.

காசி நாட்டை, கார்மேகம் என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். ஒருநாள் இரவு, அரண்மனை உப்பரிகையில் காற்று வாங்கியபடி படுத்திருந்தார். திடீரென, 'இந்த உலகத்தில் ஆசையில்லாதவர் உண்டா' என்று அறியும் ஆவல் ஏற்பட்டது. அமைச்சர்கள் மற்றும் படைத் தளபதியை அழைத்து, ஆர்வத்தை தெரிவித்தார்.அனைவரும் அமைதியாக இருந்தனர்.

மறுநாள்-

செலவுக்குத் தேவையான பணத்துடன், மாறு வேடம் போட்டு புறப்பட்டார் மன்னர்.ஒரு கிராம எல்லையை அடைந்தார். அங்கே, வயலுக்கு ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்தவரிடம்,'இதோ பாரப்பா... நீ மட்டும் ஏற்றம் இறைத்துக் கொண்டிருக்கிறாயே... இன்னொருவரையும் வைத்துக் கொண்டால்,மாறி மாறி இளைப்பாறி இறைக்கலாமே...' என்றார்.

ஏற்றம் இறைத்தவர், 'உனக்கு விபரம் புரியாது, நீ விவசாயம் செய்திருந்தால், அதில் உள்ள நிறை,குறைகளை அறிந்திருப்பாய்.இப்படி, கேள்வி கேட்டிருக்க மாட்டாய். இன்னொருவரை பணியில் வைத்துக்கொண்டால்,கூலி கொடுக்க வேண்டும். அதற்கு, பணம் தேவைப்படுமே. நான் எங்கே செல்வது ? பணம் சம்பாதிக்கும் ஆசையில்தான் விவசாயம் செய்கிறேன்...' என்றார்.

'ஓஹோ... இவருக்கு பண ஆசை அதிகம்.அதனால்தான், ஒரே ஆளாக வியர்வை சிந்தும் அளவுக்கு ஏற்றம் இறைத்துக் கொண்டிருக்கிறார்' என்று எண்ணி, வேறு இடத்திற்குச் சென்றார் மன்னர்.

அங்கு, ஒருவர் விறகு வெட்டிக் கொண்டிருந்தார். அவரிடம், 'ஐயா... எதற்காக மரத்தை வெட்டுகிறீர்...' என்று கேட்டார் மன்னர்.இந்த மரங்கள் எல்லாம், நல்ல விலைக்குப் போகும். இவற்றை விற்று, பெரும் பணம் சம்பாதித்து வருகிறேன். இந்த மரக் கொம்புகளை,வீட்டுத் தோட்டத்தில் நடப்போகிறேன். அவை, வளர்ந்ததும் வெட்டி, வேறு ஒரு தோட்டம் வாங்கி,அங்கேயும் மரங்களை வளர்ப்பேன்...' என்றார்.

அடேயப்பா... இவருக்கும் பணம் சம்பாதிக்கும் ஆசை பலமாக இருக்கிறது என்று நினைத்தபடியே புறப்பட்டார் மன்னர்.

வழியில், பெரிய ஆறு காணப்பட்டது. அதில்,தண்ணீர் அருந்த முடிவு செய்த மன்னர், குதிரையை விட்டு இறங்கி நடந்தார்.ஆற்றங்கரையில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். 'இவர் முற்றும் துறந்தவராக இருப்பாரோ... ஆசை இல்லாதவர் போல் தெரிகிறதே’என்று எண்ணியபடி, அருகே சென்று, ஐயா... தாங்கள் முற்றும் துறந்தவராக தெரிகிறீரே...என்று கேட்டார் மன்னர்.

ஐயா... நான் முற்றும் துறந்தவனில்லை;சரியான சாப்பாட்டு ராமன், இலவச சாப்பாடு வேண்டி, பொய்யாக துறவறம் பூண்டுள்ளேன். நான்கு தினங்களுக்கு முன், மன்னர் கார்மேகத்தின் அரண்மனைக்குச் சென்றேன். அங்கு,தடபுடலாக விருந்து பரிமாறப்பட்டது. நன்றாக சாப்பிட்டு வந்தேன். நான் செல்லும் இடமெல்லாம் துறவி என நினைத்து அறுசுவை உணவை படைக்கின்றனர். அதை, சாப்பிட்டு வயிறு வளர்த்து வருகிறேன். சற்று நேரத்திற்கு முன், இந்த ஆற்றில் குளிக்க வந்த செல்வந்தர் ஒருவர்,அறுசுவை உணவு தரப்போவதாக தெரிவித்தார்.இன்னும் சிறிது நேரத்தில் அவர் வீட்டிற்குச் செல்ல இருக்கிறேன், உங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. நீங்களும் காவி உடை அணிந்து வந்தால், விருந்து சாப்பாடு வாங்கித் தருகிறேன்... என்றார் முனிவர்.

அதைக் கேட்ட மன்னருக்கு சிரிப்பு வந்தது.என்னிடமே அரண்மனையில் விருந்து சாப்பிட்ட கதையை கூறுகிறீரா... இவருக்கு சாப்பாட்டின் மேல் ஆசையிருக்கிறது. வகை வகையாக சாப்பிட விரும்புகிறார். இவரும் ஆசை உள்ளவர்தான்... என்று முடிவு செய்தார்.


பின், ஆற்று நீரைக் குடித்து, தாகத்தை தணித்து, வேறு இடம் நோக்கிச் சென்றார் மன்னர்.நீண்டநேரப் பயணத்திற்குப் பின் ஒரு பூந்தோட்டத்திற்கு வந்தார்.

அங்குள்ள பூச்செடிகள், மனதை கவர்ந்தன.அவற்றை ரசிக்க குதிரையை விட்டு இறங்கினார். பூந்தோட்டத்தினுள் நுழைந்தார்.

ஒருவர், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார். அங்கு சென்ற மன்னரை மேலும் கீழும் பார்த்து விட்டு சோகமாக, 'ஐயா... இந்த பூந்தோட்டத்தில் நுழைந்து, என் அமைதியை கெடுத்து விட்டீரே...' என்றார்.

உடனே மன்னர், உங்கள் அமைதியை கெடுத்தேனா... இந்தப் பூக்களின் அழகை ரசிக்கத் தான் வந்தேன். உங்களுக்கு எந்தத் தொல்லையும் கொடுக்கவில்லையே... அப்படியிருக்க, வெறுப்போடு, பேசக் காரணம் என்ன?

ஐயா... சரியான கேள்வியைத்தான் கேட்டீர்.மனிதர்களைக் கண்டாலே, வெறுப்பாக இருக்கிறது. என் வாழ்க்கையில் நன்றி கெட்டவர்கள் பலரை சந்தித்திருக்கிறேன். அதனால், மனிதர்களைக் கண்டாலே, வெறுப்பாகி விடுவேன்.இதோ, இந்தத் தோட்டத்தில் இருக்கிற பூக்களாகப் பிறக்க மாட்டோமா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறேன். அதற்காக, நெடு நாளாக ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறேன் என்றார்.

அவரது பேச்சு, வேடிக்கையாகவும் சிந்தனையை தூண்டும் படியாகவும் இருப்பதை உணர்ந்தார் மன்னர். அவரது நிலையை, மனதில் நிறுத்திப் பார்த்தார். 'இவருக்கும் ஆசை இருக்கிறது. ஆசையில்லாத வேறு மனிதரை தேடிச் செல்ல வேண்டியதுதான்' என்று முடிவு செய்தார்.

இப்படியே, ஆசையில்லாத மனிதரைத் தேடியபடியே, ஊர் ஊராக சென்றுகொண்டிருந்தார் மன்னர்.

ஆறு மாதமாக அலைந்தார். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லா மனிதர்களும் ஏதாவது ஒருவகையில் ஆசை மிக்கவராகவே இருந்தனர். இனியும் தேடி பயன் இல்லை என்று உணர்ந்த மன்னர், அரண்மனைக்குத் திரும்பினார். அரண்மனை வாசலில் நுழைந்ததுமே, காவலர்கள் தடுத்தனர்.

‘என்னையா தடுக்கிறீர்கள். நான் தான் உங்கள் மன்னர்...' என்று மாறு வேடத்தைக் கலைத்தார். காவலர்கள் ஏளனமாக சிரித்து, யார் மன்னர்... எங்கள் மன்னர் படைத் தளபதி வைகேந்திரன் தான். அவர் முடிசூடி, 6 மாதங்கள் ஆகின்றன. பழைய மன்னர் அரண்மனைக்கு வந்தால்,உடனே பிடித்து, சிறையில் அடைக்க உத்தரவு போட்டுள்ளார். இதோ, உங்களை கைது செய்து,சிறையில் அடைக்கிறோம் என்று சிறைச்சாலைக்கு இழுத்துச் சென்றனர் புதிய காவலர்கள்.மன்னரோ, தவறை நினைத்து மனம் வருந்தினார்.அரண்மனையில் எவ்வளவோ, பொறுப்பான வேலைகள் இருக்க, அவற்றை விட்டு,தேவையற்றதை செய்யப் போய், பதவியை இழந்தேனே.. என்று நொந்துகொண்டார்.

நீதி-தேவையான பணிகளில் தான் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற விடயங்களில் கவனம் செலுத்தினால் இருப்பதையும் இழக்க நேரிடும். கவனமாக இருங்கள்.



Post a Comment

Previous Post Next Post