ஒரு மரக்கிளையில் குருவி ஒன்று வசித்து வந்தது. அங்கும் இங்குமாய்ச் சிறகடித்துப் பறந்த அதற்கு இன்னும் உயரமாய்ப் பறக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஆகவே மெல்ல மேலெழும்பி உயரத்தில் பறக்க ஆரம்பித்தது. சிறிது தூரம் பறந்திருக்கும். அவ்வளவு தான், சூரியனின் வெட்பத்தை அந்தக் குருவியால் தாங்க முடியவில்லை.
மேலும் அதன் எடையும் சிறிய சிறகுகளும் அது உயரே பறப்பதற்குத் தடையாக இருந்தன.சோர்ந்து போன குருவி முயற்சியைக் கைவிட்டுக் கீழே இறங்க ஆரம்பித்தது.பருந்து ஒன்று இதை கவனித்துக் கொண்டிருந்தது. கீழே இறங்கி வந்த அது குருவி அருகே வட்டமிட்டது.பின்னர் குருவியை நோக்கி, 'ஏய் முட்டாள் குருவியே!என் இறக்கை அளவு உயரம் கூட நீ இல்லை. உனக்கு உயரத்தில் பறக்க வேண்டும் என்று ஏன் இந்தப் பேராசை? 'உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாக முடியாது' என்பது உனக்குத் தெரியாதா? போய் ஏதாவது தானியத்தைக் கொத்திக் கொண்டு திரி. போ! போ!' என்று கிண்டல் செய்து விரட்டி விட்டது. குருவியும் சோகத்துடன் இருப்பிடம் திரும்பியது..
நாட்கள் சில கடந்தன.
குருவி மரக்கிளையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.கீழே வியாபாரிகள் சிலர் நெல்லைக் காய வைத்திருந்தார்கள். தனது சிறிய
வயிறு கொள்ளுமளவுக்கு அதைத் தின்று விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது குருவி அப்போது பக்கத்துக் கிளையில் வந்து அமர்ந்தது அதே பருந்து, அதன்
கண்கள் கீழே நோக்கிக் கொண்டிருந்தன, நிலத்தில் ஒரு கோழி அதன் குஞ்சு
களுடன் அங்கும் இங்குமாய்ச் சுற்றி இரை தேடிக் கொண்டிருந்தது. அந்தக்
குஞ்சுகளில் ஒன்றை இன்று எப்படியும் இரையாக்கிக் கொண்டு விடுவது என்ற முடிவுடன் காத்திருந்தது பருந்து திடீரெனக் கீழ்நோக்கிப் பாய்ந்து குஞ்சுகளில் ஒன்றைக் கவ்வ முயன்றது.
அவ்வளவுதான் அமைதியாக மேய்ந்து கொண்டிருந்த கோழி, பருந்தை நோக்கிச் சீறியது. குஞ்சுகளைத் தன் சிறகுக்குள் அரவணைத்துக்
கொண்டு பருந்தைத் தாக்கியது. அருகே இருந்த சேவலும் பருந்தைத் தாக்க
ஓடி வந்தது. பயந்து போன பருந்து பறந்து போய் மரக்
கிளையில் உட்கார்ந்து கொண்டது.
நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த குருவி சரேலென்று கீழிறங்கியது
கோழிக் குஞ்சுகளின் பக்கத்தில் சென்று தானும் ஒரு ஓரமாக நெல் மணிகளைக்
கொத்தித் தின்றது. சற்று நேரம் சென்ற பின் பருந்தின்
அருகே போய் அமர்ந்தது.'என்ன அப்படிப் பார்க்கிறாய் பருந்தே! அன்று என்னிடம் வீரம் பேசினாயே! இப்போது ஒரு கோழிக் குஞ்சின் அருகில் கூட உன்னால் செல்ல முடியவில்லை பார்த்தாயா? உன்னைத் தாக்க
வந்த கோழி, என்னைத் தாக்கவில்லை என்பதை கவனித்தாயா? உயர உயரப் பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாக முடியாது தான்! அதே சமயம்
தாழப் பறந்தாலும் பருந்து ஊர்க் குருவியாக முடியாது என்பதைத் தெரிந்து கொள்! என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது குருவி.
Post a Comment