.

இதன் ஆசிரியர் ஓர் அரசியல் கைதி. சிறைச்சாலை ஆணையாளரின் நேரடி பாதுகாப்பில் நூலாசிரியர் சிவஆரூரன் விழா மேடையில் வந்து சாகித்திய விருதினைப் பெற்றுச் சென்றார். சிறையில் இருந்தவாறே சிறுகதைத் தொகுப்பு, நாவல்கள் என ஏழு நூல்களை எழுதியுள்ளார். Innocent Victims என்ற ஆங்கில நாவலும் இதில் அடங்கும். அவரது நான்கு நாவல்கள் சாகித்திய விருது பெற்றிருக்கின்றன.

'அழுகிறவன் தான் எங்களிட்ட வருவான். அங்கை நோகுது. இங்கை வலிக்குது எண்டு குழறுவான். நோய் மாறினவுடன் 'டொக்டர் இப்ப சுகம்' எண்டு சிரிச்சுக்கொண்டு வீட்ட போவா.... இது டாக்டர் குணசீலனின் அனுபவ ரீதியிலான கூற்று.

இந்த வரிகள் ஒரு வைத்தியசாலைக்குச் செல்பவர்களின் நிலைமையை இரத்தினச் சுருக்கமாக வெளிப்படுத்துகின்றது. 'அழுகுரல்கள் ஆதுரசா லையின் சொத்து' என்றும் டாக்டர் குணசீலன் கூறுகிறார். இந்தச் சொற்கள் ஒரு வைத்தியசாலையின் இதயத்தைச் சுட்டுகின்றன.

ஆதுரசாலை என்பது வைத்தியசாலை - மருத்துவமனை. சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்து இலக்கியம் படைக்கின்ற நாவலாசிரியர் சிவ ஆரூரன் இதனை எழுதியுள்ளார்.

நோய்த்தாக்கத்தினால் பரிதவித்து வருபவர்களுக்கும், நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியவர்களின் நிலையினால் மனம் கலங்கி துயருற்று வருபவர்களுக்கும் ஆதரவளிக்கும் ஒரு நிலையமாக மருத்துவமனைகள் திகழ்கின்றன. ஆதரவு மட்டுமல்லாமல் ஆறுதலையும் தேறுதலையும் ஆதுரசாலை வழங்குகின்றது. ஆதுரம் என்றால் ஆறுதல்,தேறுதல். ஆதுரன் என்பது நோயாளி என தமிழ் விக்சனரி கூறுகின்றது. நோயாளிகளுக்கான நிலையமே ஆதுரசாலை – வைத்தியசாலை என பொருளாகின்றது.

போருக்குப் பின்னரான பற்றாக்குறைகளும் வளமின்மையும் நெருக்கடிகளும் நிறைந்த கடினமான ஒரு சூழலில் ஒரு வைத்தியசாலை எவ்வாறு வளர்த்தெடுக்கப்படுகின்றது என்பதை இந்த நாவல் விபரிக்கின்றது. போர் தின்ற கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாயப் பிரதேசமாகிய பளை என்ற கிராமிய நகரில் அமைந்துள்ள வைத்தியசாலையே இந்த நாவலின் கதைக்களம்.


இந்த நாவலின் கதாநாயகன் குணசீலன் தொடக்கம் கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட கதை மாந்தர்கள் பலரும் சமூகத்தில் வாழ்பவர்கள். அவர்களைச் சுற்றி பின்னிப் பிணைத்து உயிர்த்துடிப்புடன் இந்த நாவல் படைக்கப்பட்டிருக்கின்றது. இரத்தமும் சதையும் வலியும் வேதனைகளும், பரிதவிப்பும் பாசப் பிணைப்பும் தோய்ந்த ஆதுரசாலையின் அகப்புற நிலைமைகள், கதாபாத்திரங்களின் வாழ்வில் பின்னிப் படர்ந்திருக்கின்றன. அரச பணியின் நிர்வாகச் சுழலில் வாழ்வியல் சிக்கல்கள் மிக நுட்பமாக மென்னுணர்வுகளில் இழையோடியி ருக்கின்றன.

பற்றாக்குறைகளையும் பணி தொடர்பிலான பிரச்சினைகளையும் கதாநாயகன் குணசீலன் கையாள்கின்ற நேர்த்தி ஒரு வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்கு எந்த அளவுக்கு அவசியம் என்பதை நாவலின் பல்வேறு சம்பவங்களும் வலியுறுத்துகின்றன.

பருத்தித்துறையில் சகோதரனுடைய வீட்டில் இருந்து கோப்பாய்க்குச் செல்லும் குணசீலனும் உமையாளும் வல்லைவெளி கடந்து ஆவரங்காலை அடைகின்றனர். ஒரு மோட்டார் சைக்கிளும் பிக்கப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் படுகாயமடைந்திருக்கிறான். வாயிலும் மூக்கிலும் இரத்தம் பெருக்கெடுக்க வீதியோரத்தில் விழுந்து கிடக்கிறான். முதலுதவி முயற்சி நடைபெறுகின்றது.

தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திய குணசீலன் குழுமியிருந்த கூட்டத்தை விலக்கிச் சென்று காயமடைந்த இளைஞனுக்கு முதலுதவி வைத்தியம் செய்கிறார். அம்புலன்ஸ் வந்து காயமடைந்தவனை ஏற்றிச் செல்கிறது. அவருடைய செயல்களைக் கூர்ந்து அவதானித்து, சிந்தனை வசப்பட்டிருந்த உமையாள் 'அக்ஸிடன்ற்றைப்பற்றி யோசிக்கிறன். எங்களுக்கு பள்ளிக் கூடத்துக்கு வெளியில ஃபிறீதான்.உங்களுக்கு எல்லா இடமும் டியூட்டிதான்' என வியப்பு கலந்த மகிழ்வுடன் கூறுகின்றாள்.

அவளுக்குப் பதிலளிக்கும் வகையில் எந்த இடத்தில் எமஜன்ஸி என்றாலும் ஒரு வைத்தியர் சேவை செய்ய வேண்டும் என்பது விதி. அவ்வாறு செய்யாவிட்டால் அதுபற்றி மெடிக்கல் கவுன்சிலில் முறையிட நேர்ந்தால் அவரது லைஸன்ஸைப் பறித்துவிடுவார்கள். ஆனாலும் சட்டத்துக்குப் பயப்படத் தேவையில்லை. மனசாட்சிக்குப் பயந்தால் சரி. மனசாட்சிக்குக் கீழ்தான் சட்டம் உண்மையில் இருக்கின்றது என டாக்டர் குணசீலன் விளக்கமளிக்கின்றார்.

ஆனாலும் வைத்தியர் என்ற ரீதியில் மிக முக்கியமான குடும்ப நிலைமைகளின்போதும் மருத்துவமனையின் கடமைகளே மிக முக்கியம் என மூழ்கிக் கிடக்கின்ற போது, முரண்பாடுகளும் மனம் கஷ்டமுறுகின்ற உணர்வு களையும் சிரமமான நிலையில் குணசீலன் எதிர்கொள்கின்றார். ஒரு பக்கம் நாள்பட்டு நாற்றம் வீசும் புண்களுடனும், வலிதாங்காமல் துடிக்க சிக்கலோடு வந்திருக்கும் பிரசவத்தாய்மாருடனும், சாவை அண்மித்த நிலையிலான இதயநோயாளியுடனும் மறுபக்கம் வைத்தியசாலை நிர்வாகச் செயற்பாடுகள், அதன் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் என்பவற்றுடன் ஓயாத நிலையில் குணசீலன் ஊடாடுகிறார். அந்த ஊடாட்டம் அவரது உணர்வுகளை மரத்துப் போகச் செய்திருக்கின்றதோ என்று எண்ணும் நிலையில் குணசீலன் காணப்படுகிறார். எனினும் இயல்பூக்கம் கொண்ட மென்னுணர்வுகள் அவரை ஆட்கொள்கின்றன. கவியுள்ளம் கொண்ட காதலராகவும் அவர் திகழ்கின்றார்.

பளை வைத்தியசாலையின் வளாகத்தில் பால் போன்ற நிலவொளி வீசும் ஓர் இராப்பொழுது. விழுது விட்டுப் பரந்து வளர்ந்திருக்கின்ற ஆலமரத்தின் நிலவொளி கீற்றுக்களின் கீழ் குணசீலனும் உமையாளும் இன்புற்றி ருக்கின்றனர். உமையாளின் கூந்தலையும் தோளையும் அவர் முகர்ந்து இரசிக்கிறார். அவள் சிரிக்கின்றாள். ஏன் என்று அவர் கேட்கிறார். உமையாளின் மடியில் நான் நோயாளி என்று கவிதையில் காதல் புரிந்த வேளை தொலைபேசி அழைப்பு வருகின்றது. டெலிவரி விடுதியில் ஏதோ சிக்கலாம். பணி செய்ய அவர் விரைகிறார்.

பின்தங்கிய நிலையில் இருந்த பளை வைத்தியசாலை போரினால் இடம்பெயர்ந்த மக்களைப் போல டாக்டர் குணசீலனின் பொறுப்பில் புனர்வாழ்வு பெறுகின்றது. சமூகத்துடன் இணைந்ததாக புதுப்பொலிவு பெறுகின்றது.

ஆற்றொழுக்கு போன்ற கதைப் பின்னல். ஆழமான சிறிய வசனங்கள். படிப்போரைக் கவர்ந்திருக்கும் எழுத்தாளுமை. இவையே இந்த நாவலின் வெற்றிக்குக் காரணம். சொல்லாத பல செய்திகளை இந்த நாவல் சொல்லிச் செல்கின்றது.

பதினான்கு வருடங்களாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் வாடுகின்ற நூலாசிரியர் சிவ ஆரூரனின் அற்புதப் படைப்பாக இந்த நூல் யாழ்ப்பாணம் ஜுவநதி பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது.


@பி.மாணிக்கவாசகம்


2 Comments

  1. மிகவு‌ம் அருமையான பதிவு.. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்.. நன்றிகள் 📙 🙏 🇨🇭 வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post