படித்து முடித்தவுடன் சிறைபட்டு போனேன் வௌவால் தேசத்தில்.இரண்டு நாட்களாகவே நாவலின் ஒவ்வொரு வார்த்தைகளுடனும் என்னை அசை போட்டுக் கொண்டிருந்தேன்.எப்படி நான் பெற்ற இலக்கிய ரசனையை ஏனையோருடன் பகிர்ந்து கொள்வதென்று.
ஊசாட்டம் பார்த்துக் கொண்டேயிருந்தேன். துணிப்பாய் ஓர் எண்ணம் கேள்வியாய் உதித்தது. வாழ்க்கையை எப்படி படிக்கலாம்? நிச்சயமாக அது இலக்கியத்தினூடாக மட்டும் தான் முடியும்.அந்தப் படிப்புக்கு இந்நாவல் சொல்லெணா அனுபவங்களை வாரி வாரி வழங்குகின்றது.வாசிப்பின் ஒவ் வொரு கணமும் வாசகனை பேரகந்தை கொள்ளச் செய்யும் இலக்கிய செழுமை கொண்டதொரு படைப்பு.தமிழ் மொழி மீது இறுமாப்பு கொள்ளவும் செய்கின்றது.
இந்தியாவின் சாகித்திய அகதமி விருதை வென்றெடுத்த தமிழ் டால்டாய் சோ தர்மனின் மற்றுமோர் மிக உயரிய இலக்கிய படைப்பு வௌவால் தேசம்.
சராசரி மனித வாழ்வின் அனைத்து அம்சங்களையும் மிகவும் இயல்பாக சிறந்த நகைச்சுவையுணர்வுடன் தனியே வயிறு குலுங்கிச் சிரிக்க வைக்கின்றது ஒரு கனம்.கோபப்படச் செய்கின்ற மற்றும் துயரடையச் செய்கின்றதென பல சுவாரஷ்யங்களை பெற்றுத் தருகின்றது இந்தப் படைப்பு.புனைவுகளால் கொட்டிக் கட்டப்பட்டுள்ளது வௌவால் தேசம்.
கட்டபொம்மனை தூக்கிலிட்ட வேல்ஸ்துரையின் குரலுக்கு அவக் தவக் கென்று ஓடிவந்து துரையின் முன்னால் பவ்யமாக நிற்கும் கிட்டுப் பிள்ளைதான் துரையின் துபாஷி.பல மொழி கற்றவர். இவர்களிடமிருந்து தான் வௌவால் தேசத்தின் கதை ஆரம்பமாகின்றது.
பிரிட்டிஷ் இராஜ்ஜியத்தின் உத்தரவுக்கமைய தமிழர் வாழ்வியல் மரபினை திட்டமிட்டு அழிக்கும் வெள்ளைக்காரனின் சதி எப்படி தமிழினத்தை இயற்கையுடன் கூடிய வாழ்வியல் செழுமையினை கைவிட்டு விட்டு தம்மினத்தின் தொன்மங்களை தொலைத்துக் கொண்ட கதை தான் வெளவால் தேசம்.
என் வார்த்தைகளில் நாவலுக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொண்டே வாசகனுடன் என் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். ஏனெனில் ஒவ்வொரு தமிழ் மகனும் படித்திருக்க வேண்டியது மற்றும் ஏனையோரையும் படிப்பதற்கு ஊக்கப்படுத்த வேண்டியது இந்நாவலின் சிறப்பு.
வார்த்தைகளுக்கிருக்கும் சிறப்பை, இதைவிட சிறப்பாக சொல்லி விடமுடியாது.அவனுக்கு தெரியும் வார்த்தைகளும் சொற்களுமே வன்மு றையின் விதைகள் என்ற வார்த்தைகள் அனைவரையும் ஒன்றி ணைக்கும் சங்கிலியின் கண்ணிகள் என்று.அவரவர் வார்த்தைகளை அவரவர்களிடமே அடைகாக்க வேண்டும். வார்த்தைகள் தீப்பொறிகளை உருவாக்கும். (பக்கம்:19)
சண்டையில் காயமடைந்த தன் மகனை விட்டுவிட்டு ஊமைத்துரையினை காப்பாற்றும் வீரத்தாயின் தியாகம் வீரத்தமிழ் உணர்வினை கொண்டாட செய்கின்றது.
அந்த வீரத்தை கண்டு வியக்கும் வேல்ஸ்துரை இப்படி சொல்கிறார். நம்மிடம் பீரங்கிகள் இருப்பதால்தான் வரி வசூல் பண்ணுகிறோமா? தன் மகனைக் காப்பாற்றாமல் ஊமைத்துரையின் உயிரைக் காப்பாற்றிய அந்தப் பெண்களின் முன்னால் பீரங்கியால் என்ன செய்ய முடிந்தது.தன் உயிர் பற்றி கிஞ்சித்தும் கவலையில்லாத இந்த வெகுளியான மக்களிடம் எதை வெல்வது(பக்கம்-51)
ஜக்கம்மா, கோதியம்மா, சோலையப்பன் குல தெய்வம், அய்யனாரப்பன், சொரிமுத்தய்யனார், வனப்பேச்சியம்மன், உழக்கரிசி பிள்ளையார், மணிழுங்கி மரம், மாடசாமி, சுடலைமாடன்,இருளப்பசாமி, இசக்கியாத்தா, செல்லி வீரம்மன் மற்றும் வண்டிமலைப்பேச்சி என குல மற்றும் காவல் தெய்வங்களினதும் அருள் நாவலின் நெடுகிலும் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
சோலையப்பனை குத்துக்கல்லாகக் கொண்டு கடவுளாக கும்பிடும் ஒரு கூட்டம் வேல்ஸ்துரையிடம் ‘இது எங்களோட முன்னோர்கள் நின்னு கும்பிட்ட இடம், அவங்களோட பாதம் இந்த எடத்துலதான் பட்டது, அதே எடத்துல அவங்க பாதத்துக்கு மேல என்னோட பாதம் படனும், என்னோட கால் தடம் பட்ட எடத்துல என் மகனோட கால் தடமும், அவனோட கால் தடத்து மேல என் பேரனோட கால் தடமும் படணும், அவ்வளவு தான் துரை, அது போதும் எங்களுக்கு, அந்த நம்பிக்கையை விடவேமாட்டோம் துரை (பக்கம்: 112)
அறமற்ற மனிதர்களை உருவாக்கும் வௌவால் தேசத்திற்கு இருந்த மிகப்பெரிய சவால் ஓர் குத்துக் கல்லைப் பார்த்து கும்பிட்டு தூய்மை பெற்று வலிமை பெறும் இந்த மனிதர் களின் நம்பிக்கையை எப்படி சிதைப்ப தென்பதாகும்.
துபாஷிகளான கிட்டுப்பிள்ளையை ‘கிட் பிள்ளாய்’ எனவும் சவ்ரி முத்துவை ‘சவ்ரி முத்’ என வேல்ஸ்துரையின் கூப்பாடு கதை, மிகுந்த நகைச்சுவையுணர்வை தருகின்றது.
வௌவால் தேசத்தின் விளைவுகள்;
அறம் செயல் இழக்கும் போதும் செத்து அழியும் போதும் மனிதர்கள் மிருகங்களாக மாறிவிடுவர். அதாவது மனித உருவம், மிருக எண்ணங்கள், மிருக வாழ்க்கை. ஒவ்வொருவரும் வரை முறை, வயது முறை இன்றி புணர்ச்சி செய்வார்கள், மூன்று மனைவிகளையும் நான்கு வப்பாட்டிகளையும் வைத்திருப்பார்கள், தன் பிள்ளைகளுக்கும், வப்பாட்டிகளின் பிள்ளைகளுக்கும் ஏழு தலைமுறைக்கான செல்வத்தை பதுக்கி வைப்பார்கள். துறவியென்று தன்னை அடையாளப்படுத்தும் பெண், துறவியாக இருக்க மாட்டாள், ஆடம்பரம் விரும்பும் மகாராணியாக வாழ்வாள்.தங்கள் ஆசைகளுக்கு வடிகாலாக ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் சுகிப்பார்கள். கறுப்பு நிற வௌவால் கூட்டத்தில் ஆண் எது, பெண் எது,அறம் எது?' (பக்கம்: 272)
ஒரு கட்டத்தில் இந்த அறமற்ற செயலை வெறுக்கும் வேல்ஸ்துரை தனது இராணுவ பணியை இராஜிநாமா செய்கிறார்.துபாஷி பண்டார பரதேசியாய் போக ஞானமுத்துவி சவரிமுத்து தான் தமிழில் மொழிபெயர்த்த இந்த ஆவணங்களை மக்கள் கிளர்ச்சியாளர்களிடம் விட்டு விட்டு ஓடி ஒளிந்து கொள்கின்றான்.
எப்படியோ இறுதியில் வௌவால் தேசம் இன்று வென்றிருக்கிறது. உங்களுடைய நிழலை அங்கீகரியுங்கள் என்கிறது வௌவால் தேசம். படித்து முடித்தவுடன் இறுதியில் என்னை ஓர் பெரிய நீண்ட மௌனம் அப்பிக் கொண்டது.
சிறப்பான பதிவு
ReplyDeleteநன்றி
ReplyDeletePost a Comment