.

முல்லாவிற்கு கடவுளிடம் சத்தமாக வேண்டிக்கொள்ளும் பழக்கம் இருந்தது. தினமும் ஒரே வேண்டுதலை பல விதமாக வேண்டிக்கொள்வார். ஒரு நாள் ‘கடவுளே எனக்கு ஆயிரம் நாணயங்கள் வேண்டும் அதில் ஒரு நாணயம் குறைந்தாலும் வாங்க மாட்டேன்' என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டு இருந்தார்.

முல்லாவின் வேண்டுதலை தினமும் கேட்டுக்கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவை ஏமாற்ற நினைத்தார்.பக்கத்து வீட்டுக்காரர் தன் வீட்டிற்கு சென்று தன்னுடைய சேமிப்பு பணத்தில் இருந்து 999 நாணயங்களை ஒன்றாக ஒரு சிறிய பையில் கட்டிக்கொண்டு முல்லாவின் வீட்டை நோக்கி ஓடினார்.

முல்லாவின் வீட்டை அடைந்த அந்த பக்கத்து வீட்டுக்காரர் தான் கொண்டு வந்த பணப்பையை முல்லாவின் வீட்டு ஜன்னல் வழியாக முல்லாவை நோக்கி வீசினார்.

முல்லா வேண்டுதலை முடித்த பிறகு தனக்கு அருகில் ஒரு பை இருப்பதை பார்த்தார். அதை திறந்து பார்த்த போது உள்ளே நாணயங்கள் இருப்பதைக் கண்டார். உடனே கடவுள் தன் வேண்டுதலை நிறைவேற்றி விட்டார்.எனக் கூறிக்கொண்டு கடவுளுக்கு நன்றி தெரிவித்து நாணயங்களை எண்ணத் தொடங்கினார்.

முல்லா காசை எண்ணதொடங்கிய பொழுது அதை ஜன்னல் வழியாக அந்தப் பக்கத்து வீட்டுக்காரர் வேடிக்கை பார்த்தார். முல்லாவோ நாணயங்களை எண்ணி முடித்த பிறகு அதில் 999 நாணயங்கள் மட்டுமே இருப்பதைக் கண்டார்.

பின்னர் முல்லா 'நன்றி கடவுளே ஆனால் மீதம் உள்ள ஒரு நாணயத்தை சீக்கிரம் கொடுத்து விடுங்கள்' என கடவுளிடம் வேண்டினார்.இதை சற்றும் எதிர்பாராத பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் சென்று 'இந்தப் பணத்தை நான் தான் உன் வீட்டிற்குள் விளையாட்டாக தூக்கி எறிந்தேன் என்னிடம் கொடுத்து விடு' என்று கெஞ்சினான்.

ஆனால் முல்லாவோ 'கடவுள் உன் மூலமாக எனக்கு உதவியுள்ளார் அதனால் என்னால் அதைக் கொடுக்க முடியாது' என்று கூறி விட்டார்.

வேறு வழியின்றி பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவை நீதிபதியிடம் அழைத்தார். 'எனக்கு உடல் நிலை சரியில்லை என்னால் நடக்கவே முடியாது. என்னால் எங்கும் வர முடியாது' என்றார் முல்லா. 'என்னுடைய கழுதையைத் தருகிறேன் வா' என்றார்.


பக்கத்து வீட்டுக்காரர். 'இதோ பார் என்னுடைய உடை அழுக்காக உள்ளது' என்றார் முல்லா. பின்னர் அவரிடமிருந்து உடையை வாங்கிக் கொண்டு நீதிபதியிடம் போனார்.

நீதிபதி இருவரது கதைகளையும் கேட்டு அறிந்து கொண்டார்.பின்னர் முல்லாவோ 'அவனை நம்பாதீர்கள் நீதிபதி அவர்களே அவன் இப்பொழுது மற்றவர்களின் பொருட்களையெல்லாம் தன் பொருட்கள் என்று கூறிக்கொண்டு திரிகிறான். உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் பாருங்கள் நான் .அணிந்திருக்கும் உடைகளும் என் பின்னால் நிற்கும் கழுதையும் தன்னுடையது என்பான்' என்றார்.

அடுத்த நொடியே அந்த பக்கத்து வீட்டுக்காரர் முல்லா அணிந்துள்ள துணி மற்றும் அந்த கழுதை இரண்டும் என்னுடையது என்றான்.உடனே நீதிபதி 'இப்போது எனக்கு எல்லாம் புரிகிறது முல்லா உன் பணப்பையை எடுத்துச் செல்லலாம்' என்றார். இதைக் கேட்டு தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து பக்கத்து வீட்டுக்காரர் கண்ணீர் விட்டார்.

இறுதியில் முல்லா பணத்தையும் கழுதையையும் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் தன் வீட்டுக்குச் சென்றார்.முல்லாவை ஏமாற்ற நினைத்த பக்கத்துவீட்டுக்காரே இறுதியில் ஏமாந்து போனார்.

நீதி: முட்டாள்தனம் இழப்பையே தரும்.





Post a Comment

Previous Post Next Post