சுருட்டித் தள்ளுகிறது.
அது அரசிளங்குமரியாய் அரண்மனையில் துள்ளித் திரிந்த காலம். அவளது இரவு நேரத்தில் தூக்கத்தை கனவுகள் குத்தகைக்கு எடுத்திருந்தது. தன் கற்பனைக் காதலனோடு இரவு பகல் பாராமல் உறவு பூண்டிருந்தாள். அந்த வீரமகனின் உருவம் இதோ வானத்தில் போகிறவனுக்கு அப்படியே பொருந்துகிறது.
கூரான நாசி, சீரான உயரம், தோளில் விழுந்து புரளும் சுருள் கூந்தல் எல்லாம் கனகச்சிதமாய் இருக்கிறது. கற்பனை நாயகனுக்கு வலது உதட்டோரத்தில் மச்சம் உண்டு. அதோ போய்விட்டவனுக்கு இருக்கிறதா என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டாள். மச்சம் மட்டும் இருக்குமானால்..
ரேணுகாவின் அடி வயிற்றிலிருந்து பெருமூச்சு கிளம்பி வெளியேறிற்று. இது அவள் இயலாமை விடுகிற மூச்சு. சம்போக ஆசையை அடக்க முடியாமல் பெண்தேடி அலைந்த ஜமத்கனிமுனிவன் ரேணுகாவைப் பார்த்து, அவள் அழகிலே சொக்கி, இவளே தனக்கேற்றவள் என்ற முடிவெடுத்து, திருமணமும் செய்து நான்கு பிள்ளைக்குத் தாயாக்கியும் விட்டான். இவள் விருப்பம் இன்று வரை கேட்கப்படவில்லை.
தென் திசை நோக்கிப் போனவன் – அதிரூபன் சித்ரதன். எப்படியும் இந்த வழியாகத்தானே வந்தாக வேண்டும். அப்போது உதட்டில் மச்சம் இருக்கிறதா என்பதைப் பார்த்து விடுவது என்ற தீர்மானத்தோடு காத்திருந்தாள்.
யாருக்கோ பயந்து இப்படி ஓடுகிற நதியின் முதுகில் ஏராளமான பூக்கள், இவைகளின் பயணம் வண்டுகளைத் தேடியா? வண்டுதானே பூவைத் தேடிவருவது வழக்கம். தேவை எற்பட்டால் தேடியும் போகவேண்டியதுதான். ஆசைக்கு ஆண் என்றிருக்கிறதா? பெண் என்றிருக்கிறதா?
ரேணுகா காத்திருந்தாள். ரேணுகாவின் வரவை எதிர்பார்த்து ஜமத்கனி முனிவன் ஆஸ்ரமத்தில் காத்திருந்தான். அவன் வேள்வி வளர்ப்பதில் ஈடுபடாமல் இருந்தால் எப்போதோ கங்கைக் கரைக்குத் தேடி வந்திருப்பான்.
ஜமத்கனி யாகத்தில் சற்று அதிகமாகவே நெய் பெய்கிறான். ஆவேசமாய் நீண்டு வளர்ந்த தீநாக்கு காற்றில் ஓடிசியோ, கதகளியோ, பரதமோ ஆடுகிறது. அவன் சிந்தை முழுவதும் ரேணுகாவே நிரம்பி வழிந்தாலும், வாயிலிருந்து உதிரும் மந்திரத்தில் பிசகேதும் இல்லை. அவன் பிள்ளைகள் மூன்றுபேர் – சொன்ன மந்திரத்தை யாகத்தீயில் குளிர்காய்ந்தபடியே திருப்பிச் சொல்கின்றனர். நான்கு பிள்ளைகளில் எல்லோருக்கும் இளையவனான பரசுராமனுக்கு வேத விசாரத்தில் நாட்டமில்லை. அவன் வேட்கையெல்லாம் வேட்டையாடுவதில்தான்.
இப்போதுகூட வேங்கை ஒன்றை துரத்திக் கொண்டு ஓடுகிறான். திருதண்டமும், கமண்டலமும் தூக்க வேண்டிய கையில் இளைய மகன் மழுபிடித்து அலைகிறானே என்பதில் ஜமத்கனிக்கு சிறு வருத்தம்தான்.
பொழுது ஓடுகிறது. நீராடப் போனவள் இன்னும் வரக்காணோம். கணவன் தேடிக் கொண்டிருப்பானே என்ற எண்ணம் உதைக்க அவசரமாய் ஆடைமாற்றி – கரையில் கிடந்த ஆற்றுமணலை அள்ளிக் குடம் வனைகிறாள். அது உடைந்து உடைந்து போகிறது.
தன் கையாலேயே மண் பிசைந்து குடம் வனைந்து அந்தப் பொழுதே நீர் எடுத்துச் செல்கிறவளுக்கு – தன் பத்தினித் தன்மையைப் பாதையெல்லாம் பறைசாற்றிச் செல்கிற வளுக்கு – இன்று பெருத்த அதிர்ச்சி. குடம் பிடிபட வில்லை. எல்லாம் கற்பின் சித்து விளையாட்டால் வந்தது.
சித்ரரதன் உதட்டில் மச்சம் இருக்கிறதா என்பதை அறிய முடியாத ஏமாற்றம் இருந்தாலும் மனதின் பெரும்பகுதியைப் பயம் பிடித்து உலுக்குகிறது. கணவன் தாமதத்திற்கான காரணம் கேட்டால் என்ன சொல்வது? அவர் கூட – தாடி மீசை மழித்து, காவியாடை ஒதுக்கி வண்ணத் துகில் உடுத்தி, கழுத்து கொள்ளாத உத்திராட்ச மாலையையும் கழற்றி எறிந்துவிட்டால் – அழகாகத்தான் இருப்பார் அதற்குத்தான் வாய்க்கவில்லையே.
வேர்க்க விறுவிறுக்க நடந்து ஆஸ்ரமப் படியை மிதிக்கிறாள். பட்டென வேள்வித் தீ அணைந்து போகிறது. திரும்பிப் பார்க்கிறான் ஜமதக்னி. இடுப்பில் குடமில்லாத வெறும் மனைவி வருகிறாள். “நில் அங்கேயே!" என்று உறுமுகிறான். அந்த இடத்திலேயே சிலைபோல் நின்று விட்டாள். திரும்பி பிள்ளைகளைப் பார்த்து, “அவளைக் கொல்லுங்கள்!” என்கிறார் ஜமதக்னி.
தாயைக் கொல்வதா? தாயைப் பழித்தவனுக்கு எத்தனை ஜென்மம் எடுத்தாலும் விமோசனம் கிடையாது என்று தந்தைதானே போதித்தார். இப்போது என்ன ஆயிற்று. தந்தைக்குப் புத்தி பிசகிவிட்டதா?
“ம்... நடத்துங்கள்..!”
மறுபடியும் உறுமுகிறான். பிள்ளைகள் அசைந்து கொடுத்தால்தானே.. மூத்தவன் ருமுமாண்வனிடம் தனியே சொல்கிறான். அவனோ காரணம் கேட்கிறான். இரண்டாவது புத்திரன் கணேசனிடம் திரும்பி, “நீயே உன் கையால் முடித்துவிடு” என்கிறான். “ஏன் தாங்கள் கொன்றால் தங்களின் தவ வலிமை குறைந்துவிடுமா?” என்று கணேசன் பேசுகிறான். மூன்றாவது பிள்ளை விஸ்வாவசு, “உங்கள் தாய் கௌசிகையை யாராவது கொல்லச் சொல்லி உங்களிடம் உத்தரவிட்டால் கீழ்ப்படிவீர்களா?” என்று கேட்கிறான்.
ஜமதக்னிக்குக் கோபம் தாறுமாறாய் தலைக்கேறியது.
“முனிவர்களின் முதலானவன் என்று சொல்லப்படுகிற விஸ்வாமித்திரனே என்னை எதிர்த்துப் பேச யோசிப்பான். நீங்கள்.. மூடர்களே வேடர்களாய் போங்கள்..” என்று எட்டு கட்டையில் சபித்தான்.
ரேணுகாவுக்குப் பெற்ற மனம் துடிக்கிறது. 'தனது தாமத தவறுக்குப் பலி பிள்ளைகளா..?' என்று மனது கிடந்து அடித்தாலும் அவளால் ஆகக்கூடியது ஒன்றுமில்லை.
பிள்ளைகள் மூவர் கையிலும் இருந்த திருதண்டம் வில்லாகிறது. எங்கிருந்தோ அம்பறாத் துணியும், அம்பும் முதுகில் முளைத்தது. வேத உபன்யாசத்தில் ஈடுபட்டிருந்த அந்தணப் பிள்ளைகள் வேடர்களாய் வெளியேறினர்.
கனல் கக்கும் விழிகளால் ரேணுகாவை அற்பப் புழுவைப் போல் நோக்குகிறான் ஜமதக்னி. அந்தப் பார்வையில் அவளை எரித்துவிடும் உத்தேசம் இருக்கிறது. அவள் பற்றிக் கொள்ளவுமில்லை. எரியவுமில்லை. மௌனமாய் பொழுது நகர்கிறது.
வேங்கையின் உயிர்கொய்த கோடாரியில் ரத்தம் இன்னும் சொட்டிக் கொண்டிருக்க ஆஸ்ரமத்துக்குள் நுழைகிறான் – இளைய மகன் பரசுராமன்.
சதா மந்திர உச்சாடணம் கேட்கும் ஆஸ்ரமத்தில் மயான அமைதி உறைந்திருப்பதை அவன் கவனிக்கத் தவறவில்லை. ரௌத்ரமாய் நிற்கும் தந்தையையும், சோகக் குவியலாய் எதிரில் நிற்கும் தாயையும் மாறி மாறி பார்க்கிறான். அதற்குள் தாயைக் கொல்லும்படி உத்தரவிடுகிறான் ஜமதக்னி
முனிவன்.
வேட்டையில் விருப்பமுள்ள பரசுராமன் தர்மசங்கடமாய் நெளிகிறான். மனதின் ஏதோ ஒரு மூலையில் அவன் எப்போதோ கற்ற 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்ற வரிகள் – இவன் தர்ம சங்கடத்தை தீர்ப்பதற்கென்றே பிறந்து உலாத்திய வரிகள் – நல்ல வேளை ஞாபகத்துக்கு வந்தது. கையிலிருந்த கோடாரியால் தாயின் கழுத்தைக் குறிவைத்தான். தலைவேறு உடல் வேறாய் தரையில் கிடக்கிறது. ரேணுகாவின் பிணம் .
ஜமதக்னி முகத்தில் பரிபூரணமாய் அமைதி வந்து படிகிறது. மகன் பரசுராமனைப் பக்கத்தில் அழைத்து அணைத்துக் கொள்கிறான். “நீயே என் வாரிசு. நீயே என் வாரிசு!” என்கிறான். பரசுராமனுக்கு கையிலிருக்கும் மழு கனக்கிறது.
ஜமதக்னியின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட பரசுராமன் – மழுவை அப்பால் எறிந்துவிட்டு தாயிடம் ஓடுகிறான். தனியே கிடந்த தலையையும் உடலையும் அள்ளி மடிமேல் போட்டுக் கொண்டு கதறுகிறான். “பரசுராமா, இப்படி வா..” ஜமதக்னி முனிவன்தான் அழைக்கிறான் மீண்டும் – தந்தை சொல்மிக்க மந்திரமில்லை. வந்தான்.
“மகனே, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். அழுகை கோழைகளின் ஆயுதம். முதலில் அழுவதை நிறுத்து. ஒப்பற்ற வீரபுருஷன் ஒருநாளும் அழுவதில்லை. நீ உன் மனசுக்குள் தாயைக் கொன்று விட்டதாய் நினைக்கிறாய். இன்னும் துயரம் வாட்டுவது அதனால்தான். கணவனுக்குத் துரோகம் இளைத்தவளை – உயிரினும் மேலான கற்பைத் தொலைத்தவளைத் தண்டித்ததாய் நினைத்துக்கொள்.”
“என் தாய் துரோகம் செய்தாளா..?”
“ஆமாம்.. கந்தர்வத் தலைவன் சித்ரரதனை மனதுக்குள் ஆராதித்தாள்.”
“பிற ஆடவனை நினைத்தாலே கற்பு அழிந்து விடுகிறதா?”
“உம்!” கொட்டினாள். ஜமதக்னி. இந்தப் பேச்சை இதற்க மேலும் வளர்க்க விரும்பாத அவன், “என்னை சந்தோஷப்படுத்திய உனக்கு ஏதேனும் பரிசு தர விரும்புகிறேன். கேள் மகனே.. என்ன வேண்டுமானாலும் கேள்.. எத்தனை வரம் வேண்டுமானாலும் கேள்..”
“தந்தையே எனக்கு மூன்று வரங்கள் வேண்டும்!”
“நீ என்ன கேட்கப் போகிறாய் என்பது நான் அறியாததல்ல பரசுராமா. உன் தந்தை ஜமதக்னி கொடுத்த வாக்கை மீறி அறியாதவன். கேள்..!”
“என் தாய் உயிரோடு வேண்டும்!”
“தந்தேன்..!” என்றான்.
ஜமதக்னி சொல்லி வாய் மூடவில்லை. தலை நகர்ந்து வந்து கழுத்தோடு பொருந்துகிறது. கையும், காலும் விலுக்கென ஒரு முறை துடித்தது. மூக்கு விடைத்துச் சுருங்குகிறது. ஆழ்ந்த தூக்கம் கலைந்தவள் போல் எழுந்து நின்றாள். கழுத்திலே வெட்டுக்காயம் கூட இல்லை.
முதல் வரத்தால் மனதைக் கொன்று கொண்டிருந்த துயரம் வடிந்துவிட்ட நிலையில், “வேடர்களாய் சபிக்கப்பட்ட என் தமையன்கள் மறுபடியும் வேதவித்துக்களாய் ஆகவேண்டும்.“ என இரண்டாவது வரம் கேட்டான்.
“ஆகினர்..!” என்றார்.
“தாயைக் கொன்ற பாவம் என்னைத் துரத்தக் கூடாது. இது நான் வேண்டும் மூன்றாவது வரம்.”
“சிரஞ்சீவியாக வாழ்வாய்.”
வரம் கேட்டு முடித்த பரசுராமன் தாயின் முகத்தைப் பார்க்க இயலாதவனாய் தலை குனிந்து நிற்கிறான். சாபம் நீங்கிய மாண்வன், கணேசன், விஸ்வாவசு மூவரும் ஆஸ்ரமம்’ திரும்புகின்றனர்.
ஐமதக்னி ரேணுகாவின் முகத்தைப் பார்க்கிறான். அந்தப் பார்வையில் கனிவு சொட்டுகிறது.. “பிள்ளைகள் பசியோடு வாடுகிறார்கள் பார். முதலில் அவர்களின் பசியைப் போக்கு..” என்கிறான்.
கோயில் மாடுபோல் தலையாட்டி ரேணுகா நடக்கிறாள் . பிள்ளைகள் பின் தொடர… பரசுராமன் மட்டும் அங்கேயே நிற்கிறான்.
“நீயும்சென்று பசியாறு பரசுராமா!” என்கிறான் ஜமதக்னி.
“அதற்கு முன் ஒரு சந்தேகம் தந்தையே. தலையை வெட்டி ஒட்டி விட்டால் போன கற்பு பழையபடி திரும்பிவிடுமோ?”
சொடிரெனத் திரும்பி பரசுராமன் முகத்தை – அப்பாவிக்களை சொட்டும் அந்த முகத்தை – பார்த்த ஜமதக்னி முனிவன் பதில் சொல்ல முடியாதவனாய் நின்றான். எதுவும் பேசமால் கங்கையை நோக்கி நடக்கிறான்.
எதற்கு முழுக்குப்போட?
Post a Comment