.

அடர்ந்த காட்டில்,சிங்கம் ஒன்று உறங்கிக் கொண்டிருந்தது. அதன் மீது ஏதோ ஊர்ந்து விளையாடுவதை உணர்ந்து, 'சட்'டென விழித்துப் பார்த்தது.

அதன் மீது விளையாடிக் கொண்டிருந்த சுண்டெலி, வேகமாக தப்பி ஓடியது. கடும் கோபமடைந்த சிங்கம்,அதை பிடிக்க துரத்திச் சென்றது.

இயலாமல் போகவே, ஏமாற்றமடைந்து, கவலையாய் மீண்டும் படுத்தது.

இரண்டு நாட்கள் கடந்தன

வளைக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தது எலி. தூங்கிய சிங்கத்தின் மீது ஏறி, விளையாட ஆவலாய் வந்தது. கவனித்த சிங்கம் 'உன்னை என்ன செய்கிறேன் பார்...' என துரத்தியது. அன்றும் சிக்காமல், வேகமாய் வளைக்குள் புகுந்தது எலி.

இதற்கு முடிவு கட்ட எண்ணியது சிங்கம்.காட்டிலிருந்த பூனைகளை வரவழைத்தது, நடந்ததை எடுத்துக் கூறி, 'அந்த எலியை பிடித்து தின்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்...' என அறிவித்தது.

எவ்வளவு முயற்சித்தும், அந்த எலியை துரத்தி பிடிக்க இயலவில்லை.சாதாரண எலியை பிடிக்க இயலாமல் திணறிய திறமையற்ற பூனைகளைக் கடிந்து துரத்தியது சிங்கம்.இரண்டு நாட்களாய் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தது ஒரு காகம்.

மெதுவாக சிங்கத்தின் அருகே சென்றது.

'அந்த எலியைப் பிடிக்கும் திறமை பக்கத்துக் காட்டில் வாழும் பூனைக்கு மட்டுமே இருக்கிறது. அவற்றில் ஒன்றை மட்டும் உடனே அழைத்து வருகிறேன்...' என்றது.

'கூட்டமாக சென்ற பூனைகளாலேயே அதைப் பிடிக்க இயலவில்லை, இந்நிலையில், பக்கத்து காட்டில் வாழும் பூனை...அதுவும், தனியாக பிடிக்க இயலுமா..' என சந்தேகம் எழுப்பியது.

பின், 'பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தால் சரி' என எண்ணி, காகத்தின் யோசனைக்கு சம்மதம் தெரிவித்தது சிங்கம்.

அடுத்த நாள்

பக்கத்துக் காட்டிலிருந்து பூனையை அழைத்து வந்தது காகம், எதிர்பார்த்தது போல, வளையில் இருந்து வெளியே வந்த எலி, சிங்கத்தின் மீதேறி `விளையாட தயாரானது.


காத்திருந்த பூனை, 'சட்'டென தாவி,'லபக்' என எலியை கவ்வி தின்றது.

இதை சற்றும் எதிர்பாராத சிங்கம்,மகிழ்ச்சியில் திளைத்தது.

அறிவித்தது போல, சன்மானத்தை அள்ளி வழங்கியது.

காகத்தை அழைத்து நன்றி கூறி, 'நம் காட்டில் வாழும் பூனைகளுக்கு இல்லாத திறமையும், தைரியமும், பக்கத்துக் காட்டில் வாழும் பூனைக்கு மட்டும் எப்படி வந்தது...' என வினவியது.

சிரித்த காகம், 'திறமையோ, பயிற்சியோ ஏதுமில்லை... அப் பூனை சில நாட்களாய் உணவின்றி தவித்து வந்தது. அதீத பசியிலிருந்ததால்,தின்று விட்டது...' என்றது.


நீதி-எந்த வேலையையும்,வெற்றிகரமாக முடிக்க, முதலில் அதைப் பற்றிய கவனம் இருந்தால் போதும்!



Post a Comment

Previous Post Next Post