.

வெகு காலத்திற்கு முன்பு ஒரு பெரிய மரம் ஒன்றில் ஒரு பார்வை இழந்த கழுகு ஒன்று வசித்து வந்தது. அந்த மரத்தின் பொந்தையே தனது வீடாக்கிக் கொண்டது கழுகு. நிறைய பறவைகள் அந்த மரத்தின் கிளைகளில் கூடு கட்டி வாழ்ந்து வந்தன.அந்தப் பறவைகள் பார்வை இழந்த கழுகின் மேல் பரிதாபம் காட்டின. தங்களது உணவுப் பொருட்களின் சில மிச்சங்களை பார்வை இழந்த கழுகுக்கும் கொடுத்து உதவி வந்தன.

அது போலவே பறவைகள் இரைதேடப் போகும் சமயங்களில் அவற்றின் குஞ்சுகளைப் பாதுகாத்து வந்தது கழுகு. ஒரு நாள் அந்த வழியே பூனை ஒன்று நடந்து சென்றது. அப்போது சிறு குஞ்சுகளின் க்ரீச் என்ற சத்தத்தைக் கேட்க நேர்ந்தது. உடனே பூனை, இந்த மரத்தின் மேல் உள்ள கூடுகளில் இளம் குஞ்சுகள் இருக்கக்கூடும்.பல நாட்களுக்கு அவை எனக்கு விருந்து படைக்கும். இந்த இடத்தை அடைந்த நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று தனக்குள் சிந்தித்துக் கொண்டது பூனை.

இப்படியான எண்ணங்களுடன் பூனை மரத்தின் உச்சியை அடைந்தது. பூனை யைக் கண்டதும் இளம் குஞ்சுப் பறவைகள் மேலும் க்ரீச் என்றன. குஞ்சுகளின் கூக்குரல் பார்வை இழந்த கழுகை உஷார்படுத்தியது.அது உடனே வெளியே வந்த கழுகு யாரது என்றது.

கழுகு தனது தலையை இரண்டு பக்கமும் ஆட்டுவதைப் பார்த்ததும் இது பார்வை இழந்த கழுகு என்று பூனைக்குப் புரிந்து விட்டது. கழுகை முட்டாளாக்குவதற்காக பூனை சொன்னது, ஓ கழுகாரே... நான் உம்மைத்தான் பார்க்க வந்தேன் ஐயா.கழுகு, என்ன பூனையா? 

பூனைகள் எங்களுக்குத் தொந்தரவும் அபாயமும் தரக்கூடியன. உடனே இங்கிருந்து சென்று விடு என்றது.

பூனை ஓ... வேண்டாம். என்னை வெளியே அனுப்பாதீர்கள். உங்களையோ இந்த குஞ்சுப் பறவைகளையோ தாக்குவதற்காக இங்கு வரவில்லை. நீங்கள் உங்கள் அன்பான செயல்கள் மூலம் இந்தக் குஞ்சுகளை பாதுகாப்பதைப் பற்றி கேள்விப்பட்டு உங்களைக் காண விரும்பி வந்தேன். உங்களை என் குருவாக நினைக்கிறேன். எனக்கு உங்கள் ஆசிகளை வழங்கி உங்களது சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் கழுகாரே.

கழுகு சரி ஆகட்டும். என் சீடனாக உன்னை ஏற்கிறேன். ஆனால் இந்தக் குஞ்சுகள் உன்னருகே இருப்பது அபாயம் அல்லவா? பூனை, இல்லை குருவே. நீங்கள் ஒருபோதும் பயப்படத் தேவையில்லை.

நான் மாமிசத்தையும் முட்டைகளையும் உண்பதை விட்டு ஒரு வருடம் ஆகிறது.

பூனையின் பொய்யான புகழ் மொழிகள் கழுகின் இதயத்தை கவர்ந்திழுத்தாலும் சிறிது எச்சரிக்கையாகவே பேசியது.


இந்த வார்த்தைகளால் பார்வை இழந்த கழுகின் எச்சரிக்கை உணர்வும் போயே போயிற்று.

அன்று முதல் ஒவ்வொரு நாளும் பூனை கழுகைக் காண வருவதும் பல விடயங் களைப் பேசுவதுமாக இருந்து வந்தது.குஞ்சுகளை அது ஒன்றுமே செய்யவில்லை.

பல நாட்கள் இவ்வாறு கழிந்ததும் பார்வை இழந்த கழுகு பூனையை முழுமை யாக நம்பத் தொடங்கியது. குஞ்சுப் பறவைகளும் பயமின்றி பூனையின் பக்கம் சென்று வந்தன.

தந்திரமான பூனை கழுகின் பூரண நம்பிக்கையைப் பெற்று காத்திருந்தது. அது ஒருநாள் அதன் சுய உருவைக் காட்டியும் விட்டது. ஒவ்வொரு நாளும் பறவைகள் இரை தேடச் சென்ற உடன் நடுப்பகலில் பார்வை இழந்த கழுகு சிறிது நேரம் குட்டித் தூக்கம் போடும். பூனைக்கும் இது தெரியும்.

ஒருநாள் இந்த தந்திரமான பூனை, குஞ்சுகளின் மீது பாய்ந்து அவற்றை எல்லாம் தின்றே விட்டது. மிச்சம் இருந்த எலும்புகள், இறகுகள் இவற்றை மெல்ல கழுகின் பொந்துக்குள் போட்டு விட்டு மெல்ல அந்த இடத்தை விட்டுப் போய்விட்டது.

அன்று மாலை பறவைகள் தங்கள் கூடுகளுக்குத் திரும்பியதும் தங்கள் குஞ்சுகள் காணாமல் போனதைக் கண்டதும் பறவைகள் என்ன நடந்தது என்று ஆராயத் தொடங்கின. சுற்றும் முற்றும் பார்த்தும் குஞ்சுகளைக் காணவில்லை. பார்வை இழந்த கழுகின் பொந்தின் அருகே சென்று விபரத்தைக் கேட்க புறப்பட்டன. கழுகின் பொந்திற்குச் சென்று பார்த்தபோது அங்கே குஞ்சுப் பறவைகளின் சிறு எலும்புகளைக் கண்டதும் பார்வை இழந்த கழுகுதான் அவைகளைக் கொன்று தின்றிருக்க வேண்டும் என்று முடிவு கட்டின.

அவைகள் தங்களின் நகங்களின், அலகுகளால் கொத்திக் குதறி பார்வை இழந்த கழுகை பொந்திலிருந்து வெளியே தள்ளி விட்டன. கீழே விழுந்த பார்வை இழந்த கழுகு இறந்தே போனது.


நீதி-பூனையின் வார்த்தைகளை பார்வை இழந்த கழுகு நம்பாதிருந்தால் அது இந்நேரம் உயிரோடு இருந்திருக்கும். எனவே ஒரு பொழுதும் நீங்கள் பொய்யான புகழுரைக்கு மயங்காதீர்கள். அது அழிவுக்கு உங்களை கொண்டுசெல்லும்.

Post a Comment

Previous Post Next Post