.

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார்.அந்த ராஜாவுக்கு மிகப் பெரிய மனக்கவலை. அதை யாரிடமும் சொல்ல முடியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தார்.

அரசனின் முகத்தைக் கவனித்த மந்திரிக்கு அரசருக்கு ஏதோ பிரச்சினை என்று புரிந்து விட்டது. ஆனால் வற்புறுத்திக் கேட்டால் அவர் தவறாக நினைத்துக் கொள்வாரோ என்று அச்சம். ஆகவே மந்திரி தந்திரம் செய்தார். ‘அரசே நீங்கள் வேட்டைக்குப் போய் நீண்ட நாட்களாகி விட்டதல்லவா...? என்றார்.

'ஆமாம்' என்றார் அரசர்.‘ஆனால் இப்போது நான் வேட்டையாடும் மன நிலையில்
இல்லை' என்றார்.

'மனம் சரியில்லாத போது தான் இது மாதிரி உற்சாக விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டும் அரசே' என்றார் மந்திரி.

'புறப்படுங்கள் போகிற வழியில் தானே உங்களுடைய குருநாதரின் ஆசிரம் போய் அவரையும் தரிசித்து விட்டுப் போகலாம்' என்றார் மந்திரி.

குரு என்றவுடன் அரசன் முகத்தில் புதிய நம்பிக்கை பிறந்தது. வேட்டைக்காக இல்லாவிட்டாலும் அவரைச் சந்தித்தால் தன்னுடைய குழப்பத்துக்கு
ஒரு தெளிவு பிறக்கும் என்று நினைத்தார் அரசர்.



அரசரின் குருநாதர் ஒரு ஜென் துறவி ஊருக்கு வெளியே ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அவரும் அவருடைய சீடர்களும் அரசரை அன்போடு
வரவேற்று உபசரித்தார்கள். 

இந்தக் களேபரம் எல்லாம் முடிந்த பிறகு அரசர் தன் குரு நாதரை தனியே சந்தித்தார்.தனது குழப்பங்களை விபரித்தார். அவற்றைச் சரி செய்வது
எப்படி என்று தான் யோசித்து வைத்திருந்த தீர்வுகளைச் சொன்னார். குருநாதர்
அரசர் கூறுவதை எல்லாம் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

கடைசியாக அரசர் கேட்டார் ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் குருவே’..?

அவர் எதுவும் பதில் பேசவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு 'நீ புறப்படலாம் என்றார்.

அரசர் முகத்தில் கோபமோ ஏமாற்றமோ இல்லை. உற்சாகமாக கிளம்பிச் சென்று தன் குதிரையில் ஏறிக்கொண்டார்.மகிழ்ச்சியுடன் நான்கு கால் பாய்ச்சலில் காட்டை நோக்கிப் பயணமானார்.

இதைப் பார்த்த மந்திரி குருநாதரிடம் ஓடினார். அரசருடைய குழப்பத்தை எப்படி தீர்த்து வைத்தீர்கள் குருவே...? என்று ஆர்வத்துடன் கேட்டார்.

உன் அரசர் மிகவும் புத்திசாலி அவரே தன் பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டார் என்றார் ஜென் குரு. நான் செய்ததெல்லாம் அவன் தன்னுடைய குழப்பங்களையும் பிரச்சினைகளையும் சொல்ல சொல்ல
பொறுமையாக காது கொடுத்து கேட்டேன். சாய்ந்து அழத் தோள் கொடுத்தேன் அவ்வளவு தான் என்றார் மிக இயல்பாக.

நீதி:எவர் ஒருவர் குழப்பத்தில் இருக்கிறார்களோ அவர்களுக்கு நாம் யோசனை சொல்லத் தேவையில்லை, அறிவுரை சொல்லத் தேவையும் இல்லை அவர்கள் சொல்வதை பொறுமையுடன் காது கொடுத்து கேட்டாலே போதும்.

Post a Comment

Previous Post Next Post