உலகில் மனிதர்களுக்கு மகிழ்ச்சி தருவன எல்லாவற்றை விடவும் அதி உயர்ந்த மகிழ்ச்சியைத் தரும் ஒன்றாக திருமணம் உள்ளதாக அமெரிக்க கல்விமானான வில்லியம் லையொன் பெல்ப்ஸ் சுமார் ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் கருத்தொன்றை முன்வைத்துச் சென்றிருந்தார்.
ஆனால் நடைமுறையில் திருமண வாழ்வு என்பது அப்படியில்லை. இலக்கியங்களிலும் கதைகளிலும் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் சிருஷ்டிக்கப்பட்டு பருவ வயதினரின் மனதில் பரவசத்தை ஏற்படுத்திய மனமொத்த தம்பதிகளைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களின் வாழ்வை யொத்த பரவசம் தரும் வாழ்வாக அது இருப்பதில்லை. இது காதல் திரும ணங்கள் மற்றும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் ஆகிய இரண்டுக்குமே பொருந்தும்.
அதீத கற்பனையுடனும் எதிர்பார்ப்புகளுடனும் திருமண பந்தத்தில் இணையும் தம்பதிகள் பின்னர் தமது வாழ்க்கைத் துணை அதற்கு மாறாக இருக்கும் போது அந்த வாழ்வு கசந்து கவலையில் மூழ்குவதும் திருமண பந்தத்திலிருந்து விடுதலை பெறத் தலைப்படுவதும் வழமையாகவுள்ளது.
10 பொருத்தம் பார்த்து, 9 கோள்களின் சஞ்சாரம் கணித்து. பெருமளவு பணத்தை வாரி இறைத்து உற்றார், உறவினர்கள் வாழ்த்த. பஞ்சபூதங்கள் சாட்சியாக வேதங்கள் ஓத கெட்டி மேளம் முழங்க இரு மனங்கள் இரண்டறக் கலக்கும் உன்னத பந்தமாக திருமணம் உள்ளது.
இங்கு சாஸ்திரங்களால் காலம் காலமாக கணிக்கப்பட்ட திருமணப் பொருத்தங்களுக்கு அப்பால் திருமண பந்தத்தில் இணையும் தம்பதிகளின் உடலியல் மற்றும் உளவியல் பொருத்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது.
பணத்திற்காக கல்வி நிலையில் அந்தஸ்து மற்றும் இரு துருவங்களாக உள்ளவர்களை திருமணத்தால் கட்டிப் போடுவது பின்னர் அந்த உறவு விரிசல் அடைவதற்கே வழிவகுக்கும். எனினும் இரு மனம் கலந்து காதல் வயப்பட்டு திருமண பந்தத்தில் இணைபவர்களுக்கு இந்த அந்தஸ்து வேறுபாடு தொடர்பான நியதி பொருந்தாது இருக்கலாம். எனினும் மேற்படி வேறுபாடு திருமண பந்தத்தில் இணையும் ஆண் மற்றும் பெண்ணினது குடும்பத்தவர்கள் தரப்பிலிருந்து பிரச்சினைகள் தோன்றி திருமண உறவைப் பாதிக்கும் வாய்ப்புள்ளது.ஆனால் திருமண பந்தத்தில் இணையும் தம்பதிகள் தமது பந்தம் தொடர்பில் உறுதியுடன் இருக்கும் பட்சத்தில் எந்தப் பிரச்சினையும் சூரியனைக் கண்ட பனி போன்று மறைந்து விடும் என்பதை மறுப்பதற்கில்லை.
மாறாக ஒருவரதும் அவரது குடும்பத்தினரதும் சமூக அந்தஸ்து, பொருளாதார சுபீட்ச நிலை, வெளித் தோற்றம் என்பவற்றை மட்டுமே பார்த்து மன ரீதியான பொருத்தங்களை அலட்சியம் செய்து நிச்சயிக்கப்படும் திருமணங்கள் விவாகரத்தில் அல்லது பிரிவினையில் சென்று முடிவடையும் வாய்ப்பு உள்ளது.
உலக சனத்தொகை மதிப்பீட்டுக் கணிப்பீட்டின் பிரகாரம் உலகில் விவாகரத்துக் குறைந்த நாடுகள் வரிசையில் இலங்கை இலங்கையில் முதலிடத்தில் உள்ளது.2017 ஆம் ஆண்டுக்கும் 2020 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் வருடமொன்றுக்கு 1,000 பேருக்கு 0.15 பேர் என்ற வீதத்திலேயே விவாகரத்துகள் இடம்பெற்றுள்ளதாக புள்ளிவிபரத்தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் உலகில் விவாகரத்துக் குறைந்த நாடுகள் வரிசையில் முதலிடத்தில் இருப்பது என்பதற்காக இலங்கை இதில் பெருமை கொள்ள முடியாத நிலைமை நிலவுகின்றமை துர்ப்பாக்கியமாகும்.
இன்றைய இயந்திரமயமான உலகில் மேற்குலக கலாசாரங்களின் தாக்கம் காரணமாக குடும்ப வேறுபாடுகளால் விவாகரத்துப் பெறாமலே பிரிந்து வாழும் ஜோடிகள் இங்கு ஏராளமாக உள்ளனர். அதேசமயம் விவாகரத்துப் பெறாமல் வேறு திருமணம் செய்து வாழ்பவர்களும் நம் மத்தியில் இல்லாமல் இல்லை.
பல குடும்பங்களில் குழந்தைகள் மற்றும் குடும்ப கௌரவம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு மனம் ஒப்பாத நிலையிலும் கணவனும் மனைவியும் போலியான வாழ்க்கை வாழ்வதையும் காண முடிகிறது.
இலங்கையில் விவாகரத்துக் குறைவாக உள்ளமைக்கு உலகில் விவாகரத்துத் தொடர்பான கடுமையான சட்டவிதிகளை பின்பற்றும் நாடுகளில் ஒன்றாக இலங்கைத் விளங்குகின்றமையும் ஒரு காரணமாக உள்ளது எனலாம்.
அத்துடன் இலங்கையில் பல வருட கால இழுத்தடிப்பைக் கொண்டதாக விவாகரத்துச் செயற்கிரமம் இருப்பது,விவகாரத்துத் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்கு செலவிட வேண்டிய அதிகளவு பணம், விவாகரத்துப் பெறுவதால் ஏற்படும் தனிமை நிலையால் சமூக மட்டத்தில் எதிர்கொள்ளக் கூடிய அவமதிப்புகள், அச்சுறுத்தல்கள் மற்றும் உளவியல் ரீதியான துன்புறுத்தல்கள், குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான அச்சம், பொருளா தார ரீதியில் பிறரிடம் தங்கி வாழும் நிலையிலிருந்து விடுபட முடியாத அவலம் என்பன காரணமாக விவாகரத்துப் பெறுவதற்கு பின்வாங்கும் நிலைமை காணப்படுகிறது.
இலங்கையில் வழமையில் நடைமுறையிலுள்ள சட்டத்தின் பிரகாரம் கணவன் அல்லது மனைவி இரு வருடங்கள் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் பிரிந்து வாழ்ந்த பின்னர் அல்லது சுயமாக 7 வருடங்கள் பிரிந்து வாழ்ந்த பின்னர் விவாகரத்துக் கோரி வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.
ஆனால் சட்ட அமுலாக்க நடைமுறை அனைத்துச் சமயங்களிலும் பின்பற்றப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.விவாகரத்துக் கோரி வழக்குத் தாக்கல் செய்பவர்கள் தமது வாழ்க்கைத் துணை மீதான தவறை நிரூபிக்கும் பட்சத்தில் சட்டத்தின் சில ஏற்பாடுகளின் கீழ் விவாகரத்து முன்கூட்டியே வழங்கப்படுவது வழமையாகவுள்ளது.
அதேசமயம் இலங்கையில் முஸ்லிம் திருமணச் சட்டமானது பொது திருமணச் சட்டத்திலிருந்து வேறுபட்டு நெகிழ்ச்சிப் போக்கானதாக உள்ளது. விவாகரத்துக் கோரும் தம்பதியினர் தம்மிடையே மீள நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு வழங்கப்பட்ட 30 நாட்கள் கால அவகாசத்தைப் பயன்படுத்தி 3 தடவைகள் ஒருவருக்கொருவர் தலாக் கூறி விவாகரத்துப் பெற்றுக் கொள்ள முடியும்.
இலங்கையில் கணவனோ அன்றி மனைவியோ தனது வாழ்க்கைத் துணையிடமிருந்து விவாகரத்துக் கோருவதற்கு அவரின் திருமணத்திற்கு அப்பாலான உறவு, காரணமின்றி கைவிட்டுச் செல்லல், பாலியல் ரீதியான குறைபாடுகள் என்பன அடிப்படைக் காரணங்களாக உள்ளன.
அத்துடன் போதைப்பொருள் பாவனை,சூதாட்டம், பொருளாதாரப் பிரச்சினை, வேலையில் மூழ்கி குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடத் தவறுகின்றமை, எப்போதும் எதிலும் திருப்பதியடையாத மனப்போக்கு, சினம், மற்றவர்களின் வாழ்க்கைத் துணையுடன் தனது வாழ்க்கைத் துணையை ஒப்பீடு செய்து அதிருப்தி கொள்வது, இயல்பான வன்முறைக் குணம், அன்பு காட்டுவதை கௌரவக் குறைவாகக் கருதும் ஆணாதிக்க சிந்தனை, பெண்ணிலை வாதம் பேசி கணவரின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுக்காதிருப்பது, இரு தரப்பு உறவினர்களாலும் ஏற்படும் நெருக்கடி மற்றும் மன உளைச்சல் என்பனவும் விவாகரத்துக் காரணமாகின்றன.
உலகளாவிய ரீதியில் எடுத்துக் கொண்டால் விவாகரத்துக் குறைந்த நாடுகள் வரிசையில் இலங்கைக்கு அடுத்ததாக கௌதமாலா மற்றும் வியட்நாம் ஆகிய வளர்முக நாடுகள் உள்ளன.
அதே சமயம் 2020 ஆம் மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப் பெறுபேறுகளின் பிரகாரம் விவாகரத்து அதிகளவில் இடம்பெறும் நாடுகள் வரிசையில் மாலைதீவு, கஸகஸ்தான்,ரஷ்யா, பெல்ஜியம் மற்றும் பெலாரஸ்ஆகிய நாடுகள் உள்ளன.
மேற்குலக நாடுகளைப் பொறுத்தவரை திருமணம் என்ற உன்னத பந்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காது திருமணம் செய்யாது இணைந்து வாழும் கலாசாரம் காணப்படுகின்றமை காரணமாக குறிப்பிட்ட காலம் இணைந்து வாழ்ந்த பின்னர் ஜோடியை மாற்றிக் கொள்வது சாதாரணமாக காணப்படுகிறது. இதன் காரணமாக விவாகரத்துப் புள்ளிவிபரங்களில் அத்தகையவர்களை உள்ளடக்கப்படாத நிலை நிலவுகிறது.
திருமணம் என்பது வாழ்வின் உயிர் நாடிகளிலொன்றாக விளங்கும் உன்னத பந்தமாகும். ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வது இந்த வாழ்வை காலாகாலத்திற்கும் அர்த்தமுள்ளதாக மிளிரச் செய்யும்.
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். மனப் பொருத்த மற்றவர்களை திருமண பந்தத்தில் இணைப்பது அந்த வாழ்க்கையையே நரகமாக்கி விடும் என்பதே பலரினதும் அனுபவ உண்மை.
வாழ்க்கைத் துணையில் ஒருவரால் செய்யப்படும் தவறு மற்றும் முறைகேடுகள் திருமண வாழ்வையே அஸ்தமித்துப் போகச் செய்யும். இதன்போது சில சமயங்களில் விவாகரத்து தவிர்க்க முடியாததாகிவிடுவதும் உண்மை. மனித வாழ்வு குறுகியது. எதுவித இலக்குமற்ற போராட்டமே வாழ்க்கையாக இருக்க முடியாது என்ற நிலையில் விவாகரத்து ஒரு தீர்வாக அமையலாம்.
எனினும் விவாகரத்து என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். இயன்ற வரை அந்த இருண்ட பக்கத்தை புரட்டாது இருப்பதே சிறந்தது.
நீங்கள் இணைந்து வாழ்வதற்காக ஒருவரை திருமணம் செய்ய வேண்டாம். மாறாக நீங்கள் எவர் இல்லாது வாழ முடியாது என்று நினைக்கிறீர்களோ அவரைத் திருமணம் செய்யுங்கள் என்பது மேற்குலக பொன்மொழியாகும். இது காதல் திருமணங்களுக்கு பெரிதும் பொருந்தும்.
திருமணம் என்பது ஒரு தோட்டத்திற்கு ஒப்பானது. இந்தத் தோட்டத்தில் விதைகள் விதைக்கபட்டவுடன் செடிகளை எதிர்பார்க்க முடியாது.செடிகள் வளர்வதற்கு சில காலம் எடுக்கும். அந்த செடிகள் வளர்வதற்கு மண்ணை நன்கு பண்படுத்த வேண்டும். அது போன்று வெவ்வேறு குடும்பங்களில் வெவ்வேறு சூழ்நிலைகளில் பிறந்து வளர்ந்த ஆணும் பெண்ணும் தம்மிடையேயான நேசத்தை புரிந்து அவர்களது திருமண உறவு வலுப்பெற சில காலம் பொறுத்திருந்தே ஆக வேண்டியுள்ளது.
ஒரு கை தட்டி சத்தம் வராது என்பார்கள்.திருமண வாழ்வு சிறக்க திருமண பந்தத்தில் இணையும் ஆண், பெண் இருவரதும் சமத்துவ பங்களிப்பும் அனுசரணையும் அவசியமாகிறது.
திருமண பந்தத்தில் இணையும் ஜோடிகள் இருவருமே போலியான கற்பனை எதிர்பார்ப்புகளுக்குள் தம்மைச் சிக்க வைத்துக் கொள்ளாது தம்மைக் கரம் பிடித்து தமது வாழ்வு முழுவதும் வரும் வாழ்க்கைத் உறுதுணையாக துணையின் உணர்வுகளுக்கு பரஸ்பரம் மதிப்பளித்து அவர்களின் இயல்பான நிறைகுறைகளை உள்ளது உள்ளபடியே ஏற்று உண்மையான சுயநலமற்ற நேசத்தை மட்டுமே பெறுபேறாகத் தந்து வாழும் பட்சத்தில் அந்தத் திருமண வாழ்வு காலம் காலமாக நீடித்து இறுதி வரை தொடரும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.
Post a Comment