.

மனிதன் ஒருவன் தோல்விகளைக் கண்டு துவண்டு விடாது தனது குறிக்கோளை இலக்காகக் கொண்டு முயற்சித்தால் கற்பனைக் கதைகளில் மட்டுமே அது 'சாத்தியமாகும் என நம்பப்படுபவை கூட கைவசமாகும் என்பதற்கு முன்னுதாரணமாக உலகின் மிகப் பெரிய செல்வந்தரான'எலோன் மஸ்க்(Elon Musk)விளங்குகிறார்.

அதேசமயம் புத்தகங்களே உலகமென ஆழ்ந்து தன்னைச் சுற்றியுள்ள உறவுகள் தொடர்பில் அக்கறையில்லாமல் வாழ முயற்சிக்கும் ஒருவர் எவ்வாறு குடும்ப வாழ்க்கையில் தோல்வியைத் தழுவி தனிமையில் வாழ நேரிடும் என்பதற்கும் எடுத்துக்காட்டாக அவர் உள்ளார் என்பதை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

228 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்கு உடைமையானவராக மாறி உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தை பெற்றிருக்கும் எலோன் மஸ்க்(Elon Musk),குடும்ப வாழ்க்கையில் 3 முறை திருமணம் செய்து 10 பிள்ளைகளுக்கு தந்தையாகியும் எந்த உறவுமற்று நண்பர்களற்று தனித்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

வர்த்தக ஜாம்பவானாக, முதலீட்டாளர திகழ்ந்து தனியார் விண்வெளி நிறுவனமா 'ஸ்பேஸ் எக்ஸின் ஸ்தாபகராகவும் தலைமை நிறைவேற்ற திகாரியாகவும் தலைமை பொயியலாளராகவும் விண்வெளி தொழில்நுட்ப வரலாற்றில் முத்திரை பதித்துள்ள எலோன் மஸ்க்கின் தொழில் முயற்சிகள் குறிப்பிட்ட வைரையறைக்குள் சிக்கிக் கொள்ளாமல் பரந்து விரிந்துள்ளன.

செயற்கை மதிநுட்ப ஆற்றல் தொடர்பில் அவருக்கிருந்த தீவிரமான பற்றால் மனித மூளையுடன் செயற்கை மதிநுட்பத்தை பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளை முன்டுத்து வரும் நியூரோலிங் ஸ்தாபனத் ஸ்தாபிப்பதில் பங்கேற்றார். அத்துடன் பல்வேறு துறைகளிலும் செயற்கை மதிநுட்ப ஆற்றல் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற் கொள்ள 'ஓப்பின் அல்' ஸ்தாபனத்தை நிறு வினார்.

அத்துடன் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தில் முதலீட்டை மேற்கொண்டு அதன் தலைவராக மாறி அந்த நிறுவனத்தை சூரிய சக்திப் பிறப்பாக்க முறைமைகளை தயாரிக்கும் நிறுவனமாக விசாலப்படுத்தினார்.

அவர் அனர்த்த பிரதேசங்களுக்கு சூரிய சக்தியால் இயங்கும் முறைமைகளை வழங்குவது, ஆராய்ச்சிகளுக்கு உதவுவது விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பரிசோதனைகளை மேற்கொள்வது என்பவற்றை நோக்காகக் கொண்டு மஸ்க் மன்றத்தை ஸ்தாபித்தார். அத்துடன் இணையத்தளம் மூலமான கட்டணம் செலுத்தும் PayPal முறைமையை அவர் ஆரம்பித்து வைத்தார்.

அவர் அண்மையில் 44 பில்லியன் டொலர் பணத்தை கொட்டிக் கொடுத்து தான் நேசிக்கும் சமூக வலைத்தளமான டுவிட்டரை வாங்கி அதன் ஏகபோக உரிமையாளராகவும் தலைமை நிறைவேற்றதிகாரியாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதன் மூலம் உலகில் டுவிட்டர் வலைத்தளத்தைப் பயன்படுத்தும் மில்லியன்கணக்கான மக்களின் பேசுபொருளாக மாறியுள்ளார்.

13 வருடங்களுக்கு முன்னர் டுவிட்டரில் இணைந்து கொண்ட எலோன் மஸ்க்(Elon Musk) இதுவரை 19,000 க்கும் அதிகமான டுவிட்டர் பதிவவேற்றங்களை மேற் கொண்டுள்ளார்.டுவிட்டரில் அவரை பின்பற்றுபவர்கள் தொகை 113 மில்லியன் பேரிலும் அதிகமாகும்.

தனது சாதனைகள், கண்டுபிடிப்புகள்,விண்வெளிப் பயண முன்னேற்றங்கள், அரசியல், கொவிட் 19 தொற்று மற்றும் பொருளாதாரம் தொடர்பான தனது சர்ச்சைக்'குரிய விமர்சனங்கள் காரணமாக அவரது டுவிட்டர் பதிவேற்றங்கள் பலரது கவனத்தையும் ஈர்ப்பனவாக உள்ளன.

தனிமையில் ஆரம்பித்த வாழ்க்கை

எலோன் மஸ்க் 1971 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதி கனடாவைப் பிறப்பிடமாகக் கொண்ட மேயி ஹால்ட்மானுக்கும் பிரித்தானியா மற்றும் தென் அமெரிக்க வம்சாவளியினத்தவரான எரோல் மஸ்க்கிற்கும் புதல்வராக தென் ஆபிரிக்காவின் பிரிட்டோரியா நகரில் பிறந்தார்.

அவரது தாய் வழிப் பாட்டாவான ஜோன் எலோன் ஹால்ட்மானின் பெயரில் உள்ள எலோன் மற்றும் தந்தை வழிக் குடும்பப் பெயரான மஸ்க் ஆகிய இரண்டு பெயர்களையும் இணைத்து எலோன் மஸ்க் எனப் பெயர் சூட்டப்பட்டது.

எலோன் மஸ்கிக்கின் தந்தை எரோல் மஸ்க் தென் ஆபிரிக்காவில் மின் பொறியியலாளராகப் பணியாற்றினார். அத்துடன் அவர் விமானியாகவும் மாலுமியாகவும் ஆலோசகராகவும் சொத்து அபிவிருத்தியாளராகவும் பல்வேறு துறைகளிலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்திருந்தார்.அத்துடன் உயர்ந்த மதிநுட்ப ஆற்றல் கொண்டவராக விளங்கிய எரோல் மஸ்க் தென் ஆபிரிக்காவில் மிகவும் குறைந்த வயதில் பொறியியல் பட்டம் பெற்ற ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் முன்னாள் மொடல் அழகியான எலோன் மஸ்க்கின்(Elon Musk) தாயார் மேயி ஹால்ட்மான் உணவுப் போஷணை தொடர்பான நிபுணராக பணியாற்றியிருந்தார். எலோனுக்கு கிம்பால் என்ற சகோதரனும் டொஸ்கா என்ற சகோதரியும் உள்ளனர்.

செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்திருந்த போதும் எலோன் மஸ்க்கிற்கு தனது சிறு பராயத்தை தனிமையில் கழிக்க நேர்ந்தது.

நட்பு வட்டாரமின்றி வாழ்ந்த அவர் பாடசாலையில் சக மாணவர்களால் துன்புறுத்தப்பட்டு தாக்கப்பட்டு வேதனையை அனுபவித்து வந்தார். அவர் 8 வயது சிறுவனாக இருந்த போது சக மாணவர்களால் மாடிப் படிகளிலிருந்து தள்ளி விடப்பட்டு தலையில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற நேர்ந்தது.

அவருக்கு 9 வயதாக இருந்த போது அவரது தந்தையும் தாயும் கருத்து வேறுபாட்டால் விவகாரத்துப் பெற்றுப் பிரிந்தனர்.இந்நிலையில் தந்தையுடன் கனடாவில் வாழ வேண்டிய நிலைக்குள்ளான எலோனின் வாழ்வு மேலும் தனிமைக்கு தள்ளப்பட்டது.

இந்நிலையில் அவரது தந்தை தனது மகனைத் திருப்திப்படுத்த விண்வெளிப் பயணங்கள் மற்றும் விஞ்ஞான முன்னேற்றங்கள் தொடர்பான புனைக்கதைகளைக் கொண்ட புத்தகங்களை வாங்கிக் குவித்தார்.எலோன் மஸ்க்கும் அந்தப் புத்தகங்களால் ஈர்க்கப்பட்டு அவையே உலகம் என வாழ ஆரம்பித்தார்.

அந்தக் கற்பனைக் கதைகளில் வருபவற்றை நிஜத்தில் சிருஷ்டித்துக் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவரது உள்ளத்தில் தீயாய்க் கிளர்ந்தெழுந்தது.அவர் சிறுவனாக இருந்தபோது தான்வளர்ந்து பெரியவானதும் விண்வெளிக்கு ஏவுகணையொன்றை அனுப்பப் போவதாக சக மாணவர்களிடம் தெரிவித்த போது அவர் அவர்களின் பரிகாசத்திற்குள்ளானார்.

சிறுவனாக இருந்தது முதற்கொண்டு குறிப்பிட்ட வயது வரும் வரை அவர் மன இறுக்கம் எனப்படும் மனப் பிரச்சினைக்குள்ளானவராக பலராலும் நோக்கப்பட்டார். மற்றவர்களால் கேலி செய்யப்பட்டு எதற்கும் உதவாத கற்பனையிலேயே எப்போதும் திளைத்திருக்கும் ஒருவராக ஓரங்கட்டப்பட்டார்.

கனடாவில் வாழ்ந்த போது அவரது தந்தை மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி அவ்வப்போது போதை தலைக்கேறிய நிலையில் வந்து மகனை கடிந்து கொள்வதிலும் அடிப்பதிலும் ஈடுபட்டதால் எலொன் மஸ்கின் வாழ்க்கை ஏறத்தாழ நரகம் போன்று மாறியது.

செல்வமும் வசதிகளும் கொட்டிக் கிடந்தாலும் ஒரு சிறுவனுக்கு கிடைக்க வேண்டிய அன்பு, அரவணைப்பு கிடைக்காமல் தனிமையில் வாடி நின்ற எலோன்மஸ்கிற்கு உலகிலுள்ள அனைவரையும் விடவும் ஏதாவது ஒருவகையில் தன்னை முன்னிலைப்படுத்தி தான் யார் என்பதை மற்றவர்கள் முன் நிரூபிக்க வேண்டும் என்ற ஒரு வித உத்வேகம் ஏற்பட்டது.

பௌதிகம் மற்றும் பொருளாதாரம் தொடர்பில் இளமாணிப் பட்டம் பெற்றிருந்த அவர் விண்வெளித் துறை எதுவித அனுபவ அறிவும் இல்லாத நிலையிலும் விண்வெளிக்கு ஏவுகணைகளை அனுப்புவதற்கு தன்னால் முடியும் எனத் தீவிரமாக நம்பினார்.

அச்சமயத்தில் விண்வெளிக்கு ஏவுகணைகளை அனுப்பும் நடவடிக்கையில் எந் தவொரு தனியார் நிறுவனமும் ஈடுபடாத நிலையில் அதற்கான முயற்சியில் களம் இறங்கினார். அதன் முதல் கட்டமாக ரஷ்ய விண்வெளி முகவர் நிலையத்திடமிருந்து ஏவுகணையொன்றைக் கொள்வனவு செய்ய அவர் முயன்ற போது அதற்கு குறிப்பிடப்பட்ட பல மில்லியன் டொலர் பெறுமதியான விலை அவரை மலைக்க வைத்திருந்தது.

                                                           எலோன் மஸ்க்


இந்நிலையில் அந்த ஏவுகணையை வாங்குவதை விடவும் அதனை சுயமாகத் தயாரித்தால் இலாபகரமாக அமையும் என அவர் நம்பினார். தன்னால் ஒரு காலத்தில் அமெரிக்க நாசா விண்வெளி நிலையத்திற்கும் உலகிலுள்ள ஏனைய விண்வெளி நிலையங்களுக்கும் குறைந்த செலவில் ஏவுகணைகளைத் தயாரித்து வழங்கக் கூடியதாகவிருக்கும் என அவர் அச்சமயத்தில் கூறிய போது அவரை ஒரு கோமாளியாக நோக்கி உலகம் நகைத்தது.

ஆனால் எலோன் மஸ்க்கோ மற்றவர்களின் விமர்சனங்களைக் கண்டு அஞ்சி ஒதுங்கி நிற்கவில்லை. ஏவுகணைகள் தயாரிப்பதை நோக்காகக் கொண்டு நிறுவனமொன்றை துணிந்து ஆரம்பித்து பெருந்தொகையான பொறியி யலாளர்களை வேலைக்கு அமர்த்தினார். அந்தப் பொறியியலாளர்கள் பலர் தாம் ஏவுகணை ஒன்றை உருவாக்கவே பணியாற்றுகிறோம் என்பதை அறியாமல் எலோன் மஸ்க்கால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய பணியாற்றியிருந்தது தான் இங்கு வேடிக்கைக்குரியதாகும்.

எனினும் உருவாக்கப்பட்ட ஏவுகணையை ஏவிப் பரிசோதிப்பதற்கான தளமொன்றைப் பெறுவதும் எலோன் மஸ்க்கிற்கு சவால் மிக்கதானது. அமெரிக்க புளோரிடா மாநிலத்திலுள்ள ஏவுதளம் அல்லது கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஏவுதளங்களைப் பெற்றுப் பயன்படுத்த எலோன் மஸ்க் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியைத் தழுவின.

இந்நிலையில் பசுபிக் பிராந்தியத்தில்  மார்ஷல் தீவுகளின் ஒரு பாகமாகவுள்ள கவாஜிலேயின் தீவில் ஏவுகணைப் பரிசோதனையைனையை மேற்கொள்ள அவர் தீர்மானித்தார்.இரண்டாம் உலகப் போரிலிருந்து அந்த தீவில் நிலை கொண்டுள்ள அமெரிக்க இராணுவத்தினர் அங்கு ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் பயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் எலோன் மஸ்க்கின் விண்வெளி பயணம் தொடர்பான நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸில் பணியாற்றிய 200 பொறியியலாளர்கள் அந்தத் தீவில் ஏவுகணைப் பரிசோதனைகள் இடம்பெறும் பதற்றமான சூழலில் இரு வருடங்களைக் கழிக்க நேர்ந்தது.

இந்நிலையில் அவரால் பெரும் செலவில் தயாரிக்கப்பட்டு அடுத்தடுத்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 3 ஏவுகணைகளும் வெடித்துச் சிதறியும் கோளாறுக்குள்ளாகியும் தோல்வியைத் தழுவியதையடுத்து எலோன் மஸ்க்கிற்கு சொத்துகளை இழந்து கடனாளியாகும் நிலை ஏற்பட்டது. இந் நிலையில் பெரும் கஷ்டப்பட்டு திரட்டிய பணத்தை வைத்து மீளவும் நான்கா வது தடவையாக ஏவுகணையை ஏவும் நடவடிக்கையை அவர் மேற்கொண்டார். இதுவே அவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்டு பிரிவதற்குக் காரணமானது.

எனினும் நான்காவது முயற்சியில் எலோன் மஸ்க் வெற்றி பெற்றதையடுத்து உலகம் அவரை திரும்பிப் பார்த்தது. இதனையடுத்து விண்ணுக்கு ஏவுகணைகளை அனுப்புவதில் ஜாம்பவானாகத் திகழ்ந்த நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் செலவு குறைந்த ஏவுகணைகளுக்கான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நாட ஆரம்பித்தமை எலோன் மஸ்க்கிற்குக் கிடைத்த பெரும் வெற்றியென்றே கூறலாம்.

அத்துடன் 2020 ஆம் ஆண்டு நவம்பர்16 ஆம் திகதி விண்வெளி வீரர்கள் சகிதம் ஏவுகணையை ஏவி, மனிதர்கள் சகிதம் ஏவுகணையை ஏவி சாதனை படைத்த முதலாவது தனியார் நிறுவனம் என்ற பெயரையும் ஸ்பேஸ் எக்ஸ் பெற்றது. கடந்த ஆகஸ்ட் மாத இறுதி வரை ஸ்பேஸ் எக்ஸ் 336 ஏவுகணைகளை விண்வெளிவீரர்கள் சகிதம் ஏவி வரலாறு படைத்துள்ளது.

2010 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் பால்கொன் 9 வகை ஏவுகணைகளை 186 தடவைகள் ஏவியுள்ளது.அவற்றில் 184 ஏவுகணைகள் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளன. அதில் ஒரு ஏவுகணை  தோல்வியடைந்துள்ளதுடன் ஒரு ஏவுகணை பகுதியாக தோல்வியடைந்துள்ளது.

மேற்படி வெற்றிக்காக எலோன் மஸ்க் நிறுவனத்தின் உரிமையாளராக அல்லாது சாதாரண பொறியிலாளர் போன்று நாள் முழுவதும் பணியாற்றியி ருந்தார். அவரது நிறுவனம் நாசா மற்றும் ரஷ்ய விண்வெளி நிலையங்களைப் போல் அல்லாது மிகவும் நெகிழ்ச்சித் தன்மை யுடன் இருந்தமையும் இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்தது எனலாம். பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியுள்ள ஏனைய விண்வெளி நிலையங்களில் ஏதாவது மாற் றமொன்றை முன்னெடுக்க ஒரு பிரிவிலிருந்து மறு பிரிவுக்கு என அத்தனை பிரிவுகளினதும் அனுமதியைப் பெற வேண்டியிருக்கும். இதன் காரணமாக ஒரு மாற்றத்தை அமுல்படுத்த பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்பட்டது.
ஆனால் பேஸ் எக்ஸைக் பொறுத்தவரை அனைத்துத் தீர்மானங்களும் நேரடியாக எலோன் மஸ்க்கால் எடுக்கப்பட்டதால் முதல் நாள் இரவு முன்னெடுக்கப்படும் தீர்மானமொன்றை மறுநாள் காலையில் நிறைவேற்றக் கூடியதாகவிருந்தது.
எலோன் மஸ்க்கின் அடுத்த விண்வெளிக் கனவு செவ்வாய்க்கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதாகும்.

செவ்வாய்க்கிரகத்தில் காலனித்துவகுடியிருப்பை ஏற்படுத்தி அங்கு தான் மரணத்தைத் தழுவ விரும்புவதாக ஒரு சமயம் அவர் தெரிவித்திருந்தார். அத்துடன் வேறொரு சமயம் அவர் கருத்து வெளியிடுகையில் செவ்வாய்க்கிரகத்தில் தனது இறுதிக் காலத்தைக் கழிக்கத் தான் விரும்பு வதாக குறிப்பிட்டிருந்தார்.

எலோன் மஸ்க் செயற்கை மதிநுட்ப ஆற்றல் மீது தீராத ஆர்வம் கொண்டு கணினி மொழியை கற்பதிலும் மென்பொருட்களை உருவாக்குவதிலும் சிறு வயது முதலே ஆர்வம் காட்டி வந்திருந்தார். இந்நிலையில் அவர் இது தொடர்பில் ஆசிரியர் ஒருவரிடம் கல்வி கற்கச் சென்ற போது இவரால் வின வப்பட்ட சந்தேகங்களுக்கு விடையளிக்க முடியாது அந்த ஆசிரியர் திணறியிருந்தார்.
இந்நிலையில் ஆசிரியர்கள் எவரது தயவுமின்றி புத்தகங்களின் துணையுடன் சுயமாக மென்பொருள் நிகழ்ச்சித்திட்டங்களைக் கற்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.அக்கால கட்டத்தில் இருந்த கணினி மொழிகள் மற்றும் மென்பொருள் நிகழ்ச்சித் திட்டங்கள் என்பன வயது வந்தவர்களுக்கே கற்க சிரமமானவையாக இருந்த நிலையில் எலோன் மஸ்க் தனது 12 ஆவது வயதில் தான் சுயமாகக் உருவாக்கிய மென்பொருட்களைப் பயன்படுத்தி கணினி விளையாட்டுகளை தயாரித்து விற்றார்

அதேசமயம் அவரால் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட சூரிய சக்திப் பிறப்பாக்க முறைமைகள் சாதாரண மக்களும் அந்த முறைமைகளைப் பெற்றுப் பயன்படுத்த வழிவகை செய்தது.

குடும்ப, சமூக வாழ்க்கையில் தோல்வி

ஆனால் இத்தனை இருந்தும் எலோன் மஸ்க்கின் தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கை தொடர்பில் தொடர்ந்து எதிர்மறையாகவே விமர்சிக்கப்பட்டு வருகிறது.

2000ஆம் ஆண்டு ஜஸ்டின் வில்ஸன் என்பரை திருமணம் செய்திருந்த எலோன் மஸ்க், 2008ஆம் ஆண்டு அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றார். தொடர்ந்து தலுலாஹ் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர் 2012ஆம் ஆண்டு அவரிடமி ருந்தும் விவாகரத்துப் பெற்றார்.

எனினும் பின்னர் அவர் மனம் மாறி 2013ஆம் ஆண்டு தலுலாஹ்வை மறுமணம் செய்து கொண்டார். ஆனாலும் அந்த திருமண வாழ்க்கையும் நீடிக்காது 2016 ஆம் ஆண்டு அவரிடமிருந்து மீள அவர் விவாகரத்துப் பெற்றார். தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு முதல் இந்த 2022 ஆண்டு வரை கிறிம்ஸ் என்ற பெண்ணுடன் திருமணம் செய்யாது வாழ்ந்தார். ஆனாலும் இவர்களுக்கிடை யிலான உறவில் அவ்வப்போது விரிசல் ஏற்பட்டுப் பிரிவது வழமையாக இருந்தது. எலோன் மஸ்க் சில மாதங்களுக்கு முன்னர் கருத்து வெளியிடுகையில் தான் தற்போது தனிமையில் வாழ்வதாக குறிப்பிட் டுள்ளார்.

அத்துடன் எலோன் மஸ்க் தன்னிடம் பணியாற்றும் பெண்களுடன் தவறான உறவைப் பேணி சர்ச்சைக்குள்ளாகியும் வந்துள்ளார். மேலும் தனது மகள் முறையான பெண்ணொருவருடனான உறவால் தந்தையாகியுள்ளதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் எலோன் மஸ்க்கின் சொந்த மகள் ஒருவர் தனது பெயருடன் தனது தந்தையின் பெயரை பயன்படுத்த மறுத்து தனது தாயாரின் பெயரையே பயன்படுத்தி வருகிறார். அவருடன் பணியாற்றும் ஊழியர்கள் பலர் அவரை மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத கடின இதயமுள்ள ஒருவர் என விமர்சித்துள்ளனர்.கொவிட் 19 கொரோனா தொற்று தொடர்பான முடக்க நிலை நிலை அமுல்படுத்தப்பட்ட நிலையில் ஒருவருக்குள்ள நோயெதிர்ப்பு சக்தி அவருக்கு அந்தத் தொற்றிலிருந்து பாதுகாப்புத் தரும் எனத் தெரிவித்து தனது நிறுவனங்களை அவர் தொடர்ந்து செயற்படுத்த முயன்றமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது இதன்போது பணிக்கு வராதவர்களின் ஊதியம் துண்டிக்கப்படும் என அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

எது எப்படியிருந்த போதும் தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாது இரும்பு மனிதனாக நெஞ்சு நிமிர்த்தி சாதனைகளை நோக்கி ஓடும் எலோன் மஸ்க். தோல்விகளால் துவண்டுள்ள உலகமெங்குமுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவதை மறுக்கமுடியாது.

இக்கட்டுரையானது ஆர்.ஹஸ்தனி என்பவரால் வீரகேசரிக்காக எழுதப்பட்டது.




Post a Comment

Previous Post Next Post