.

மணிபல்லவ நாடு அன்று ஒரே பரபரப்பாக இருந்தது. இன்னும் சற்று நேரத்தில், இந்த நாட்டை அடுத்து ஆளப்போகும் மன்னர் யார் என்று அறியும் ஆர்வத்தில் மக்கள் காத்திருந்தனர். மன்னர் மகேந்திர பூபதிக்கு ஒன்றல்ல,இரண்டு புதல்வர்கள் இருக்கிறார்கள். இரட்டையாகப் பிறந்தவர்கள் வேறு மூத்தவர் கந்தர பல்லவன், அடுத்தவர் மகேச பல்லவன். இருவரும் சரிசமமான திறன் படைத்தவர்கள். அதனால் இருவரில் யாரை அடுத்த மன்னராக்குவது என்று குழப்பமாக இருந்தது.

பெரும் யோசனைக்குப் பிறகு, இருவரில் யார் நாட்டை ஆளத் தகுதியானவர் என்பதை அறிய நான் ஒரு போட்டி வைக்கப்போகிறேன். அதில் யார் வெற்றி பெறுகிறாரோ, அவருக்கே சிம்மாசனம் என்று அறிவித்தார் மன்னர்.

மன்னர் போட்டி அறிவித்து சரியாக ஓராண்டு கடந்தோடிவிட்டது. இதோ, இன்று மன்னர் இருவரில் யார் போட்டியில் வெற்றி பெற்றவர் என்பதை அறிவிக்கப்போகும் நாள். ஆர்வத்தோடு அனைவருமே முடிவை அறிய காத்திருந்தனர்.

மன்னர் நான்கு படைகள் புடை சூழ, அமைச்சர்களோடு அந்தகாரண்யத்தை நோக்கி பயணமானார். தனக்குப் பிறகு நாட்டை ஆளப்போகும் மன்னருக்கான போட்டியை நடத்த மன்னர் தேர்வு செய்திருந்த இடம்தான் அந்தகாரண்யம், அந்தகாரண்யம் பெயருக்கேற்றாற்போல,அடர்ந்த பெருங்காடு. முள் மரங்களும் செடிகளும் ஏராளமாக மண்டிக் கிடக்கும் பெருங்காடு அது. இடையில் மழை நாட்களில் சற்றே வெள்ளம் புரண்டோடும் காட்டாறு ஒன்றும் காட்டினுள் பாய்கிறது. அதன் வடக்குப் பகுதியை சுந்தர பல்லவனிடமும் தெற்குப் பகுதியை மகேச பல்லவனிடமும் ஒப்படைத்தார் மன்னர்.

சரியாக ஓராண்டுக்குள் யார் தன் பகுதியை சிறப்பாக சீர்படுத்தி பராமரிக்கிறார்களோ, அவருக்குத்தான் நாட்டின் சிம்மாசனம் என்பதே மன்னரின் ஆணை, அதற்காக இருவருக்கும் தரை 10 ஆயிரம் பொற்காககளும் வழங்கப்பட்டன.உதவிக்கு இருவருக்கும் சில பணியாளர்களும் தரப்ப ட்டார்கள். இது தவிர, வேறு யாரும் அப்ப குதிக்குள் செல்ல அனுமதி கிடையாது.

போட்டி முடிகிற நாள் இன்று ஆவலோடு அனைவரும் அந்தப் பெருங்காட்டினுள் நுழைத்தபோது, அந்தகாரண்யத்தைக் கண்ட அனை வருக்கும் பெருவியப்பு காத்திருந்தது. காடாய் கிடந்த வடக்குப் பகுதியை பளபளப்பாக பராமரித்திருந்தார் சுந்தர பல்லவன். கல்லோ, முள்ளோ, புல்லோ இன்றி அத்தனை தூய்மையாக இருந்தது அந்தப் பகுதி.

சுந்தர பல்லவன் அனைவரையும் வணங்கி வரவேற்றார். விருந்தினர் தங்குவதற்கென கட்டியிருந்த மாளிகைக்கு மன்னர் உள்ளிட்ட அனைவரையும் அழைத்துச் சென்றார். மேலும் அந்தப் பகுதியெங்கும் மரம், செடி, கொடிகள் ஏதுமின்றி பளிச்சென்று இருந்தது. ஒரு அடர்ந்த காட்டினை வளப்படுத்தி, இவ்வளவு தூய்மையாகப் பராமரித்துவரும் சுந்தர பல்லவனுக்கு சிம்மாசனம் உறுதியென்று அமைச்சர்கள் அனைவரும் உறுதியாக நம்பினர்.

அடுத்து, தெற்குப் பகுதிக்குச் சென்றனர்.அதன் நுழைவாயிலிலேயே நின்று, அனைவரையும் அன்போடு வணங்கி அழைத்துச் சென்றார் மகேச பல்லவன். வடக்குப் பகுதி போல்,தெற்குப் பகுதியும் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்குமா என அறிய அனைவரும் ஆவலாக இருந்தார்கள். பெரும் மழைக் காலத்தில்,தெற்குப் பகுதியில் ஓடும் காட்டாற்றை எளிதாக கடந்து செல்லும் வகையில் சிறு பாலம் ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதன் அருகே பூங்காவும் அமைக்கப்பட்டிருந்தது. பூங்காவில் வண்ண மலர்களின் நறுமணம் அப்படியே மனதை ஈர்த்தது. பூங்காவைச் சுற்றி ஏராளமாக பட்டாம்பூச்சிகளும் சிறுசிறு பறவைகளும் பறந்தன.

அனைத்துப் பகுதிகளுக்கும் சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. சாலையின் இரு புறமுமிருந்த முள்மரங்கள் வேரோடு தோண்டப்பட்டு,அக்காட்டின் எல்லை வேலிகளாக ஆக்கப்பட்டிருத்தன. ஆங்காங்கே பயன் தரும் மரங்களின் கன்றுகள் ஊன்றப்பட்டிருந்தன. ஈரம் மிகுந்த இடங்களில் புல்தரை மெத்தை போல் விரிந்திருந்தது. அனைவரையும் அங்கே அமர வைத்தான் மகேச பல்லவன்.


பிறகு, அந்தக் காட்டில் விளைந்த கனிகள்,காய்கள், இளநீர், மோர் ஆகியவற்றை அளித்து உபசரித்தான். சுந்தர பல்லவன் பராமரித்தது போல் பளிச்சென்று எதுவுமில்லை. ஆனாலும்,திரும்பிய பக்கமெல்லாம் பசுமை தெரிந்தது.

மன்னர் ஏனோ முடிவேதும் அறிவிக்காமலேயே, இருவரும் வாருங்கள், நாளை அரசவை கூடட்டும் என்று கூறி புறப்பட்டுச் சென்றார்.

அடுத்த நாள் அரசவை கூடியது. மன்னர் முதலாவதாக சுந்தர பல்லவனை அழைத்தார்.கடந்த ஓராண்டில் உனது செயல்பாடுகள் பற்றிச் சொல் என்றார்.

அனைவரையும் வணங்கிய சுந்தர பல்லவன்,காட்டைச் சீர்திருத்தி, சுத்தமாக்குவது மிகுந்த சிரமமாக இருந்தது. முன்மரங்கள் வெட்ட வெட்டத் துளிர்த்தன. அதைச் செம்மைப்படுத்தவே பெரும் செலவானது. மீதமிருந்த பொற்காசில்தான் விருந்தினர் தங்க அழகிய மாளிகையைக் கட்டினேன். வடக்குப் பகுதியை பராமரிக்க 10 ஆயிரம் பொற்காசுகள் போதுமானதாக இல்லை.இன்னும் 20 ஆயிரம் பொற்காசுகளாவது வேண்டும் என்றான்.

அடுத்ததாக, மகேச பல்லவனை அழைத்தார்.அவனும் அவையை வணங்கிவிட்டு பேசத் தொடங்கினான்.

முதலில் தெற்குப் பகுதிக்கான நில வரைப டமொன்றைத் தயாரித்தேன். அதில், மழைக்காலங்களில் நீரோட்டமுள்ள இடங்களில் வாய்க்கால்களை அமைத்தோம். பள்ளமான இடங்களில் குளங்களை அமைத்தோம். தீங்கு தரும் முள்மரங்களையெல்லாம் வேரோடு பிடுங்கினோம். இருக்கிற மரம், செடி கொடிகளைச் சேதப்படுத்தாமல், அப்படியே பூங்காக்களாக மாற்றினோம். கால்நடைகள் வளர்ப்பதற்கான ஏற்ற சூழலை உருவாக்கினோம். தோட்டங் களில் கீரைகள், காய்கறிகள், மா, பலா, வாழை ஆகியவற்றை பயிரிட்டோம். நீங்கள் அளித்த 10 ஆயிரம் பொற்காசுகளில் இன்னும் 20 ஆயிரம் மிச்சமிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் நாங்கள் பயிரிட்டிருக்கும் நிலங்களில் அறுவடை செய்யவிருக்கிறோம். அதிலிருந்து போதுமான வருவாய் கிட்டிவிடும். இனி, மன்னர் எங்கள் பகுதிக்கு ஏதும் தர வேண்டி யதில்லை என்று மகேச பல்லவன் கூறினார்.

மன்னர் சிம்மாசனத்தை விட்டு எழுந்து பேச ஆரம்பித்தார். அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். இருவரும் காட்டை சீர்படுத்தி பராமரித்து வருவதைப் பார்த்து. முதலில் முடிவெடுக்க முடியாத குழப்பத்துக்கு ஆளானேன். பிறகு யோசித்தேன். சுத்தம், தூய்மை என்பது வெறும் பளபளப்பில் மட்டுமல்ல, அது எவருக்கும் இடையூறு செய்யாமலும் இருக்க வேண்டும்.

ஒரு நாடென்பது மனிதர்கள் மட்டும் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இல்லாமல், ஏனைய உயிர்களும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இதை வைத்து பல கோணங்களில் யோசித்தேன்,நீண்டகாலத் தேவையின் அடிப்படையில் ஒரு நாட்டின் நிலைத்த வளர்ச்சிக்கான செயல்பாடுகளை சரியாய் முன் கூட்டியே திட்டமிட்டு, அனைவரையும் குழுவாய் இணைத்து செயல்பட்ட மகேச பல்லவனே அடுத்த அரசனாக அரியணை ஏற தகுதி பெற்றவன் என்றார்.

மன்னர் சொல்லி முடித்ததும், சபாஷ்... சரியான தேர்வு என்று அனைவரும் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். சுந்தர பல்லவனும் ஓடோடி வந்து, மகேச பல்லவனின் கழுத்தில் பூமாலை சூடி. மகேச பல்லவனின் தலைமையின் கீழ் நடைபெறவுள்ள இந்த மணிபல்லவ நாட்டின் வளர்ச்சிக்கு நானும் என்றும் உறுதுணையாய் இருப்பேன்.! என்று முகம் மலரக் கூறினான்.

வாழ்க... வாழ்க.. மணிபல்லவ நாடு எனும் முழக்கம் விண்ணதிர எதிரொலித்தது.



Post a Comment

Previous Post Next Post