ஒரு ஊரில் பெரிய பண்ணையார் ஒருவர் இருந்தார். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அவருக்குத்தான் சொந்தம்,
அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்து வந்தான். அவனுக்கு குடிசை ஒன்றும் சிறிதளவு நிலமும் இருந்தன.
பண்ணையாரிடம் வந்த அவன், ஐயா! எல்லா நிலத்திலும் உழுது விதை நட்டு விட்டார்கள். என் நிலம் மட்டும் தான் வெறுமனே உள்ளது. நீங்கள் சிறிது தானியம் தாருங்கள்.என் நிலத்திலும் விதைத்து விடுகிறேன் என்றான்.
என் நிலத்திலேயே உழுது பயிரிடு. சொந்தமாகப் பயிரிட வேண்டாம். பண்ணையாராகும் ஆசையை விட்டு விடு. கூலியாளாகவே இரு.அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைக்கும் என்று கோபத்துடன் சொன்னார் அவர்.
சோகத்துடன் வீடு திரும்பினான் அவன்.தன் மனைவியிடம், நாம் வளம் பெறுவது பண்ணையாருக்குப் பிடிக்கவிலலை. தானியம் தர மறுத்து விட்டார். நீயும் நம் குழந்தைகளும் எப்போதும் போல பட்டினி கிடக்க வேண்டியதுதான். இதுதான் நம் தலைவிதி என்று வருத்தத்துடன் கூறினான்.
அவர்கள் குடிசையில் குருவி ஒன்று கூடு கட்டியது. இதைப் பார்த்த அவன் மனைவி, நம் குடிசை புயலுக்கும் மழைக்கும் எப்பொழுது விழுமோ என்று நாம் அஞ்சுகிறோம். இங்கு வந்து குருவி கூடு கட்டுகிறது பாருங்கள் என்று கணவனிடம் சொன்னாள்.
பாவம்! வாய் பேச முடியாத உயிர் அது.நிலைமை புரிந்தவுடன் அதுவே இங்கிருந்து போய்விடும். நாம் அதற்குத் தொல்லை செய்ய வேண்டாம் என்றான் அவன்.
கூட்டில் அந்தக் குருவி நான்கு முட்டைகள் இட்டது. நான்கும் குஞ்சுகளாயின. திடீரென்று அந்தக் குருவிக் கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்தது. குருவிக் குஞ்சுகளைப் பிடித்து சாப்பிடத் தொடங்கியது. அவை அலறின.
அங்கு வந்த உழவன் பாம்பை அடித்துக் கொன்றான். அதற்குள் அது மூன்று குஞ்சுகளைத் தின்றுவிட்டது. தரையில் விழுந்த ஒரு குஞ்சு மட்டும் உயிரோடு இருந்தது.
அதை அன்போடு எடுத்தான் அவன். அதன் கால் உடைந்திருப்பதைக் கண்டு அதற்கு கட்டுப் போட்டான். அதை மீண்டும் கூட்டில் வைத்தான். வேளா வேளைக்கு உணவு தந்தான்.சில நாட்களில் அந்தக் குருவியின் கால்கள் சரியாயின. அங்கிருந்து அது பறந்து சென்றது, உழவனும் குடும்பத்தினரும் வறுமையில் வாடினார்கள்.
இப்படியே அரை வயிறு சாப்பிட்டு எவ்வளவு காலம் வாழ்வது? நமக்கு விடிவே கிடையாதா? என்றாள் மனைவி.
அப்பொழுது அவர்கள் வீட்டுக் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது. கதவைத் திறந்தான் அவன், அவன் வளர்த்த குருவி வெளியே இருந்தது. அதன் வாயில் ஒரு விதை இருந்தது. அதை அவன் கையில் வைத்தது. இதை உன் வீட்டுத் தோட்டத்தில் நடு. சிறிது நேரத்தில் வருகிறேன் என்று சொல்லி விட்டுப் பறந்தது அது. மீண்டும் வந்தது அது. இன்னொரு விதையைத் தந்தது.இதை உன் வீட்டின் முன்புறத்தில் நடு என்று சொல்லிவிட்டுப் பறந்தது. மூன்றாம் முறையாக வந்த அது இன்னொரு விதையைத் தந்தது.இதை ஜன்னல் ஓரம் நடு. என் மீது காட்டிய அன்பிற்கு நன்றி என்று சொல்லிவிட்டுப் பறந்தது.குருவி சொன்னபடியே மூன்று விதைகளையும் நட்டான் அவன்.
மறுநாள் காலையில் அங்கே மூன்று பெரிய பூசணிக்காய்கள் காய்த்திருந்தன. இதைப் பார்த்து வியப்படைந்தான் அவன்.
தோட்டத்தில் இருந்த பூசணிக்காயை வீட்டிற்குள் கொண்டுவந்தான். அதை இரண்டு துண்டாக வெட்டினான்.
என்ன வியப்பு! அதனுள் இருந்து விதவிதமான உணவுப் பொருட்கள் வந்தன. சுவையான அவற்றை எல்லோரும் மகிழ்ச்சியாக உண்டனர், மீண்டும் அந்தப் பூசணிக்காயை ஒன்று சேர்த்தனர், பழையபடி அது முழுப் பூசணிக்காய் ஆனது.
மகிழ்ச்சியடைந்த அவன், இது மந்திரப் பூசணிக்காய். நமக்கு உணவு தேவைப்படும் போது பிளந்தால் உணவு கிடைக்கும். மீண்டும் சேர்த்துவிட்டால் பழையபடி ஆகிவிடும். இனி நமக்கு உணவுப் பஞ்சமே இல்லை என்றான்.
வீட்டின் முன்புறத்தில் ஒரு பூசணிக்காய் உள்ளது. அதைக் கொண்டு வாருங்கள்.அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்த்து விடலாம் என்றான் மனைவி.
அந்தப் பெரிய பூசணிக்காயை உருட்டிக் கொண்டு வந்தான் அவன். கத்தியால் அதை வெட்டினான். உள்ளிருந்து அழகான ஆடைகள், விலை உயர்ந்த மணிகள் கொட்டின.
ஜன்னலோரம் இருந்த மூன்றாவது பூசணிக்காயையும் கொண்டுவந்து வெட்டினான். அதற்குள் இருந்து பொற்காசுகள் கொட்டின.
அதன் பிறகு அவனும் மனைவியும் குழந்தைகளும் நல்ல உணவு உண்டனர். விலை உயர்ந்த ஆடைகளை அணிந்தனர். மிகப் பெரிய வீடு ஒன்றை கட்டத் தொடங்கினார்கள்.
உழவன் சில நாட்களில் பெருஞ்செல்வனானதை அறிந்தார் பண்ணையார்.
அவனிடம் வந்த அவர், டேய்! முனியா! உனக்கு எங்கிருந்து இவ்வளவு செல்வம் கிடைத்தது? உண்மையைச் சொல் என்று கேட்டார். அவனும் நடந்ததை எல்லாம் அப்படியே சொன்னான்.
தன் மாளிகைக்கு வந்தார் அவர். எப்படியாவது மேலும் செல்வம் சேர்க்க வேண்டுமென்று நினைத்தார். வீட்டின் மேல் பகுதியில் குருவிக்கூடு ஒன்றை அவரே செய்தார். குருவிகள் அதில் வந்து தங்கும் என்று அவரும் எதிர்பார்த்தார்.
அவர் எண்ணம் ஈடேறியது. ஒரு குருவி வந்து அந்தக் கூட்டில் தங்கியது. நான்கு முட்டைகள் இட்டது. நான்கு குஞ்சுகள் வெளியே வந்தன.
பாம்பு வரவே இல்லை. பொறுமை இழந்த அவர் ஒரு பெரிய கம்புடன் குருவிக் கூட்டை நெருங்கினார். மூன்று குஞ்சுகளை அடித்துக் கொன்றார். ஒன்றன் காலை உடைத்து கீழே எறிந்தார். பிறகு கால் உடைந்த குருவியிடம் அன்பு காட்டுவது போல் நடித்தார். வேளை தவறாமல் உணவளித்தார். கால் சரியான அந்தக் குருவி கூட்டை விட்டு பறந்து போனது.
மூன்று விதைகளுடன் குருவி மீண்டும் வரும், அரசனைவிட செல்வன் ஆவேன் என்ற எண்ணத்தில் காத்திருந்தார் அவர்.
அவர் எதிர்பார்த்தபடியே கதவைத் தட்டியது குருவி, அவரிடம் மூன்று விதைகளைத் தந்தது. ஒன்றை வீட்டின் பின்புறம் நடு. இரண்டாவதை வீட்டின் முன்புறம் நடு. மூன்றாவதை கிணற்றோரம் நடு என்று சொல்லிவிட்டு பறந்து சென்றது. எண்ணம் நிறைவேறியது என்று மகிழ்ந்தார் அவர். மூன்று தானியங்களையும் நட்டார். மறுநாளே மூன்று பெரிய பூசணிக் காய்கள் காய்த்திருந்தன.
தோட்டத்தில் இருந்த பூசணிக்காயை வீட்டுக்குள் கொண்டுவந்தார். அதை வெட்டினார்.அதற்குள் இருந்து எண்ணற்ற பூச்சிகள் வெளி வந்தன. அவர் வயலில் விளைந்திருந்த பயிர்களை எல்லாம் ஒரு நொடிக்குள் தின்றுவிட்டு மறைந்தன.
வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார் அவர். முன்புறத்தில் இருந்த இரண்டாவது பூசணிக்காயை வெட்டினார்.அதற்குள் இருந்து தீ வெளிப்பட்டது. அது அவரையும் அந்த மாளிகையையும் ஒரு நொடிக்குள் சாம்பலாக்கியது. கொடிய பண்ணையார் ஒழிந்தார் என்று ஊர் மக்கள் மகிழ்ந்தனர்.
மூன்றாவது பூசணிக்காயை உடைக்க யாருமே முன்வரவில்லை, அதற்குள் பாம்பு,தேள், பூரான் போன்ற எண்ணற்றவை இருப்பதாக பேசிக் கொண்டார்கள்.
Post a Comment