.

நீண்ட காலத்திற்கு முன்னர் உலகத்தில் பறவைகள் இருந்தன. ஆனால்,அவை எல்லாம் ஒரே மாதிரி சாம்பல் நிற வண்ணத்தில் இருந்தன. ஒரு வசந்த காலத்தில், பறவைகளின் அரசன் பறவைகளுக்கு அழைப்பு விடுத்ததை அறிந்து எல்லாப் பறவைகளும் அரசன் முன்னால் கூடின. கூட்டமாக கூடி வந்த பறவைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஒலி எழுப்பி மகிழ்ந்தன. சில பறவைகள் சில மீட்டர் வரை பறந்தன. சில தத்தி தத்தி நடந்தன. சில நொண்டிச் செல்வது போல் நகர்ந்தன. அவைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தன.

அரச பறவை, ஓர் இறக்கையை வானத்தை நோக்கி திருப்பியது. வானத்தில் ஒரு பெரிய வானவில் தோன்றியது.உடனே எல்லா பறவைகளும் வானத்திலுள்ள வண்ணங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டன. ஊதா, கருநீலம், பச்சை,மஞ்சள், காவி, சிவப்பு என்று அவைகள் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தன. ஓர் அழகான பெரிய வானவில்லை அவர்கள் அதுவரை பார்த்ததே இல்லை. உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் ஒரு நிறத்தை கொடுக்கப் போகிறேன். உங்களுக்கு எந்த நிறம் பிடிக்குமோ அதை நீங்கள் வானவில்லில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியது பறவைகளின் அரசன். அடுத்த வினாடி ஒவ்வொரு பறவையும் தனக்குப் பிடித்தமான நிறத்தைப் பறிக்க முயன்றன.

ஒரு கிளி முன்னால் வந்தது. எனக்கு பச்சை வர்ணமே பிடிக்கும் என்று சொல்லி, அது பச்சை நிறத்தை பெற்றுக் கொண்டது. அதை பச்சைக்கிளி என்று அழைத்தனர். ஒரு குருவி ஓடி வந்தது.அது மஞ்சள் நிறத்தை அணிந்து கொண்டது. அதை எல்லோரும் மஞ்சள் குருவி என்று அழைத்தனர். எல்லோரையும் தள்ளிவிட்டபடி ஒரு குருவி முன்னால் வந்து சிவப்பு நிறத்தை பெற்றுக்கொண்டது. அதை எல்லோரும் செங்குருவி என்று கூப்பிட்டனர். இப்படி எல்லா பறவைகளும் தாங்கள் விரும்பிய நிறத்தை பெற்றுக்கொண்டன. ஆனால், ஒரே ஒரு சின்னஞ்சிறிய குருவி மட்டும் தனக்கு நிறம் கிட்டாமல் நின்றுகொண்டிருந்தது.

அரச பறவை அந்தக் குருவியைப் பார்த்தது, நீ ஏன் மற்றவர்களைப் போல்
வர்ணம் கேட்கவில்லை? என்று கேட்டது. வரிசையில் எனது முறை வரும் என்று நான் காத்திருந்தேன் என்று சொன்னது அந்த சின்னஞ்சிறு பறவை.எல்லா நிறங்களும் முடிந்துவிட்டதே! என்ன செய்வது ? என்றது அரச பறவை.
அதைக் கேட்டதும் அந்த சின்னஞ்சிறு பறவை அழுதுகொண்டே, நான் எப் போதும் இந்த சாம்பல் நிறத்தில் தான் இருக்க வேண்டுமா? என்றது. அரச பறவை சொன்னது, நீ மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து மிகவும் பொறுமையை கடைப்பிடிக்கிறாய். இப்படிப்பட்ட நீ சாம்பல் வர்ணத்தில் இருத்தல் கூடாது என்று சொல்லி எல்லா பறவைகளையும்
திருப்பி அழைத்தது. ஒவ்வொரு பறவையிடம் இருந்தும் அது கொஞ்சம்
வர்ணத்தை எடுத்து, அந்த சிறிய பறவைக்கு கொடுத்தது. அதனால் அந்த
சின்னஞ்சிறிய பறவை, இப்போது மிகவும் அழகாய் காணப்பட்டது. அதைப்
பார்த்து மகிழ்ந்த பறவையின் அரசன்,அதற்கு பஞ்சவர்ண கிளி என பெயர்
வைத்தான்.

நீதி :பொறுமையாக இருந்தால் நமக்குகிடைப்பது கிடைக்கும்.

Post a Comment

Previous Post Next Post