நம் கடவுள் சாதி காப்பாற்றும் கடவுள்
நம் மதம் சாதி காப்பாற்றும் மதம்
நம் அரசாங்கம் சாதி காப்பாற்றும் அரசாங்கம்
நம் இலக்கியம் சாதி காப்பாற்றும் இலக்கியம்
நம் மொழி சாதி காப்பாற்றும் மொழி
இதை நான் கூறவில்லை, பெரியார் கூறியதாக ஆசிரியர் சரவணன் அவர்கள் இக்கட்டுரையில் கோட்டிட்டுக் காட்டுகிறார்
ஆசிரியர் சரவணன் அவர்கள் தான் சொல்ல வந்த விடயத்தை வாசிப்போர் ஆகிய எங்களை தனது சிந்தனைக்குள் இழுத்துச் செல்வதை இந்த நூல் மிக அழகாக எடுத்துச் செல்கின்றது
இன்று நான் ஒரு பூப்புனித நீராட்டு விழாவுக்குச் சென்று வந்தேன். அங்கே சில ஆண்டுகள் தவறவிட்ட எனது நண்பனின் மச்சானைக் கண்டேன். அவர் ஒரு மீன்பிடித் தொழிலைக் கொண்ட சாதிப் பரம்பரையில் வந்தவர். அவரிடம் வழமைபோல் உரையாடினேன். அவரோடு சேர்ந்து. டீ யும் குடித்தேன். ஒரு சிலர் எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்துச் சென்றனர். அதைப் பொருட்படுத்தாது நாம் உரையாடினோம். நான் எனது சாதியை அவரிடம் கூறிவிட்டே தொடர்ந்தோம்.
அவர் கூறிய வார்த்தை என்னைக் கொஞ்சம் சிந்திக்க வைத்தது. சக நண்பர்களுடனோ அல்லது ஏனைய நமது மொழி பேசும் மக்களிடமோ நான் கதைக்கும் போது மிகவும் பயந்து பயந்து தான் கதைக்கிறேன் என்றார். ஏன் என்று கேட்டேன்,அதற்கு அவர், எங்கே எனது சாதியைத் தெரிந்துவிட்டால் மிகவும் தொலைவில் வைத்துவிடுவார்களோ என்று எண்ணியே அவர் தனது நட்பைப் பாதுகாப்பதாக ஆதங்கப்பட்டார்.
இலங்கையைப் பொறுத்த மட்டில் ஒரு மனிதனின் பிறப்பிடம் எங்கு என்று தெரிந்துவிட்டால், அவன் இன்ன சாதி தான் என்று தெரிவதற்குத் தீயைவிட வலுவான வேகம் கொண்டு பரப்பக்கூடிய மக்கள் கூட்டம் அலைமோதுவதை அவதானிக்கலாம்.
இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்கு முன், பின், மற்றும் இன்றைய சூழ்நிலையில், சாதியின் கொடுமைகளில் பெரிதாக மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை. (விடுதலைப் புலிகள் காலத்தில் நிகழ்ந்த மாற்றமாகக் கூறப்படுவது ஒரு சார்பு நிலை என்றே அறியப்படுகிறது).
உலக வளரும் நாடுகளில் சாதியின் பங்கு, இலங்கையில் வெளிப்படையாக சொல்லப்படாமல் விட்டாலும், இன்றும் கூட அதன் தாக்கம், பூமியின் நடுப்பகுதியில் தகதக வென்று கொதித்துக்கொண்டிருக்கும் குழம்பு பேன்ற மன நிலயில் தான் ஆதிக்க சாதியினர் இருப்பதாக கூறப்படுகிறது. அது சங்கிலி போல் புலம்பெயர்ந்த நாடுகளிலும் கொடிகட்டிப் பறப்பதை உணரமுடிகிறது.
நண்பர்களே,
# *தலித் - தலித்தியம்* என்றால் என்ன?
# *அருந்ததியர்* என்று குறிப்பிடுவது யாரை?
# *இலங்கையில் வாழும்* அருந்ததியரின் பூர்வீகம் எங்கே?
# *சாதி வசைபாடலின் வடிவம் எப்படி?
# *பஞ்சமரை விடத் தாழ்த்தப்பட்டவர்கள் யார்?
# *சாதியூறிய மொழியின் வடிவம் எப்படி?
# *தமிழனுக்குக் கொடுக்பப்பட்ட நிறம் என்ன?
இது போன்ற 32 வகையான சிறு தலையங்கங்களை உள்ளடக்கி ஆராய்கிறார் ஆசிரியர் என். சரவணன் அவர்கள்.
அருந்ததியர் என்ற ஒரு இனம் இலங்கையில் இருப்பதாக இப் புத்தகத்தின் மூலம் அறிந்து ஆச்சரியப்பட்டேன். இதுவரை காலமும் பஞ்சமரைத் தான், கிட் ட வராதே அங்கேயே விலகிநில் என்று ஆதிக்க சாதியினரால் ஒதுக்கப்பட்டவர்கள் என்பதனை, அதனைக் காட்டிலும் மிகக் கீழ்மையான நீ துப்பரவு செய்யும் வேலைக்குத்தான் லாயக் என்று போற்றப்படும் இனமான இந்த அருந்ததியர் இருந்துள் ளமையும், ஏன் தற்போது கூட அவர்களது அடுத்த நேர சாப்பாட்டிற்குப் பிச்சை எடு க்கும் நிலையிலேயே வாழ்ந்து (இலங்கையில்) வருவதை ஆசிரியர் என். சரவணன் அவர்கள் தனது மிக நீண்ட தேடலுக்குப் பின் இங்கே பதிவு செய்கிறார்.
குறிப்பாக சக்கிலியன் யார்? அவர்கள் தலித்துக்களில் இருந் து வேறுபட்டவர்களா?
இது போன்ற கேள்விகளை நாம் எங்களுக்குள்ளே கேட்கும்போது, எங்கள் உள்ளத்தை அது குடைந்து எடுக்கின்றது .
ஆசிரியர் என். சரவணன் அவர்கள், இங்கே இலங்கையில் மூன்று விதமான சாதியை அடிப்படையாக கொண்டு, அதனை வடகிழக்கு, மலையகம், சிங்களமக்கள் ஆகிய பகுதிகளில் ஏற்பட்டு, நடைமுறை வாழ்க்கையில் அதன் வீரியத்தைப் பல கோணங்களில், பல உதாரணங்களுடன், தனது நேரடி உரையாடல் மூலம் அதனைத் தெளிவாக்குகிறார்.
சக்கிலியன் என்ற சொல்லாடல் இந்த உலகத்தைவிட்டு அறவே ஒழித்துக் கட்ட வேண்டும் என்றே ஆசிரியர் கடுமையாக விமர்சிப்பதையும், அதனால் அருந்ததியர் தமது வாழ்க்கையில் அனுபவித்துவரும் துன்பங்களை அறிந்து கொள்ள, நண்பர்களே கண்டிப்பாக வாசியுங்கள்.
தலித்தின் குறிப்புகள் என்று கொடுத்தாலும், இப் புத்தகத்தில் பலதரப்பட்ட, இந்தக் கூட்டுக்குள் இருந்து வெளியே வரமுடியாதா? எனத் துடிக்கும் அவர்களது நிலமையை, ஏன் அவர்கள் அகமணத்தை இன்றும் கைவிடாமல் பின்பற்றுகிறார்கள், அவர்களது குலதெய்வங்கள் எவரால் இந்துக் கோயிலாக மாறியது, எங்கு சென்றாலும் மற்றவர்களால் அரவணைக்கும் வசைச்சொலைத் தாங்கிய வண்ணம் நடப்பது, இது போன்ற பல முக்கிய குறிப்புகளை நீங்களும் உற்று நோக்குங்கள் என்று தருகிறார் ஆசிரியர்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அருந்ததியர் அவர்கள் தொடர்ந்தும் தங்களது தாய்மொழியான தெலுங்கையே பேசு கிறார்கள். (தமிழும் கதைப்பார்கள்) தங்கள் சமூகத்திலிருந்து வெளியே வருவதற்கான அவர்களது முயற்சிகளை ஆசிரியர் இங்கே எடுத்துக் கூறத் தவறவில்லை. அதன் ஒரு பகுதியாக, அவர்கள் சிங்கள மொழியைக் கற்றல், கிறிஸ்தவ சமயத்தில் இணைதல், தங்களுக்கென்று சங்கங்கள் அமைத்து அதன் மூலம் தமது உரிமைகளை பெற, மாற்ற முயற்சித்தல், இது போன்ற அறியாப்படாத அதிக செய்திகளை ஆவணப்படுத்தியுள்ளார் ஆசிரியர். அவருக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
இதிலே வெள்ளைத் திமிரும் வெள்ளாளத் திமிரும் என்ற தலையங்கத்தில் 3 பிரிவுகளாகத் தந்துள்ளார் ஆசிரியர். கண்டிப்பா இதற்காவுதல் வாசிப்பாளர்கள் அறிந்து கொள்வது அவசியம் என்றே தோன்றுகின்றது.
உண்மையில் எமது சில உதாசீனமான வார்த்தைகளை என். சரவணன் அவர்கள் நினைவு படுத்துவது இங்கே குறிப்பிடத்தக்கது. (உண்மையும் தான்).
குறிப்பாக, இலங்கை மக்கள் சாதியை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள், எதில் எல்லாம் அது ஊடுருவி நிற்கின்றது, புலம்பெயர் வாழ்விலும் அதன் ஆட்டம் எப்படி ஆடுகிறது, இனி வரும் அடுத்த சந்ததியினரின் உள்ளங்களில் எப்படி விதைக்கின்றார்கள், வெளியே சொல்லிக் கொள்வது சாதியாவது மண்ணாங்கட்டியாவது என்று சொல்லுவார்கள், ஆனால் தங்களது சொந்த வாழ்க்கையில் உடும்புப்பிடி போல் இருப்பார்கள். இது போன்ற விடயங்களை உதாரணங்களுடன் வாசிக்கக் கூடியதான ஒரு சிறந்த நூல் என்றே சொல்லலாம்..நான் இங்கு குறிப்பிட்டதைத் தவிர இன்னும் அதிக, உறுதியான பதிவுகளை நீங்களும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என்று கூற ஆசைப்படுகிறேன்.
இங்கே நான் எல்லாவற்றையும் குறிப்பிட்டு விட்டால் புத்தகத்தை வாசிப்பது போல் ஒரு அனுபவம் ஏற்பட்டு விடும், அதனால் மேற்கொண்டு அதிலுள்ள பல உன்னதமான சிந்திக்கக்கூடிய பகுதிகளை இதிலே நான் குறைத்துக் கொள்கின்றேன்.
@பொன் விஜி - சுவிஸ்.
Post a Comment