.

சரண்யா கோகுலின்,அக்கா. இருவரும் அரசுப் பள்ளியில் படிக்கிறார்கள். பள்ளிக்கு நடந்துதான் செல்வார்கள்.கோகுலுக்கு வீட்டு வேலை செய்வது என்றால் வணங்காது. யாராவது, ஏதாவது வேலை சொன்னால், அதனால் தனக்குப் பயன் ஏதும் உண்டாகுமா என்றுதான் யோசிப்பான். ஆனால் சரண்யா அப்படியல்ல.

ஒரு நாள் சரண்யா. இந்தா கோகுல்... இந்த விதையை நம் தோட்டத்துல ஒரு பள்ளம் தோண்டிப் போட்டுட்டு வாயேன்... ?? என்றாள்.போக்கா... உனக்கு வேற வேலை இல்லை... இதனால எனக்கு என்ன பயன்? நீயே போடு போ... என்று போய்விட்டான்.

கோடைகாலம். பள்ளித் தேர்வுகள் ஆரம்பமாகிவிட்டன. சரண்யாவுக்கு மதியம் தேர்வு. கோகுலுக்குகாலையில் தேர்வு. காலை தேர்வு முடிந்து, வீட்டுக்கு மதியம் தனியாக நடந்து சென்றான். வழி எங்கும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. கோகுலின் செருப்பு திடீரென்று அறுத்துவிட்டது.அதைப் போட்டுக்கொண்டு நடப்பது சிரமமாக இருந்ததால், இரண்டையும் வீசி எறிந்துவிட்டு நடக்கத் தொடங்கினான். ஆனால், அவனால் சூடு பொறுக்க முடியவில்லை. துடித்தான்...தவித்தான்.

ஒதுங்க நிழல் இல்லாமல் வேகமாக ஓடத்தொடங்கினான். அப்போது தூரத்தில் இரண்டு பெரிய மரங்கள் இருப்பது அவன் கண்ணில் பட்டது. உடனே அங்கே ஓடிச் சென்று அதன் நிழலில் அப்பாடா...? என்று பெருமூச்சு விட்டு நின்றான். கால்கள் செவசெவ என்று சிவந்திருந்தன. சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்தான். அப்போது அவ்வழியே சென்ற பால்காரரின் சைக்கிளில் ஏறிக்கொண்டு ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தான்.

மாலை சரண்யா வந்ததும் தன் தமிழ்த் தேர்வு வினாத்தாளை அவளிடம் காட் டிவிட்டு, வழியில் நடந்ததைச் சொல்லி தன் கால்களையும் காட்டினான். அதைக் கண்ட சரண்யா, கோகுல் நீ வெயில் தாங்காமல் ஒதுங்கி நின்ற அந்த மரங்கள் நீ வெச்சதா?? என்றாள்.

இல்லையே... என்றான்.

அந்த மரங்களுக்கான விதையை யாரோ ஒருவர்தானே போட்டிருக்கிறார்? ஆனால் அது மரமாக வளர்ந்து அவருக்கா பலன் தந்தது? உனக்குத் தானே தந்தது? உன்னைப் போன்ற பலருக்கும்தானே தந்திருக்கும்...

அக்கா... நீ என்ன சொல்ல வர்ரே...?

என்னோடு வா... காட்டறேன். என்று தோட்டத்துக்கு அழைத்துச் சென்றாள்.



அன்னிக்கு நான் கொடுத்த விதையை பூமியில் போட மாட்டேன்னு சொன்னியே... நினைவிருக்கா? அதை நான் பள்ளம் தோண்டி போட்டு வெச்சேன்.இதோபார்... எவ்வளவு அழகா வளர்ந்திருக்குன்னு.. இன்னும் கொஞ்சநாள்ல இது மரமாயிடும். பிறகு பலருக்கும் பலன் தரும். பயன் கருதி நாம எதை யும் செய்யக்கூடாதுன்னு நம்ம தமிழ் வாத்தியார் சொல்லியிருக்காரே...நினைவில்லையா...?

சரி... உன்னோட தமிழ் வினாத்தாளில் ? இந்தப் பாடலை எழுதியவர் யாருன்னு ஒரு கேள்வி இருக்கு பாரு... பாடலைப் படிக்கிறேன்...

தெள்ளிய ஆலின் சிறுபழத் தொரு விதை 

தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்

நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை

அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு

மன்னர்க் கிருக்க நிழலா கும்மே?

இந்தப் பாடலோட பொருள் என்ன தெரியுமா? இதை எழுதியவர் யாருன்னு நீ எக்ஸாம்ல பதில் எழுதினியா?

எழுதிட்டேங்கா... அதிவீரராம பாண்டியர். ஆனா பொருள் நினைவில்லை... நீயே சொல்லிடேன்

ஆலமரத்தோட விதை, மீன் முட்டையை விடச் சிறியதுதான். ஆனால் அதுதான் மன்னர் தம் நால்வகைப் படைகளோடுதங்குவதற்கு நிழலைத்தருமாம். அதுபோலத்தான் அடுத்தவங்களுக்குப் பயன்படும் சிறிய செயல்கூட சிறப்புடையதாக, பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்.அதிவீரராம பாண்டியர்

இப்ப நல்லா புரிஞ்சுதுக்கா... அது மட்டுமா? வெயில்ல என் கால்சுட்ட போது மரத்தின் அருமை ரொம்பவே புரிஞ்சுது... (சிரிக்கிறான்) இனிமே நானும் நிறைய விதைகளை மண்ணில் போடுவேன்... பிறருக்குப் பயன் தரும் வேலையையே செய்வேன் என்று சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த நீர் ஜாடியை எடுத்து அந்தச் செடிக்கு நீர் ஊற்றினான்.



Post a Comment

Previous Post Next Post