.

ஜோசப் மர்பியினால் எழுதப்பட்ட ஆழ்மனதின் அற்புத சக்தி என்னும் புத்தகம் எமது ஆழ்மனதிலுள்ள இரகசியங்களை புதையலை வெளிக் கொண்டு வரும் வகையில் அமைந்துள்ளது.எமது எண்ணங்கள்தான் வாழ்க்கை என்பதை உரக்கச் சொல்கிறது.எமது ஆழ்மனதை எப்படிப் பயன்படுத்துவது பயன்படுத்தி எவ்வாறு வெற்றியடைவது,கவலைகளை விட்டொழிப்பது, நமக்குத் தேவையான விடயங்களை அடைவது எவ்வாறு என்பன பற்றி விளக்கியிருக்கிறார் மர்பி.முன்னோர்கள் சொல்லி வைத்தது போல் எண்ணங்கள்தான் வாழ்க்கை என்பதையும் ஒருவருடைய எண்ணங்கள் அவருடைய வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதையும் விளக்குகிறது இந்நூல்.

இருபது அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டிருக்கும் இந்நூல் ஒவ்வொரு அத்தியாயத்தையும் நிதானமாக விளக்குகிறது.அத்தியாயங்களாவன உங்களுக்குள் ஒளிந்திருக்கும் புதையல்,உங்கள் மனம் எப்படி இயங்குகிறது,அற்புதங்களை நிகழ்த்தும் ஆழ்மனதின் சக்தி,பண்டைய மனநல மருத்துவம்,நவீன மனநல மருத்துவம்,மனநல மருத்துவத்தில் நடைமுறை உத்திகள்,ஆழ்மனதின் போக்கு வாழ்வின் உயிரோட்டம் குறித்ததே,நீங்கள் விரும்பும் விளைவுகளைப் பெறுவது எப்படி,ஆழ்மனதின் சக்தி கொண்டு சொத்துக்களைக் குவிப்பது எப்படி,செல்வந்தராவது உங்களது பிறப்புரிமை,உங்கள் ஆழ்மனம் உங்கள் வெற்றிக் கூட்டாளி, அறிவிய லறிஞர்கள் ஆழ்மனதை எப்படிப் பயன்படுத்துகிறனர், ஆழ்மனதை உபயோகித்து உறக்கத்தின் அற்புத பலன்கனைப் பெறுவது எப்படி, ஆழ்மனதை உபயோகித்து இல்லறப் பிரச்சனைகளைத் தீர்ப்பது எப்படி?,ஆழ் மனதை உபயோகித்து மகிழ்ச்சியாக இருப்பது எப்படி,?ஆழ்மனதை உபயோகித்து மன்னிக்கும் மனநிலையைப் பெறுவது எப்படி, ஆழ்மனதை உபயோகித்து மனத்தடைகளைக் களைவது எப்படி?,ஆழ்மனதை உபயோ கித்து பயத்தைப் போக்குவது எப்படி,ஆழ்மனதை உபயோ கித்து மனத்தளவில் இளமையாக இருப்பது எப்படி என்பனவே அவையாகும்.

ஒவ்வொரு அத்தியாயங்களும் வாசிக்க வாசிக்கப் பயன் நிறைந்ததாகும். வெற்றியாளர்களின் கதைகளும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது.தான் பிரயோகித்து வெற்றி பெற்றவைகளையும் தான் சிபாரிசு செய்தவர்களின் கதைகளையுமே சொல்லியிருக்கிறார் மர்பி.இதன் உண்மைத் தன்மைகளை வாசகர்கள்தான் பரிசீலித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.மற்றபடி நூலாசிரியர் இதற்குரிய பொறுப்பை எடுத்துக் கொள்ள மாட்டார் போலிருக்கிறது ஆனால் ஒரு விடயம் பளிச்சென்று புரிகிறது நேர்மறைச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள இப் புத்தகம் நிச்சயம் உதவும்.எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டு இருக்க முடியாது.கவலைகளை விட்டொழியுங்கள மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்குங்கள்; நீங்கள் நினைத்தது நடக்கும் என்கிறார் மர்பி.

எங்களுடைய சொந்த ஆழ்மனதில் குடிகொண்டுள்ள சக்தி எப்போதும் அழிக்க முடியாததாகும் என்கிறார் மர்பி.அதாவது நீங்கள் ஒருமுறை இந்த சக்தியை கண்டு பிடித்து விட்டீர்கள் என்றால் உங்களது வாழ்க்கைக்குள் அதிகமான சக்தியையும் செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் கொண்டு வர முடியும் என்கிறது இந்நூல்.ஆழ்மனதினுடைய சக்தி கொண்டு நீங்கள் மிகச்சிறந்த துணையையும் சரியான வியாபாரக் கூட்டாளியையும் உங்கள் பக்கமாக ஈர்க்க முடியும்.அதன் மூலம் உங்களுக்குத் தேவையான பணத்தையெல்லாம் ஈர்க்க முடியும் என்பதோடு அதற்கான உத்திகளையும் இந்நூலில் விளக்கியிருக்கிறார் மர்பி.

இப் புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் மனதின் விதிகளை எப்படி நடைமுறைப் படுத்துவது என்பதைப் பற்றிய திடமான தெளிவான விளக்கங்களை வழங்குகிறது.இவற்றைக் கற்றுக் கொண்ட பிறகு ஏழ்மைக்கு மாறாக செழிப்பையும் மூடநம்பிக்கை அறியாமைக்கு மாறாக பேரறிவையும் உள்மனப் போராட்டத்திற்குப் பதிலாக அமைதியையும் தோல்விக்குப் பதிலாக வெற்றியையும் வருத்தத்திற்கு மாற்றாக மகிழ்ச்சியையும் இருளுக்கு மாறாக வெளிச்சத்தையும் பயத்திற்கு மாறாக துணிவையும் தன்னம்பிக்கையையும் வாசகர்கள் உணர்வீர்கள்.அதற்கு நீங்கள் இவ் உத்திகளை பயன்படுத்திப் பார்க்க வேண்டும்.


என்னால் முடியாது இதைச் செய்ய இயலாது,எனக்கு வசதியில்லை போன்ற சொற்றொடர்களை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள் என்கிறது இப் புத்தகம்.மாறாகப் பயன்படுத்தினால் உங்கள் ஆழ்மனம் அவற்றை ஏற்றுக் கொண்டு நீங்கள் விரும்பும் பணம் வலிமை என்பன உங்களிடம் இல்லாமல் செய்து விடும்.அதனால் நீங்கள் என் ஆழ்மனதின் சக்தியைக் கொண்டு என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று தொடர்ந்து கூறி வாருங்கள் என்கிறார் மர்பி.உங்கள் ஆழ்மனதின் சக்தி உங்களை குணப்படுத்த வல்லது உதவேகமூட்ட வல்லது,பலப்படுத்த வல்லது,வளமாக்க வல்லது அதனால் ஆழ் மனதை நம்புங்கள் என்கிறார் மர்பி.அதாவது எண்ணங்களை மாற்றுங்கள் உங்களது தலைவிதியையே மாற்றி அமைத்து விடலாம் என்கிறார் மர்பி.

எங்களுடைய ஆழ்மனமானது எதையும் ஒப்பிடுவதில்லை,வேறுபடுத்திப் பார்ப்பதுமில்லை,தானாக சிந்திப்பதுமில்லை.பகுத்தறிவதும் சிந்திப்பதும் வெளிமனத்தின் வேலையாகும்.வெளி மனதிலிருந்து பெறப்படும் கட்டளை களிற்கேற்பவே ஆழ்மனம் செயற்படுகிறது.அது தானகச் செயற்பாடாது. தனக்கு கொடுப்பவற்றை ஏற்றுக் கொண்டு வெறுமனெ செயற்படுத்துகிறது. நாம் எம் வெளி மனதினால் என்ன கட்டளையைக் கொடுக்கி றோமோ அதுதான் நடைபெறும்.இருக்கிறது என்று நினைத்தால் அவ்வுறவு எம்முடன் இருக்கும் பிரிந்துவிடுவோம் என்று நினைத்தால் அவ்வெண்ணங்கள் அதைச் செயற்படுத்தும் என்கிறது இந் நூல்.

உன்னால் முடியாது,நீ அதைச் செய்யக் கூடாது,நீ தோற்று விடுவாய்,நீ தவறானவன்,அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை,உன்னால் வெல்ல முடியாது போன்ற எதிர்மறை எண்ணங்கள் எங்கள் வாழ்க்கையைச் சீரழித்து விடுகிறன. இத்தகைய புறத் தூண்டுதல்களை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. இவ்வாறான எதிர்மறை எண்ணங்களை அடியோடு களைந்து நேர்மறை எண்ணங்களைத் தோற்றுவிக்க இந்நூல் நிச்சயம் உதவும்.

தண்ணீர் எவ்வாறு தான் பாய்ந்து செல்லும் குழாயின் வடிவத்தை எடுத்துக் கொள்கிறதோ,அது போலவே உங்களுக்குள் இருக்கும் வாழ்க்கைக் கோட்பாடும் உங்கள் எண்ணங்களின் வாயிலாக உங்கள் ஊடாகப் பாய்ந்து செல்லும்.எனவே எண்ணங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார் மர்பி.

ஆழ்மனதைப் பயன்படுத்தி செல்வத்தை குவிப்பது எப்படி என்றும் உறவுகளி ற்கிடையிலான பிரச்சனைகளை எவ்வாறு தீர்ப்பது என்றும் பிரிந்த உறவுகளை எவ்வாறு மீண்டும் இணைப்பது என்பதைப் பற்றியும் இந்நூல் கூறுகிறது வாசகர்கள் இந்நூல் குறிப்பிட்ட முறைகளைப் பின்பற்றி வெற்றியடைய வேண்டும் என்பதே நூலாசிரியரின் விருப்பமாகும்.அவர் குறிப்பிட்டுள்ள முறைகள் எளிய முறைகளாகும்.அனைவரும் பின்பற்றக் கூடியது. அவற்றை நீங்கள் புத்தகத்திலேயே தெரிந்து கொள்ளுங்கள்.

எங்களுடைய ஆழ்மனமானது எப்போதும் முதுமையடைவதில்லை. அதற்குக் காலம் வயது முடிவு என்று எதுவும் இல்லை. அதற்குப் பிறப்பு இறப்பு என்று ஏதும் இல்லை.சிதைவகளிற்கும் அழிவுகளிற்கும் பொறுப்பு வயது மட்டுமல்ல. நம் உடலில் ஏற்படும் முதுமைக்குக் காரணம் காலம் அல்ல.காலத்தைக் குறித்த பயம்தான் என்கிறார் மர்பி.முதுமை என்பது வருடங்களின் அஸ்தம னமல்ல. அது ஞானத்தின் உதயம் என்கிறது இந்நூல்.

மொத்தத்தில் இப்புத்தகமானது இதுவரை வெளிவந்துள்ள சுய முன்னேற்றப் புத்தகங்களில் மிகப் பாராட்டப்படுகின்ற புத்தகமாகும்.உலகெங்கிலுமுள்ள அனேக மக்கள் தங்கள் சிந்தனைகளை மாற்றிக் கொண்டதன் மூலம் நம்புவதற்கரிய இலக்குகளை இடைய இப் புத்தகம் உதவியுள்ளது.நீங்கள் எதனை அடைய வேண்டுமென்றாலும் அதன் மீது ஆழமான நம்பிக்கை வைத்து அதை உங்கள் மனத்திரையில் ஓட விட்டால் நிச்சயம் அதை உங்களால் அடைய முடியும்.

மர்பியின் புரட்சிகரமான சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ள வாழ்வில் சுலபமாகப் பயன்படுத்தக் கூடிய எளிய உத்திகளை நீங்கள் பயன்படுத்தினால் உங்களுக்கும் உங்கள் மாபெரும் கனவிற்கும் குறுக்கே நிற்கும் மனத்தடைகளை உடைத்தெறிந்து உங்களால் வெற்றி நடை போட முடியும்.வாசிப்போம்.

ஆழ் மனதின் அற்புத சக்தி புத்தகத்தினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.

You have to wait 30 seconds.

Generating Download Link...

Post a Comment

Previous Post Next Post