.

எம்மைச் சுற்றி நிகழும் பல்வேறு மாசுகளைப் போன்றே ஒலி மாசும் மனித வாழ் நிலையை பெருமளவு பாதிக்கின்ற காரணியாகத் திகழ்கிறது. உலகத்தில் மனிதர்களால் பேசப்படும் மொழிகள் அனைத்தும் ஒலிகளை அடிப்படையாகக் கொண்டே தொடங்கின. பறவைகள், விலங்குகள், பூச்சிகள், வாகனங்கள்,தொழிற்சாலைகள் என ஒலிகளின் பிறப்பினை எத்தனையோ வடிவங்களில் நாம் அன்றாடம் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். செவிக்கும் புலனுக்கும் இனிமை தருகின்ற இசை, பாடல் ஆகியவையும் ஒலியிலிருந்தே பிறக்கின்றன.ஏதோ ஒரு சூழலில் ஏதுமற்ற அமைதி நிலவினால் கூட, எம்மால் அதனை சகித்துக்கொள்ள இயலுவதில்லை.

எம்மைச் சுற்றி ஏதேனும் ஒலித்துக் கொண்டிருப்பதை மனித மனம் எப்போதும் விரும்புகிறது. அந்தளவிற்கு சத்தங்களோடு பிறந்து,வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதே நேரம் அளவுக்கு மீறிய ஒலியையும் எம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. இசையின் ஒலியில் மயங்கிப் போகின்ற எமது மனம்,அதே இசை பெரும் இரைச்சலோடு வெளிப்படும்போது முகம் சுழித்துக் கொள்கிறோம்.

காதொலிக் கருவி மூலம் பாடலைக் கேட்டு மகிழும் நாம், அதே பாடல் வீட்டுத் தெரு முனையில் ஒலிபரப்பானால், அதை எம்மால் கேட்க முடிவதில்லை. இதற்குக் காரணம் ஒலியின் அளவேயாகும். காதால் கேட்கப்படும் இசையின் அளவை மீறும் பட்சத்தில் அது இரைச்சலாக மாறிவிடுகிறது. அச்சமயம் எமது இரு காதுகளையும் உடனே இறுகப் பொத்திக் கொண்டு, அந்த ஒலி கேட்கும் அளவை குறைத்துக்கொள்ள முயற்சி செய்கிறோம். அல்லது அந்த இடத்திலிருந்து விடுபட முயற்சிக்கிறோம்.

ஒலிகளின் நூற்றாண்டுக்குள் நாம் வாழ்ந்து வருவதனால், நம்மைச் சுற்றி ஒலிகளின் அத்துமீறல் மிகக் கடுமையாக நடந்துகொண்டிருக்கிறது. அதிலும் தொலைக்காட்சி, வானொலி ஆகியவை பல்வேறு புதிய வடிவங்களில் எமக்குள் ஊடுருவிக் கொண்டேயிருக்கின்றன.இன்று வானொலி ஒலிக்காத வீடுகளே இல்லை.தொலைக்காட்சியின் தொடர்கள் ஒளிக்காத இல்லங்களைக் காணுவது அரிது என்ற நிலைக்கு ஒலி, ஒளியின் அத்துமீறல் மிகப்பெரும்
வீச்சில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

அதிகமாக ஒலியை எழுப்பும் அவசர மருத்துவ ஊர்தி, விமானங்களின் இரைச்சல், தொழிற்சாலைகளினால் ஏற்படும் சத்தம், பரபரப்பான, கடைத்தெருவில் ஏற்படும் சத்தம், போக்குவரத்து நெரிசல், வீதிகளில் எழும் இரைச்சல்,தொடரூந்தின் சத்தம் போன்றவைகளால் எழுப்பப்படுகின்ற ஒலி, காதுகள் கேட்கும் சராசரி அளவைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கின்றன. இதனால் செவித்திறன் குறைபாடு ஏற்படுவதுடன், சுவாச நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆளாகுகின்ற அதேவேளை,ஒலி மாசுவை அதிகரிக்கச் செய்கின்ற விடயங்களாகவும் அமைகின்றது.

ஓரிடத்தில் ஒலியளவு அதிகரிப்பதால் மனித நடத்தையில் மாற்றம் ஏற்படுகிறது. வாகனங்களின் இடைவிடாத அதிகபட்ச ஒலி மாசு,தொடர்ந்த இரைச்சல், பரபரப்பு ஆகியவற்றால் மூச்சுவிடுவதில் சிரமம், காது கேளாமை, மந்தம், போதியளவு தூக்கமின்மை, கோபம், மன அழுத்தம் மற்றும் அதிக இரத்த அழுத்தம், உடற் சோர்வு, தலைவலி, சமிபாட்டுப் பிரச்சினை,நெஞ்சு எரிச்சல், இதய நோய்கள் போன்றன ஏற்படுகின்றன.மேலும் அனச்சுரப்பி, நரம்பு, இரத்த நாடி போன்ற தொகுதிகள் பாதிப்படைவதுடன், ஒலி இரைச்சலை ஏற்றுக்கொள்ளும் பகுதிகளிலும் நோய்கள் ஏற்பட்டு மனிதனின் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டு கேட்கும் திறனில் மந்தம் மற்றும் உற்பத்தியில் இழப்பீடு, உணர்வுகள் மற்றும் செயல்கள் போன்றவற்றையும் பாதிக்கின்றது.இந்த விளைவால் பாதிக்கப்படுகின்றவர்களின் வயது, பாலினம் மற்றும் கேட்கப்படும் திறனின் காலம் போன்றவற்றை பொறுத்து அமைகிறது.

ஒலி மாசு தொடர்பில் உலக நல்வாழ்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,உலகிலுள்ள 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 5 சதவீதத்தினர் ஒலி மாசு காரணமாக செவியின் கேட்புத்திறனை இழந்துள்ளதாகவும் ஒருவருக்கு கேட்கும் திறனின் உச்ச அளவைவிட மேலதிகமாக உணரும் அனைவரும் தலைவலி,சோர்வு, தலைச்சுற்று போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் இயந்திரத் தொழிற்சாலை களில் பணியாற்றுவோரில் நான்கில் ஒரு பகுதியினர் செவித் திறனை இழந்து, பல்வேறு நோய்களால் அவதிப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களின் மின்னனு ஒலிப்பான்களை ஒவ்வொரு வாகனங்களுக்கு ஏற்றாற்போல் அதன் அளவை மீறாத வகையில் ஒலிப்பான்களை வரையறை செய்தல் வேண்டும். குறிப்பிட்டளவு ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்களை மட்டும் பொருத்துவதற்கு வாகனத் தயாரிப்பு நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக, மாசுக் கட்டுப்பாட்டு ஒலியின் அளவை இடத்திற்கேற்ப அடையாளப்படுத்துவதுடன்,அந்தளவினை மீறுகின்றவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.ஒலி மாசு மனிதனை மட்டுமன்றி இயற்கையைச் சார்ந்து வாழும் உயிரினங்களையும் பாதிக்கிறது. குறிப்பாக பறவை இனங்களின் வாழ்க்கைத்திறனை ஒலி மாசு அதிகளவில் பாதிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று கடல் பகுதியில் மனிதர்களால் நிகழ்த்தப்படும் ஒலி மாசின் காரணமாகவும் கடலில் பெருகிவிட்ட கப்பல் போக்குவரத்தாலும் கடல் வாழ் உயிரினங்களின் சுதந்திரம் இழக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் இறந்துபோகின்ற நிலைக்கும்கூட தள்ளப்படுகின்றது.

சுற்றுலா என்ற பெயரில் காடுகளுக்குள்ளும் மலை வாழிடங்களிலும் நடைபெறும் ஒலி மாசுவால் அங்குள்ள காட்டு விலங்குகள் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகின்றன. அமைதியான சூழலில் வாழ விரும்பும் அனைத்து காட்டுயிர்களின் நிம்மதி, மனிதர்களின் நடமாட்டத்தால் குலைக்கப்படுகிறது. இதனால் பல்லுயிர்ச் சூழலுக்கு பெரும் கேடு ஏற்படுகிறது.

மனிதன் தனது சுயநலத்தால் பிற உயிர்களை மட்டுமன்றி, தன்னையும் அழித்துக்கொள்கின்ற பேரவலம் ஒலி மாசுவின் காரணமாக நிகழ்த்தப்படுகிறது. இதனைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க அரசும் தனியார் நிறுவனங்கள் மட்டுமன்றி தனி நபர்களும் முன்வருதல் வேண்டும். பொதுக் கூட்டம் நடைபெறும் இடங்களை நகருக்குள் அனுமதித்தல் கூடாது.பாடசாலை மற்றும் கல்லூரி, வணிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பேரணி நடத்தவோ,பொதுக் கூட்டம் நடத்தவோ இசைவளிப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இயற்கை சார்ந்த சுற்றுலாவை குறிப்பாக, வனச் சுற்றுலாவை ஊக்குவிப்பது சிறிது சிறிதாகக் குறைக்கப்பட வேண்டும்.



பொதுவாக அனைத்து நகர்ப் பகுதியிலும் மரங்கள் பெருமளவில் நடப்பட்டு, பேணிப் பாதுகாக்கப்படுதல் வேண்டும். கடல் பகுதியில் நடைபெறும் கப்பல் போக்குவரத்து கண்காணிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்குட்ப டுத்தப்பட வேண்டும். கடல்வாழ் உயிரினங்களுக்கும் பல்லுயிர்ச் சூழலுக்கு குந்தகம் நேராத வகையில் கப்பல் போக்குவரத்தை ஒழுங்கு செய்வது அவசியமாகும்.

நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருக்கும்.ஆனால் பல்வேறு காரணிகளால் இன்று சுற்றுச் சூழல் மாசடையும் நிலையுள்ளது. காற்று வெளி மாசு, நீர் மாசு, மண் மாசு, கடல் மாசு, உணவு மாசு, கதிரியக்க மாசு, ஒலி மாசு எனப் பல உதாரணங்களைக் கூறமுடியும். சுற்றுச் சூழலில் மாசு ஏற்படாதவாறு கட்டுப்படுத்துவது அல்லது கண்காணிப்பது அரசின் கடமை என எண்ணி விடக்கூடாது. தனி மனிதன் ஒவ்வொருவருக்கும் சுற்றுச் சூழலைக் காக்கும் கடமையுள்ளது.

கல்வியறிவு பெற்ற நாம், தொழிற்சாலைகளை உருவாக்க கற்றுக் கொள்கிறோம். ஆனால்,அதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்க முற்படுவதில்லை. நாம் பெற்ற கல்வியைக் கொண்டு சிந்தித்தால் வெற்றி பெறுவது எளிதாகும். மாறாக கற்ற கல்வியால் எமது சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி சிந்திக்காமல் இருப்போமானால் எதிர்கால சந்ததிகளுக்கு அது கேடாக அமைந்துவிடுகின்றது.எமது சந்ததியினரின் எதிர்காலக் கனவுகள் எம் கைகளில்தான் உள்ளது என்பதை நாம் சிந்தித்து
செயற்பட வேண்டும்.

தற்போதைய நிலையில் மிகவும் அவசியமான, தேவையான ஒன்றாகக் கருதப்படும் இந்த ஒலி மாசு, எமது நாட்டின் அனைத்து நகரங்களிலும் விரைந்து உருவாக்கப்படுதல் வேண்டும். இதன் மூலம் ஒலி அளவை தொடர்ந்து கண்காணிப்பதுடன், வரையறுக்கப்பட்ட ஒலி அளவை அந்தந்த இடங்களில் எச்சரிக்கைப் பலகையாக அமைத்து வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் அறிவுறுத்தல் வழங்குவது மிகவும் அவசியமாகும்.

சுற்றுச் சூழல் என்பது தனி மனித சொத்தல்ல.அது பொதுச் சொத்தாகும். சுற்றுச் சூழல் மாசு பாடுகளை நாமேதான் ஏற்படுத்துகின்றோம்.இதைத் தடுக்கவேண்டிய ஆற்றல் எம்மிடமே உள்ளது. எமது வாழ்க்கையையும் எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தையும் பேணிக் காக்க சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்தி ருப்பது எம் ஒவ்வொருவரினதும் கடமையும் பொறுப்புமாகும்.





Post a Comment

Previous Post Next Post