.

ஓரு காட்டை சிங்கராஜா ஆண்டு வந்தது. ஒரு நாள் வேட்டையாடச் சென்ற போது அதன் கால் விரலில் அடிபட்டுவிட்டது. இதை அறிந்த டாக்டர் கரடி ஓடி வந்து, 'உங்களுக்குப் பலமாக அடி பட்டிருக்கிறது. காயம் எளிதில் ஆறாது.அதனால், சிறு அறுவை சிகிச்சை செய்து விரலை எடுக்க வேண்டும்" என்றது.

"சரி" என்று சிங்க ராஜா சம்மதித்தது.சிகிச்சை முடித்து சிங்க ராஜா ஓய்வில் இருந்தது. அப்போது எல்லா மிருகங்களும் வந்து நலம் விசாரித்துவிட்டு, ஆறுதலும் கூறிவிட்டுச் சென்றன.

அப்போது நரி ஒன்று, "ராஜா...நடப்பதெல்லாம் நன்மைக்கே.. கவலைப்படாதீர்கள்" என்றது. இதைக் கேட்ட சிங்க ராஜாவுக்கு கோபம் வந்தது. "என் காலிலுள்ள ஒரு விரலே போய்விட்டது.நீ இப்படிக் கூறுகிறாயே..." என்று கூறி,அந்தக் நரியைப் பிடித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

"ஒவ்வொரு காரியமும் நமது நன்மைக்குத்தானே நடக்கிறது என்ற உண்மை
யைத்தானே சொன்னேன்... இது ஒரு குற்றமா?" என்று புலம்பியபடி நரி
சிறைக்குச் சென்றது.

சிங்க ராஜாவின் கால் சரியாவதற்கு மூன்று மாதங்கள் ஆயின. ஒரு விரல் இல்லாததால் கம்பீரமாக நடக்க முடியவில்லை. நொண்டி நொண்டியே நடந்தது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த நரி வேதனையில் "இப்படி ஆகி
விட்டதே.... வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் வார்த்தையைக்
கொட்டிவிட்டு இப்படி வாழ்க்கையை கெடுத்துக் கொண்டோமே"என
ஏக்கப் பெருமூச்சு விட்டது.

வெகு நாட்களாகியும் குணமாகாத அந்தக் காலோடு சிங்க ராஜா குகையை
விட்டு வெளியே வந்தது. அப்போது,ஓரிடத்தில் திறந்துவைக்கப்பட்டிருந்த
ஒரு கூண்டுக்குள், ஆட்டுக்குட்டி இருப்பதைக் கண்டு ஆவலுடன் அதன் மீது
பாய்ந்தது. திடீரென்று கூண்டுக் கதவுகள் மூடுவதைப் பார்த்து திகைத்தது. கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டோமே என்று ஆத்திரத்தில் கர்ஜித்தது.



அப்போது அந்தக்கூண்டு இருந்த வண்டியை இழுத்துச் சென்று ஒரு ஜீப்பில்
இணைத்தனர் சர்க்கஸ் ஊழியர்கள். ஜீப் கிளம்பியது. "நம்ம சர்க்கஸ் முதலாளி
கேட்டபடியே ஒரு சிங்கம் அகப்பட்டு விட்டது. ரொம்பவே அவர் மகிழ்ச்சி அடைவார்" என்றார் ஒருவர். "ஆமாம்" என்றார் இன்னொருவர். சிறிது நேரத்
தில் அனைவரும் சர்க்கஸ் கூடாரத்தை அடைத்தனர்.

கூண்டிலிருந்த சிங்கத்தை கீழே இறக்கிய போதுதான் கவனித்தனர் அது நொண்டி சிங்கம் என்பதை. சர்க்கஸ் முதலாளி, “இந்த நொண்டிச் சிங்கத்தைப் போய் பிடித்து வந்திருக்கிறீர்களே... இதை எப்படிப் பழக்குவது? இதை நம் சர்க்கஸில் வைத்தால் நம் நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடுமே. உடனே இதைக் காட்டிலேயே கொண்டுபோய் விடுங்கள்''என்றார் கோபமாக.

அப்போதுதான் சிங்க ராஜாவுக்கு தன் உயிரே திரும்ப வந்தது போல இருந்தது.
சர்க்கஸ்காரர்களிடம் மாட்டியிருந்தால் அவர்கள் சொல்வதைக் கேட்டு அடிமை போல வாழ நேர்ந்திருக்கும். காலில் அடிபட்டதும் ஒருவிதத்தில் நல்லதுக்குத்தான்.அதனால் நம்மை விட்டு விட்டார்கள்.இதைத்தான் அந்தக் நரி அன்றைக்கு சொன்னது. நான்தான் தவறாகப் புரிந்துகொண்டேன் என்று நினைத்த சிங்கராஜா காட்டில் கொண்டுவந்து அவர்கள் விட்டவுடன் நேராக குகைக்குச் சென்றது.எல்லா மிருகங்களையும் வரச் சொல்லி,
நடந்ததைச் சொன்னது.கூடவே சிறையில் இருக்கும் நரியை விடுதலை செய்தது.

"யார் எது சொன்னாலும் அதை ஆராய்ந்து பார்க்காமல் உடனே தீர்ப்பு
வழங்கிய என் தவறுக்கு மிகவும் வருந்துகிறேன்... என்னை மன்னித்துவிடு"
என்று கூறி, நரிக்கு தன் நன்றியையும் தெரிவித்தது.



Post a Comment

Previous Post Next Post