.

மாதராக பிறப்பதற்கு மாதவம் செய்ய வேண்டும் என்பார்கள்.ஆனால் நவீன தொழில்நுட்பங்களிலும் நாகரிகங்களிலும் உச்சத்தைத் தொட்டு விட்டுள்ளதாக மார்தட்டிக் கொள்ளும் காலத்தை எட்டிய போதும் உலகமெங்கும் பெண்கள் ஒடுக்கப்படுவதும் வன்முறைக்குள்ளாக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையால் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 25ஆம் திகதி பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறைகள் ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

1930ஆம் ஆண்டிலிருந்து 1961ஆம் ஆண்டு வரை டொமினிக்கன் குடியரசை ஆட்சி செய்து வந்த சர்வாதிகாரி ராபயல் திரு.ஜில்லோவின் உத்தரவின் கீழ் செயற்பாட்டாளர்களான பற்றியா, மினேர்வா மற்றும் தெரேஷா ஆகிய 3 சகோதரிகள் 1960ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதைக் குறிக்கும் வகையில் அதே நாளில் மேற்படி தினத்தைக் கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த வருடத்திற்கான பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை ஒழிப்பு தினம் 'பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒன்றிணைவது' என்ற தொனிப்பொருளில் அனுஸ்டிக்கப்பட்டது. இந்தத் தினம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல்,பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பது குறித்து உலகளாவிய ஆதரவைத் திரட்டுதல் என்பவற்றை நோக்காகக் கொண்டுள்ளது.

உலகில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் சமத்துவமாக வாழ்வ தற்கான உரிமை உள்ள நிலையில் அந்த உரிமையை அனுபவிப்பதற்கு பூரண உரித்துடையவர்களாக பெண்கள் உள்ளனர். ஆனால் உலகில் மனித நாகரிக வளர்ச்சியுடன் இணைந்ததாக ஆணாதிக்க சிந்தனைகளும் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிலும் பரவி கிளை பரப்பி ஆழமாக வேரூன்றியுள்ளன.

பெண்கள் வீடுகளிலும் தொழில் புரியும் இடங்களிலும் பொது இடங்களிலும் உடலியல், பாலியல் மற்றும் உணர்வு ரீதியில் பல்வேறு வகையில் வன்முறைகளை எதிர் கொண்டு வருகின்றனர்.

இலங்கையைப் பொறுத்த வரை தமது குடும்பத்தின் நலனுக்காக தமது இன்ப துன்பங்களைத் தியாகம் செய்து தமக்கு முற்றிலும் அறிமுகமற்ற வெளி நாடுகளிலான தொழில் வாய்ப்பை நாடி சென்ற பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக விற்கப்பட்ட கொடூரம் அண்மையில் அம்பலமானமை முழு நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

படுபாதாளத்தில் சென்று கொண்டிருக்கும் இலங்கையின் பொருளாதார நிலையையும் அதனால் குடும்பங்கள் எதிர்கொண்டுள்ள அவல நிலையையும் தமக்குச் சாதகமாக்கி பணம் சம்பாதிக்க முயற்சிக்கும் ஈவிரக்கமற்ற  முகவர்களுக்கு வறுமையில் வாடும் அப்பாவிப் பெண்கள் பலிக்கடாவாகி வருகின்றனர்.மேற்படி வெளிச்சத்துக்கு வந்த சம்பவத்தை விடவும் அம்பலமாகாத இருட்டடிக்கப்பட்ட சம்பவங்கள் எத்தனையோ இருக்கலாம்.

மேலும் இவ்வாறு வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்கள் நாடு திரும்பும் பட்சத்தில்  அவர்களை அவர்களது குடும்பமும் சமூகமும் பச்சாதாபத்துடன் ஏற்குமா அல்லது பாவிகளாகப் பார்த்து வெறுத்து ஒதுக்குமா என்பது இறைவனுக்கு மட்டுமே வெளிச்சம். 

இலங்கையானது ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தை அங்கீகரித்துள்ள நாடுகள் வரிசையில் உள்ளது. அந்தப் பிரகடன மானது மானிடராகப் பிறந்த சகலரினதும் உள்ளார்ந்த கெளரவத்தையும் அல்லது அவரிடமிருந்து பிரிக்க முடியாத உரிமைகளையும் அங்கீகரித்தல் உலகின் சுதந்திரம், சமாதானம் மற்றும் நீதி என்பவற்றுக்கு அடிப்படை யானதாகவுள்ளது எனக் கூறுகிறது. சகல மனிதப் பிறவிகளும் சுதந்திரமாக பிறப்பதுடன் கௌரவம் மற்றும் உரிமைகளை பெறுவதில் சமமா னவர்களாக உள்ளனர் எனத் தெரிவிக்கும் மேற்படி பிரகடனமானது பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவ உரிமைகளை வலியுறுத்துகிறது. ஆனால் நடை முறையில் சமூக, பொருளாதார மற்றும் தேசிய வரையறைகளுக்கு அப்பாற்பட்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வது கவலை க்குரியதாகும்.

உலகமெங்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பல்வேறு வழிமுறைகளில் இடம்பெற்று வருகின்ற போதும் அபிவிருத்தியடைந்த நாடுக ளுடன் ஒப்பிடுகையில் இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பெண்கள் பாரபட்சத்திற்கு உள்ளாக்கப்படுவதும் வன்முறைக் குள்ளாக்கப்படுவதும் அதிகளவில் அரங்கேறி வருகிறது.

இலங்கையைப் பொறுத்தவரை பெண்களில் மூன்று பேருக்கு ஒருவர் கணவர் மற்றும் நெருங்கிய உறவினர்களால் தனது வாழ்நாளில் உடலியல், பாலியல் மற்றும் உணர்வு ரீதியான துஷ்பிரயோகங்களுக்குள்ளாகி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை செயற்பாடுகள் நிதியம் தெரிவிக்கிறது

கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்திலான முடக்கநிலை காரணமாக சமூகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு வீட்டிற்குள் சிறைபட்டு இருக்க வேண்டிய நிலையில் இலங்கையிலுள்ள பெண்களில் ஐந்தில் ஒருவர் தமக்கு நெருக்கமான உறவினரால் உடலியல் மற்றும் பாலியல் துஷ்பிர யோகங்களுக்கு உள்ளானதாக மேற்படிதரவுகள் தெரிவிக்கின்றன. கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக குடும்பத் தலைவர்களான பல ஆண்கள் தொழில்களை இழந்தமையால் ஏற்பட்ட பொருளாதார நெருக் கடியால் தோற்றமெடுத்த மன இறுக்கம் வீட்டு வன்முறைகளுக்கு தூபமிடுவதாக அமைந்தமை கண்கூடு.

அத்துடன் கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றையடுத்து தற்போது இலங்கை மருந்துகள் தட்டுப்பாடுகள் காரணமாக எதிர்கொண்டுள்ள உணவு, எரிபொருள்,பெண்களின் தனிப்பட்ட உடல் நலன்களைப் பேணுவதற்கான செயற்றிட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

கொவிட் காலத்தில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கணினிகள் என்பவற்றின் ஆதிக்கம் பெருகிய நிலையில் இணையத்தளங்கள் மூலம் மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பல்களால் சிறுமிகளும் யுவதிகளும் தவறாக வழி நடத்தப்பட்டும் மிரட்டப்பட்டும் ஏமாற்றப்பட்டும் உளவியல்ரீதியாகவும் உடலியல் ரீதியாகவும் வன்முறைகளை எதிர்கொண்ட சம்பவங்கள் பலவும் நடந்தேறியுள்ளன.

பிறப்பால் ஏற்படும் உடல் குறைபாடுகள், வயோதிபம் என்பவற்றால் துன்பப்படும் பெண்களும் சிறுமிகளும் மனிதாபிமானத்துக்கு முரணாக மேற்கொள்ளப்படும் வன்முறைகளால் பெரிதும் பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர்.

குடும்ப கௌரவம், ஆண்களுக்கு பெண்கள் கட்டுப்பட்டவர்கள் எனக் காலங் காலமாக நிலவி வரும் நம்பிக்கைகள் காரணமாக பெண்கள் பலரும் சமூக மற்றும் குடும்ப மட்டத்தில் இடம்பெறும் வன்முறைகளை அம்பலப்ப டுத்துவதற்குத் தயங்கி அவற்றை ஏற்றுக்கொண்டு வாழ்வது வழமை யாகியுள்ளது. இதன் காரணமாக பல பெண்கள் தமது வாழ்நாள் முழுவதையும் வன்முறைகளில் சிக்கி துன்பத்தில் கழிக்க நேரிடுகிறது.

கடும் போக்கு சட்டங்களைப் பின்பற்றும் பாகிஸ்தான், சவூதி அரேபியா போன்ற நாடுகளில் பெண்கள் குடும்ப கௌரவத்திற்காக படுகொலை செய்யப்பட்டு வருகின்ற நிலையில் இலங்கையில் அவ்வாறான கடும்போக்கு வெளிப்படையாகக் காணப்படாவிட்டாலும் மறைமுகமாக அத்தகைய நிலைமை தாக்கம் செலுத்தி வருவதைக் காணலாம்.

காலங்காலமாக ஆணாதிக்கம் வேரூன்றிய சமூகத்தில் பெண் ஒருவர் இனம், மதம் மற்றும் பொருளாதார ரீதியில் குடும்ப கௌரவத்திற்கு பொருத்தமற்றவராக கருதப்படும் ஒருவருடன் பழகும் பட்சத்தில் அல்லது அவரைக் காதலிக்கும் அல்லது திருமணம் செய்யும் பட்சத்தில் அவர் குடும்ப உறுப்பினர்களால் மிக மோசமாக தாக்கப்பட்டும் தகாத வார்த்தைகளால் துன்புறுத்தப்பட்டும் வருவதை நடைமுறையில் காணலாம்.இத்தகைய சூழ் நிலையில் சில பெண்கள் மனமுடைந்து தற்கொலையை நாடுவதும் இடம் பெறுகிறது.அத்தகைய சந்தர்ப்பங்களில் தற்கொலைக்கான காரணம் குடும்ப அங்கத்தவர்களால் மூடிமறைக்கப்படுவதால் அந்தத் தற்கொலை பின்ன ணியிலுள்ள வன்முறைகள் வெளிச்சத்துக்கு வராமல் போய்விடுகின்றன.

கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றுப் பரவுவதற்கு முன்னர் 2000 ஆம் ஆண்டுக்கும் 2008ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்திலான தரவுகளை அடிப்படையாக வைத்து உலக சுகாதார ஸ்தாபனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வானது உலகிலுள்ள பெண்களில் அதிகளவானோர் தமது வாழ்க்கைத் துணை உட்பட தமக்கு நெருக்கமானவராலேயே வன்முறைக்குள்ளாவதாக தெரிவிக்கிறது.இவ்வாறு வன்முறைகளை எதிர்கொள்ளும் பெண்களின் தொகை ஆபிரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் 33 சதவீதமாகவும் கிழக்கு மத்தியதரைக் கடல் பிராந்தியங்களில் 31 சதவீதமாகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் 25 சதவீதமாகவும் மேற்கு பசுபிக் பிராந்தியங்களில் 22 சதவீதமாகவும் உள்ளதாக தெரிவிக்கிறது. உலகளாவிய ரீதியில் அக்காலப் பகுதியில் இடம் பெற்ற பெண்களின் படுகொலைகளில் 38 சதவீதமானவை அவர்களது வாழ்க்கைத் துணைகளாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குடும்ப பொருளாதாரம் பாதிக்கப்படும் போது அதனால் ஏற்படக்கூடிய பிரதிகூல தாக்கங்களுக்கு முகம் கொடுப்பவர்களாக பெண்களே உள்ளனர். பல பெண்கள் தமது குடும்பத்தின் ஏனைய அங்கத்தவர்களுக்காக தாம் உண்ணும் உணவை தியாகம் செய்து பட்டினியால் வாடும் சந்தர்ப்பங்கள் அன்று முதல் இன்று வரை பல குடும்பங்களில் இடம்பெற்று வருகின்றன.

பல சிறுமிகள் பொருளாதார நெருக்கடியின் கோரப்பிடியில் சிக்கி தமது கல்வியைக் கைவிட்டு எதிர்காலம் தொடர்பான கனவுகள் கானல் நீராக கலைந்த நிலையில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடியால் அடுத்த வேளை உணவிற்கும் வாழ்விற்கும் என்ன செய்யப் போகிறோம் என புரியாது மன இறுக்கத்திற்கு உள்ளாகி தமது சுயத்தை இழந்து மனநலம் பாதிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட பெண்களும் ஏராளமாக உள்ளனர்.

இலங்கையில் 3 தசாப்த கால போர் பெண்கள் மத்தியில் ஏற்படுத்திய வடுக்கள் தற்போதும் ஆறாத ரணங்களாக தொடர்கின்றன. போர் அரக்கனின் கோரப் பசிக்கு அன்புக்குரிய உறவுகளைக் காவு கொடுத்து தனிமரமாக குடும்பத்தைத் தாங்கி நிற்க வேண்டிய அவலம், போரில் உறுப்புகளை இழந்து நடைப்பிணமாக மாறி வாழ்வை முன்னெடுத்துச்செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டமை, சொத்துகள் மற்றும் வாழ்வா தாரங்களை இழந்தமை என்பன காரணமாக பல பெண்கள் நிர்க்கதிக் குள்ளாகினர். பல பெண்கள் தமது குடும்பத் தலைவர்களும் பிள்ளைகளும் பலவந்தமாகக் காணாமலாக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியாது ஆறாத் துயரில் உடலும் உள்ளமும் உருக்குலைந்து வாழ்கின்றனர்.

போர்க் காலத்தில் பல சந்தர்ப்பங்களில் பகைமையைத் தீர்க்க பெண்கள் கருவிகளாக பயன்படுத்தப்பட்டு அவர்களை இலக்கு வைத்து பாலியல் வன்முறைகளும் துஸ்பிரயோகங்களும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன.

பெண்கள் தாம் பணியாற்றும் இடங்களிலும் உடலியல், பாலியல் மற்றும் உளவியல் ரீதியான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குள்ளாவது ஆங்காங்கே தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எனும் போது அவர்களை அடித்து உதைப்பது, தீயால் சுடுவது, கல்வி கற்கும் உரிமைகளுக்கு தடை விதிப்பது, திறமைகளை நசுக்குவது, உறவு மற்றும் நட்பு ரீதியான அவர்களது உறவுகளுக்கு முட்டுக்கட்டை போடுவது என்பவற்றுடன் வார்த்தைகள் வடிவிலான சொற்பிரயோக தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்றன. உடலியல் ரீதியில் ஏற்பட்ட காயங்கள் வேண்டுமானால் காலப்போக்கில் ஆறலாம். ஆனால் உள்ளத்தை ஆழ ஊடுருவி தீராத ரணத்தை ஏற்படுத்தக் கூடிய வார்த்தைப் பிரயோ கங்களால் ஏற்படும் காயங்கள் காலத்திற்கும் நீடித்து சித்திர வதைப்படுத்தக் கூடியவையாகும்.

பாலியல் வல்லுறவு, குடும்ப வன்முறை,பாலின ரீதியான துன்புறுத்தல், பலவந்த கருக்கலைப்பு, பெண் சிசுக் கொலை,மகப்பேற்றுக் கால வன்முறை, கௌரவக் கொலை, வரதட்சணைக் கொடுமை, மத ரீதியில் பெண் உறுப்பு சிதைப்பு, கட்டாய திருமணம், ஆட்கடத்தல், அடிமை வாழ்க்கை,அதிகார வர்க்கத்தினரின் வன்முறை, கட்டாய விபசாரம், முதுமை காலத்தில் கைவிடப்படுதல், கல்லால் அடித்தல், தீக்குளிக்க நிர்பந்தித்தல் உள்ளடங்கலாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் தண்டனை வழங்க ல்களும் இடம்பெறுவது தொடர்ந்து வருகிறது.

ஒரு தாயாக, மனைவியாக, மகளாக ஒவ்வொரு குடும்பத்தினதும் ஆதார தூண்களில் ஒன்றாக இருந்து வரும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு தனிநபர், குடும்பம்,சமூகம் மற்றும் அரசாங்கம் என சகல மட்டத்திலும் ஏற்படும் போதே மேற்படி வன்முறைகளை ஒழிப்பது சாத்தியமாகும். இதுஒரு நாளில் அல்லது குறிப்பிட்ட காலப் பகுதியில் எட்டப்படக் கூடிய ஒன்றல்ல.இதற்கு சம்பந்தப்பட்ட அனைவரதும் அர்ப்பணிப்பு மிக்க நீண்ட கால அடிப்படையிலான ஒத்துழைப்பு அவசியமாகும்.


@இக்கட்டுரையானது R.ஹஸ்தனி அவர்களால் எழுதப்பட்டது.








Post a Comment

Previous Post Next Post