.

ஒரு அடர்ந்த வன காட்டுக்குள் மிகப் பெரிய ஏரி ஒன்று இருந்தது. அந்த ஏரிக்கு அனைத்து விலங்குகளும் வந்து தண்ணீர் அருந்திவிட்டுச் செல்லும். நல்ல அகலமான ஏரியாகவும் சுற்றிவர காட்டுப் பகுதியாகவும் இருப்பதால் எல்லா பக்கங்களிலும் இருந்து விலங்குகள் வந்து நீர் அருந்தும். அதேபோல் ஏரிக் கரைகளில் பெரிய பெரிய மரங்கள் இருந்ததால் குரங்குக் கூட்டங்களும் அந்த மரங்களில் வசித்து வந்தன. அந்தக் குரங்குகள் எல்லாம் அங்கு நீர் அருந்த வரும் விலங்குகளுடன் விளையாடி மகிழ்ச்சியாய் இருந்தன.

எங்கிருந்தோ ஒரு முதலை ஒன்று அந்தக் குளத்துக்கு வந்து சேர்ந்தது. ஆரம்பத்தில் விலங்குகள் முதலை வந்ததை கண்டு கொள்ளவில்லை. ஆனால் போகப் போக, முதலையின் குறும்புகள் அதிகமாகி விட்டன. விலங்குகளுக்கு மிகப் பெரிய தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டது. அது மட்டுமல்ல அங்கு நீர் அருந்தவரும் விலங்குகளை அடித்து உணவாகவும் சாப்பிட ஆரம் பித்துவிட்டது.

விலங்குகள் அனைத்தும் ஒன்றுகூடிப் பேசின. இருந்தாலும் முதலை அருகில் போய் பேச பயந்திருந்தன. காரணம் தண்ணீருக்குள் முதலைக்கு யானையை விட பலம் அதிகமாக இருந்தது. சிங்கம், புலி கூட தரையில் முதலையை சமாளித்து விட முடியும். ஆனால் தண்ணீருக்குள் ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிவித்தன.

இப்பொழுதெல்லாம் விலங்குகள் பயந்து பயந்துதான் ஏரிக்கு வந்து தண்ணீர் அருந்துகின்றன. ஒரு காலத்தில் எந்த பயமுமில்லாமல் நடு ஏரி வரை நீந்திச் சென்று தண்ணீரில் விளையாடி மகிழ்ந்த விலங்குகள், இப்பொழுது தண்ணீர் குடிக்க கரையோரத்துக்கு வரவே அஞ்சின. இப்படியாக எல்லாம் பயந்து கொண்டிருந்த வேளையில் குரங்குக் குட்டி ஒன்று மரத்திலிருந்து கீழிறங்கி அந்த ஏரியின் ஓரம் விளையாடிக் கொண்டிருந்தது. சத்தமில்லாமல் தண்ணீரில் நீந்தி வந்த முதலை கப்பென்று குரங்குக் குட்டியை கவ்விக் கொண்டு தண்ணீருக்குள் சென்று விட்டது.

பாவம் குரங்குக் குட்டியின் தாய் கரையோரம் வந்து கதறியது. எல்லா மிருங்கங்களும் வேடிக்கைப் பார்க்கத்தான் முடிந்ததே தவிர, அதனைக் காப்பாற்ற முடியவில்லை.குட்டியை இழந்த குரங்கு அழுதுகொண்டே சென்றது. அப்பொழுது, காட்டை விட்டு மக்கள் வசிக்கும் கிராமத்தின் பக்கம் சென்று வாழ்ந்துகொண்டிருந்த நரி ஒன்று தன்னுடைய காட்டைப் பார்க்க வந்துகொண்டிருந்தது. குரங்கு அழுது கொண்டிருப்பதைப் பார்த்து என்ன விடயம் என்று விசாரித்தது.


குரங்கு தன்னுடைய குட்டியை முதலை கவ்விக்கொண்டு போனதை அழுதுகொண்டே சொன்னது.நரிக்கு அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது, இந்தக் காட்டைத் தாண்டி அங்குள்ள கிராமத்தில் சர்க்கஸ் விழா ஒன்று நடந்து கொண்டிருந்தது. இரவு சர்க்கஸ் பார்க்க அங்குள்ள மக்கள் கூடிவிடுவார்கள். நரியும் ஒரு ஓரமாய் புதரில் ஒளிந்துகொண்டு அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த குதிரை,சிங்கம், புலி, யானை மற்றும் குட்டி குட்டி விலங்குகளைப் பார்க்கும். அப்பொழுது முதலை ஒன்று காணாமல் போய்விட்டதாய் பேசிக் கொண்டிருந்தது ஞாபகம் வந்தது.

உடனே குரங்கை அழைத்துக்கொண்டு அந்த சர்க்கஸ் நடக்கும் கிராமத்துக்குச் சென்றது. இரவு நேரம் ! அங்கு கட்டப்பட்டிருந்த குதிரையிடம் சென்று முதலை காட்டுக்குள் இருப்பதாகவும் அது அங்குள்ள எல்லா மிருகங் களையும் பயமுறுத்திக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தது. குதிரை அங்கி ருந்த மற்ற விலங்குகளுடன் கலந்தாலோசித்தது. நாளை காலை யானை சர்க்கஸ் கூடாரத்தை விட்டு தப்பிச் செல்வதாகவும்,அதற்கு முன்புறம் குரங்கு அந்தக் காட்டுக்கு வழிகாட்டிக்கொண்டு சென்றால், யானை நேராக அந்த ஏரிக்கே சென்று முதலையை வெளியே கொண்டுவர ஏதேனும் செய்து கொள்வோம் என்று முடிவு செய்தன.

மறுநாள் காலையில் அங்கிருந்து யானை சர்க்கஸ் கூடாரத்தை விட்டு தப்பித்து ஓடியது, அங்கிருந்த ஊழியர்கள் அதனைப் பிடிக்க ஜீப்பில் விரட்டி வந்தனர். யானை,குரங்கு வழிகாட்ட அந்த அடர்ந்த காட்டுக்குள் நுழைந்து அந்த ஏரியை நோக்கிச் சென்றது. அதற்குள் அதனை விரட்டி வந்த ஊழியர்கள் யானை ஏரியின் கரை ஓரம் அசையாமல் நிற்பதை பார்த்தவுடன் அதனைப் பிடிக்க அருகில் வந்தனர்.

அதற்குள் குரங்கின் ஏற்பாட்டின்படி மரத்தின் மேலிருந்து குரங்குகள் மரக்கிளைகளைப் பிடித்து உலுக்க மரத்திலிருந்த காய்கள், பழங்கள் இவைகள் சட சடவென தண்ணீருக்குள் விழுந்தன. இந்த சலசலப்பு சத்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்த்த முதலையின் கண்ணில் படும்படி குரங்கு ஒன்று ஆனால் யானையின் பக்கத்தில் நின்று கொண்டது. சத்தமில்லாமல் அந்தக் குரங்கை கவ்விப் பிடிக்க நீந்தி வந்த முதலை சட்டென குரங்கைப் பிடிக்க பாய்ந்து வெளியே வர, எதிர்பார்த்துக் காத்திருந்த குரங்கு சட்டென தள்ளி ஓட முதலையும் இன்னும் கொஞ்சம் தலையை நீட்டி முயற்சித்தது. இப்பொழுது முதலையின் முக்கால் உடம்பு வெளியே தெரிய தயாராய் இருந்த யானை, தனது தும்பிக் கையால் அதனை சுற்றிவளைத்து தூக்கி வெளியே வீசியது.

யானையைப் பிடிக்க மெதுவாய் வந்த ஊழியர்கள், தொம்மென்று அருகில் வந்து விழுந்த முதலையை பார்த்ததும் இது சர்க்கஸிலிருந்து தப்பித்த முதலை தான் என்பதை கண்டு கொண்டு முதலில் முதலையை பிடித்து விட்டு யானையை பிடிக்கலாம் முடிவு செய்தவர்கள் முதலையை பெருமுயற்சி செய்து வாயை காட்டி வண்டிக்குள் தூக்கி போட்டுக் கொண்டு சென்றார்கள். யானை அவர்களை பின்தொடர்ந்து வர ஆரம்பித்தது. ஊழியர்களுக்கு ஆச்சர்யம்,

ஆஹா இந்த முதலையை நமக்கு காட்டத் தான் இங்கு வந்திருக்கிறது என்று முடிவு செய்து யானையை பாராட்டினர். அவர்களுக்குத் தெரியுமா? இந்த குரங்குக்கு உதவி செய்யத்தான் இங்கு வந்தது என்பதை ?

மீண்டும் அனைத்து விலங்குகளும் அந்த ஏரியில் குதித்து விளையாடி, தண்ணீரை குடித்தும் மகிழ்கின்றன. இதற்கெல்லாம் காரணம் குட்டியை இழந்த குரங்கும், அந்த நரியும் யானையும்தான் காரணம்.



Post a Comment

Previous Post Next Post