.

பெப்ரவரி 14 ஆம் திகதி எனும் போதே பொதுவாக அனைவரது ஞாபகத்திலும் சட்டென பளிச்சிடுவது காதலை ஆராதிக்கும் காதலர் தினமாகும்.

இந்த மாதத்தின் பெயரையும் திகதியையும் செவிமடுக்கும் போது சிலருக்கு உள்ளத்தை இதமாக வருடும் ஒருவித மகிழ்ச்சிப் பரவசமும் அவர்களை அறியமாமலேயே உதட்டோரத்தில் ஒரு சிறு புன்னகையும் உதயமாகும் அதேசமயம், வேறு சிலருக்கோ நினைக்கக் கூடாத ஒன்று ஞாபகத்தில் எட்டிப் பார்த்ததால் தோன்றக் கூடிய முகச் சுளிப்பும் வெறுப்பும் ஏற்படுவது வழமையாகவுள்ளது.

காதலர் தினம் என்றால் திருமணமாகாத மற்றும் திருமணமான ஜோடிகள் தமது அன்பையும் நேசத்தையும் பரிமாறிக்கொள்வதற்கான ஒரு தினமாக பொதுவாகக் கருதப்படுகின்ற நிலையில் அதன் உண்மையான தார்ப்பரியம் அதனை விடவும் ஆழமானதாகும்.

மேற்குலக கலாசாரத்தின் ஒரு அங்கமாகக் கருதப்பட்டு விமர்சிக்கப்படும் இந்தக் காதலர் தினம் காதலர்கள் என்ற உறவு முறையைத் தாண்டி அன்பால் இணைந்தவர்கள் தம்மிடையே அன்பைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு தினமாக கருதப்படுகிறது.பல நாடுகளில் அது முற்று முழுதாக காதல் ஜோடிகளுக்கான தினமாக கருதப்படாமல் குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் நண்பர்களும் தம்மிடையே அன்பைப் பரிமாறிக் கொள் வதற்கான ஒரு தினமாக போற்றப்பட்டு அனுஷ்டிக்கப்படுகிறது.

கிறிஸ்தவ மத பாரம்பரியத்துடன் பின்னிப்பிணைந்த வரலாற்றைக் கொண்டு விளங்கும் இந்தத் தினம் பெப்ரவரி 14 ஆம் திகதி கொல்லப்பட்ட வலேன்டைன் எனப் பெயர் கொண்ட இரு கிறிஸ்தவ மதகுருமாரை கௌரவப்படுத்தும் முகமாக அனுஷ்டிக்கப்பட்டு வந்தது.

மேற்படி தினத்தில் கொல்லப்பட்ட மதகுருமாரில் ரோமில் கிறிஸ்துவுக்குப் பின்னர் 3 ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில் வாழ்ந்த சென் வலேன்டைன் என்ற மதகுரு காதலர்களை இணைத்து வைக்கப் போராடி அதற்காகவே மரணத்தைத் தழுவியவர் என்ற அடிப்படையில் அவர் மரணத்தைத் தழுவிய தினம் காலப் போக்கில் காதலர் தினமாக புதிய பரிமணாமம் பெற்றது.

ஆனால் அன்பினதும் மகிழ்ச்சியினதும் அடையாளமாக தற்போது கருதப்படும் காதலர் தினத்தின் நிஜ வரலாற்றை எடுத்துக் கொண்டால் அது வலேன்டைனின் காலத்திற்கும் முற்பட்ட கிறிஸ்துவுக்கு முன்னரான இருண்ட துயரகரமான வரலாற்றுடன் தொடர்புபட்டதாகும்.

பண்டைய ரோமில் குடும்பம் செழிக்க வழிவகை செய்யும் விதமாக இனவிருத்தி ஆற்றலை மேம்படுத்த அனுஷ்டிக்கப்பட்டு வந்த ஒரு கொடூர சடங்கே பிற்காலத்தில் காதலர் தினத்தின் தோற்றத்திற்கு வித்திட்டதாக வரலாறு கூறுகிறது.

அன்றைய காலகட்டத்தில் ஆண்டு தோறும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இனவிருத்தி ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் லுப்பர்காலியா என்ற பெயரில் விருந்துபசாரமொன்று நடத்தப்பட்டு வந்தது.

இந்த விருந்துபசாரத்தின் போது தலைமை மதகுரு ஒருவரின் மேற்பார்வையில் பலிபீடமொன்றில் வைத்து ஆண் ஆடு ஒன்றும் நாயொன்றும் பலி கொடுக்கப்படும். இதனையடுத்து இரு மதகுருமார் மிருகங்களைப் பலி கொடுக்கப் பயன்படுத்திய கத்தியில் படிந்திருக்கும் அந்த மிருகங்களின் குருதியை தமது நெற்றியில் பூசிய நிலையில் வந்து பாலில் தோய்த்தெடுக்கப்பட்ட கம்பளித் துணியால் அதனை துடைத்து விட்டு சிரிப்பார்கள்.

அதன்பின் அங்கு நிர்வாண நிலையில் அழைத்து வரப்பட்டு வரிசையாக நிறுத்தப்படும் பெண்களை அங்குள்ள ஆண்கள் தம்மால் கொல்லப்பட்ட ஆடு மற்றும் நாயினது தோல்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட சவுக்கைப் பயன்படுத்தி அடித்து துன்புறுத்துவர். பிள்ளை பெறும் இயந்திரங்களாக பெண்களைக் கருதிய அன்றைய ஆணாதிக்க சமூகத்தில் பெண்களது இனவிருத்தி ஆற்றலை இந்தக் கொடூர சடங்கு மேம்படுத்தும் என்ற நம்பிக்கை காணப்பட்டது.

அத்துடன் அன்றைய ரோம் ஆண்கள் மத்தியில் ஜாடியொன்றில் போடப்பட்ட
பெண்களின் பெயர்கள் எழுதப்பட்ட துண்டுச்சீட்டுகளை அதிர்ஷ்ட இலாப
சீட்டிழுப்பு முறையில் தேர்ந்தெடுத்து தமக்கான துணையை தெரிவு செய்யும்
வழக்கமும் இருந்தது. அந்த ஆண்கள் தாம் தெரிவு செய்யும் பெண்ணுடன் தாம்
விரும்பும் காலம் மட்டுமே வாழ்வர்.

இந்நிலையில் சென் வலேன்டைன் வாழ்ந்த காலத்தில் ரோமை ஆட்சி செய்து வந்த கிறிஸ்தவ மதத்திற்கு புறம்பான நம்பிக்கையைக் கொண்ட பேரரசரான கியோடியஸ், ஆண்கள் திருமணம் செய்து கொள்வதால் அவர்கள் தமது மனைவி,பிள்ளைகளுடன் தமக்கு ஏற்படும் பாசப் பிணைப்புக் காரணமாக படையணியில் சேர்வதற்குப் பின்வாங்குகின்றனர் எனவும் அவ்வாறான ஆண்கள் படையணியில் சேர்கையில் அர்ப்பணிப்புடன் இருப்பதில்லை எனவும் கருதினார். இதன் விளைவாக அவர் அந்நாட்டிலுள்ள ஆண்களுக்கு திருமணம் செய்வதற்கு தடை விதித்ததுடன் திருமண நிச்சயதார்த்தம்  செய்து கொண்டவர்களுக்கு திருமணத்தை இரத்துச் செய்வதற்கு உத்தர விட்டார்.தனது இந்த உத்தரவை மீறுபவர்களை கடுமையாகத் தண்டிக்க நடவடிக்கை எடுத்தார்.



அவரது இந்த செயற்கிரமமானது தமக்கென குடும்பமொன்றை அமைத்து வாழ்வதற்கு நாட்டிலுள்ள ஆண்களுக்குள்ள உரிமையை மீறும் செயலாக உள்ளதாக உணர்ந்த வலேன்டைன் காதல்வயப்பட்ட ஜோடிகளுக்கு இரகசியமாக திருமணம் செய்து வைப்பதில் ஈடுபட்டார்.

ஆனால் அவரது நடவடிக்கை பரகசியமானதையடுத்து மன்னர் ஆணையை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அவர் மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

சிறைவாசத்தின் போது சிறைக் காவல் அதிகாரியின் பார்வை இழந்த மகளானஜூலியாவைக் ஒருவாறு குணப்படுத்தி அவருக்கு பார்வையைப் பெற் றுக் கொடுத்தார். இதன் காரணமாக அவருக்கும் ஜூலியாவுக்குமிடையில் ஒரு அன்புப் பிணைப்பு ஏற்பட்டது.அவர்களுக்கிடையில் மலர்ந்த நேசத்தை அறிந்த சிறைக்காவல் அதிகாரி தனது மகளை வீட்டில் சிறைவைத்தார். இந்நிலையில் வலேன்டைன் தனது பெயரைக் கையெழுத்திட்டு ஜூலியாவுக்கு கடி தமொன்றை எழுதினார். அந்தக் கடிதம் வலேன்டைன் மரணதண்டனை நிறைவேற்றத்திற்குள்ளாகும் முன்னர் அனுப்பி வைத்த இறுதிச் செய்தியாக, முக்கியத்துவம் மிக்க காதல் கடிதமாக வரலாற்றில் இடம்பிடித்தது. வலேன்டை னுக்கு 269 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி மரணதண்டனை நிறைவேற் றப்பட்டது.

எனினும் துறவு நிலையிலிருந்த வலேன்டைனுக்கும் ஜூலியாவுக்குமிடையில் இருந்த அன்பு சாதாரண மனிதக் காதல் உணர்வால் ஏற்பட்டதல்ல எனவும் அது
அதி உயர்நிலை நேச உணர்வின் வெளிப் பாடு எனவும் வரலாற்று அறிஞர்கள் சிலர் வாதிடுகின்றனர். அதற்கு திருச்சபை அவரை ஒரு புனிதராக அங்கீகரித்து அவர் மரணத்தைத் தழுவிய தினத்தை தனது நாட்காட்டியில் இணைத்துள்ளமை ஒரு சான்றாகக் கூறப்படுகிறது. எது எப்படியிருந்த போதும் மன்னரின் உத்தரவை மீறி காதல் ஜோடிகளை இணைத்து வைத்தவர் என்ற வகையில் காதலை வாழ வைத்த ஒருவராக வலேன்டைன் கருதப்படுகிறார்.

குறிப்பாக வலேன்டைன் இறந்து சுமார் 200 ஆண்டுகள் கழிந்த நிலையில் பாப்பரசராகவிருந்த ஜெலாஸியஸ் கிறிஸ்தவ மதம் தனது ஆதிக்க வேரை ஆழ வேரூன்றியிருந்த ரோமில் இனவிருத்தி ஆற்றலை மேம்படுத்துவதற்காக பெப்ரவரி மாதத்தில் நடத்தப்பட்டு வந்த கொடூர சடங்குகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உத்தரவிட்டு அதற்குப் பதிலாக அதே காலப் பகுதியில் வரும் வலேன்டைன் தினத்தை அனுஷ்டிக்குமாறு அறிவித்தமை பிற்காலத்தில் அந்தத் தினம் காதலர் தினமாக பரிணமிக்க வழியேற்படுத்தித் தந்தது எனலாம். ஆனால் பாப்பரசர் ஜெலாஸியஸ் காலத்தில் வலேன்டைன் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டமைக்கு சான்றுகள் இல்லை.

ஆனால் பிற்காலத்தில் இலக்கிய மேதைகள் தமது கலைப்படைப்புகளுக்கு அழகு சேர்க்கும் வகையிலும் வர்த்தகர்கள் காதலைக் குறிக்கும் வாழ்த்து அட்டைகள்,அன்பளிப்புகளுக்கான சந்தைகளை விரிவுபடுத்தி ஆதாயம் பெறும் நோக்கத்தில் மேற்படி தினத்தின்பால் இளைஞர்களைக் கவர்ந்து இழுக்கும் முகமாகவும் இந்தத் தினத்தை காதலர்களுக்கு மட்டுமேயான தினமாக சித்திரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக விமர்சிக்கப்படுகிறது.

அந்த வகையில் 1340 ஆம் ஆண்டில் பிறந்து 1400 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த ஆங்கிலக் கவிஞரும் த கன்டர்பரி படைப்பின் மூலம் பிரபலம் பெற்ற எழுத்தாளருமான ஜியோபெரி சோசர், வலேன்டைன் தினத்தை காதல் வாழ்க்கையுடன் முதன் முதலாக தொடர்புபடுத்தியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக மேற்குலக நாடுகளில் காதல், காதலை வெளிப்படுத்தும்
சடங்குகள் மற்றும் காதலைப் பாராட்டும் வைபவங்கள் என்பனவற்றை உள்ளடக்கிய நிகழ்வுகளை நடத்தும் பாரம்பரியம் ஆரம்பமானது. அதற்கு உதாரணமாக கிழக்கு இங்கிலாந்தில் காதலன் காதலியின் வீட்டின் பின்வாசல் கதவைத் தட்டி அவளுக்கு இனிப்புகளை அன்பளிப்பாக வழங்கிச் செல்லும் வழக்கம் பின்பற்றப்பட்டதைக் கூறலாம்.

இந்நிலையில் வலேன்டைன் தினத்தைக் கொண்டாடும் வழக்கம் ஐரோப்பாவெங்கும் பரவியது.

அங்கு காதலுக்கான உயர் நீதிமன்றமொன்றில் பெண் நீதிபதிகள் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 14 ஆம் திகதி கூடி தீர்ப்பளித்தனர்.காதல் பற்றிய உண்மையை சேகரிப்பதற்காக இடம் பெறும் இந்தக் கூட்டங்களின் போது அக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் காதல் கவிதைகளை வாசித்து காதல் துணையை ஈர்க்கும் விளையாட்டுகளில் சடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் விளைவாக காதலர் தினம் என்ற பெயர் அந்தத் தினத்திற்கு வேறு எந்தவொரு தினத்திற்கும் இல்லாத வகையிலான பரந்தளவான பிரபலத்தைப் பெற்றுத் தந்துள்ளது என்பது நிதர்சனமாகும்.

காதலர் தினத்தின் அடையானமாக மக்கள் உணர்வுமயமான வசனங்கள், பெறுபவரின் அழகு, அவர்கள் மீதான தமது நேசம் என்பவற்றை வெளிப்படுத்தும் விசேட அட்டைகளை பரிமாறிக் கொள்வது வழக்கமாக உள்ளது. மன்மதன்,மலர்கள் மற்றும் அலங்கார நாடாக்கள் என்பவற்றை மேற்படி வாழ்த்து அட்டைகள் உள்ளடக்கியிருக்கும்.

பல ஜோடிகள் காதலர் தினத்தை சுற்றுலாவொன்றுக்கு செல்லுதல், விசேட மாலை உணவை வீட்டில் அல்லது ஆடம்பர ஹோட்டலொன்றில் இணைந்து அருந்துதல் என்பவற்றுடன் கொண்டாடுகின்றனர். காதலர் தினத்தில் திருமணம் செய்வதற்கான விருப்பத்தை வெளியிடுவது மற்றும் திருமணம் செய்து கொள்வது போன்றவையும் உலகமெங்கும் இடம் பெற்று வருகின்றன. பிலிப்பைன்ஸில் காதலர் தினத்தில் பெருமளவானோர் திருமணம் செய்து கொள்வது வழமையாகவுள்ள நிலையில் அங்கு பலரின் திருமண நாளாக இந்தத் தினம் விளங்குகிறது.

இலங்கையைப் பொறுத்தவரை நாட்டின் நகர்புறப் பிரதேசங்களில் உள் நாட்டுப் போர் முடிவடைந்ததற்குப் பின்னர் கொவிட் 19 கொரோனா தொற்றுப்
பரவுவதற்கு முன்னரான காலப் பகுதி காதலர் தினத்தைக் கொண்டாடும் நடை
முறை பிரசித்தி பெற்றிருந்த காலமாக விளங்கியது. ஆனால் கொவிட் 19 தொற்று மற்றும் இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி என்பன காரணமாக காதலர் தினக் கொண்டாட்டங்கள் பெரிதும் குறைந்துள்ளன என்றே கூற வேண்டும்.

கொவிட் 19 தொற்றுக்கு முன்னர் காதலர் தின வாழ்த்து அட்டைகளை விற்பதில் ஈடுபட்டு வந்த பல கடைகள் வாழ்த்து அட்டைகள் எதுவுமின்றி வெறிச்சோடிக் கிடப்பதைக் காண முடிகிறது இது தொடர்பில் அந்தக் கடை உரிமையாளர்களிடம் வினவிய போது கடதாசித் தட்டுப்பாட்டால் இலங்கையில் வாழ்த்து  அட்டைகளைத் தயாரிப்பது சாத்தியமற்று உள்ளதாகவும் இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதால் இந்தியாவிலிருந்து வாழ்த்து அட்டைகளை இறக்குமதி செய்வது செலவுமிக்கதாகவுள்ளதுடன் அவ்வாறு இறக்குமதி செய்தாலும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அவற்றை உரிய விலைக்கு விற்க முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அதேசமயம் காதலர் தினத்திற்கான பரிசுப்பொருட்களை விற்கும் கடைகளின் எண்ணிக்கையும் விரல் விட்டு எண்ணக் கூடியனவாக உள்ளன. அன்பு என்பது வாழ்த்து அட்டைகளிலோ அன்றி பரிசுப்பொருட்களிலோ அடங்கியுள்ள
ஒன்று அல்ல என்பது வேறு விடயம்.

கணினிகளும் ஸ்மார்ட் கையடகத்தொலைபேசிகளும் ஆதிக்கம் செலுத்தி வரும் இன்றைய காலகட்டத்தில் இயந்திரமயமான வாழ்வின் ஆதார மாகவுள்ள அன்பைப் பரிமாறிக் கொள்வதற்கு பலருக்கும் நேரம் ஒதுக்க முடியாத நிலை காணப்படுகிறது.இந்நிலையில் உரிமைக்காகப் போராடி மரணத்தைத் தழுவிய மதகுருவின்  பெயரால் அழைக்கப்படும் இந்தத் தினத்தை மேற்குலக கலாசாரத்தைப் பின்பற்றி காதல் ஜோடிகளின் தினமாக வரையறைக்குட்படுத்தாமல் இந்தப் உலகிலுள்ள இளைஞர்கள்,வயோதிபர்கள் என அனைவரும் மற்றும் சிறுவர்கள் வயது வித்தியாசமின்றி தம்மிடை யேயான முரண்பாடுகள் மற்றும் வேறுபாடுகளை மறந்து ஒருவர் பால் ஒருவர் கொண்டுள்ள அன்பைப் பகிர்ந்து தமது உறவுகளை வலுப்படுத்தும் தினமாக இதனைப் பயன்படுத்தினால் இந்தத் தினம் முகச் சுளிப்பிற்கு சிறிதும் இடம் தராத மகத்தான தினமொன்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.






Post a Comment

Previous Post Next Post