.

கேரி சேப்மேன் எழுதிய காதல் மொழிகள் ஐந்து என்னும் புத்தகம் சகாவரம் பெற்ற காதலுக்கான இரகசியப் புத்தகமாகும்.ஐம்பது இலட்சம் பிரதிகளிற்கு மேல் விற்பனையாகியுள்ள இப் புத்தகம் காதலர்களிற்கும் கணவன் மனைவி மற்றும் எதிர்காலங்களில் திருமண பந்தத்தில் இணைய விருப்பவர்களிற்கும் பொருத்தமான நூலாகும்.

கேரி சேப்மேன் முப்பது வருடங்களிற்கு மேலாக அமெரிக்காவில் திருமணவியலாளாராக பணிபுரிந்து வருகிறார்.அத்தோடு அவர் உலகளவில் பெரிதும் மதிக்கப்படுகிற இல்லறம் மற்றும் குடும்ப உறவு வல்லுனர்.அவர் எத்தனையோ யோடிகளைப் பார்த்துவிட்டார்.பிரிதல் திரும்பவும் சேர்தல்  முழுமையாகப் பிரிந்து செல்லும் யோசனையில் இவரிடம் உளவள சிகிச்சைக்கு சென்ற தம்பதிகள் கூட ஆறு மாதங்களில் இணையற்ற தம்பதியராக மாறியதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.

காதல் மொழிகளை ஐந்தாகப் பிரித்து அவற்றை வாசகர்களிற்கு விளங்கும்படி எளிமையான வசன நடையில் கொடுத்திருக்கிறார் சேப்மேன்.பாராட்டு வார்த்தைகள்,பிரத்தியேகமான நேரம்,பரிசுகள்,பணிவிடைகள்,ஸ்பரிசம் என ஐந்து காதல்மொழிகளை வாசகர்களிற்கு சொல்கிறார் சேப்மேன்.சேப்மேன் குறிப்பிட்டுள்ள ஐந்து காதல் மொழிகளில் உங்கள் வாழ்க்கைத் துணையின் காதல் மொழியை நீங்கள் அடையாளம் கண்டு கொண்டால் அதன் பின்னர் அவற்றுக்கான தீர்வுகளையும் உள்ளடக்கியுள்ளது இப்புத்தகம்.காதல் மொழியை இனங்காண்பதற்குரிய கேள்விகளையும் முன்வைக்கிறது இந்நூல்.

காதல் வயப்படுதல் உண்மையான காதல் அல்ல என்பதற்கான காரணங்களை இந்நூல் விளக்குகிறது.முதலில் காதல் வயப்படுதல் என்பது நாம் விழிப்புணர்வுடன் தேர்ந்தெடுக்கும் விடயமல்ல.நாம் காதல் வலையில் விழ வேண்டும் என்று விரும்பினாலும் அதைத் தேடிக் கொண்டிருக்கமாட்டோம். பெரும்பாலும் நாம் தவறான நேரங்களில் நமக்குப் பொருத்தமில்லாத மனிதர்களுடனேயே காதல் வயப்படுகிறோம் என்கிறார்.

இரண்டாவது காரணமாக அது முயற்சியின்றி வருவது என்று கூறுகிறார்.ஒரு பறவையின் உள்ளுணர்வு சார்ந்து அதன் இயல்பு எப்படியிருக்கிறதோ அது போல நமது காதல் அனுபவம் தோற்றுவிக்கும் இயல்பான உள்ளுணர்வு நாம் ஒருவருக்கொருவர் வினோதமான இயற்கைக்கு மாறான விடயங்களைச் செய்வதற்கு எம்மைத் தூண்டும் என்கிறது இந்நூல்.

மூன்றாவதாக காதல் வயப்பட்டிருக்கும் ஒருவர் அடுத்தவரின் தனிப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிப்பதில் உண்மையான ஆர்வத்துடன் இருப்பதில்லை என்கிறார் சேப்மேன்.காதல் அனுபவம் நம் சொந்த வளர்ச்சியின் மீதும் கவனம் செலுத்துவதில்லை.அடுத்தவரது வளர்ச்சியின் மீதும் கவனம் செலுத்து வதில்லை.மாறாக இனி வளர வேண்டியதில்லை என்ற உணர்வையே தருகிறது என்கிறார் சேப்மேன்.இங்கு நாம் வாழ்வின் மகிழ்ச்சி சிகரத்தை அடைந்து விட்டோம் அங்கு நிலைத்திருப்பது மட்டுமே நமது ஒரே விருப்பம் இதற்கு மேல் காதலன் அல்லது காதலி வளர வேண்டியதில்லை என்ற நம்புகிறோம் என்கிறார்.

காதல் என்றால் என்ன என்ற கேள்விக்கு விடையளிக்கிறார் சேப்மேன் அதாவது காதல் என்பது மரபுரீதியாக வடிவமைக்கப்பட்ட உள்ளுணர்வு சார்ந்த புணர்ச்சி நடத்தை என்கிறார்.இது பெரும்பாலும் உளவியலாளர்களின் கூற்றினை ஆராய்ந்தே இந்த முடிவிற்கு வந்துள்ளார் நூலாசிரியர்.

அதீத காதல் ஒருபோதும் நிரந்தரமாக நிலைத்திருப்பதில்லை.திருமணம் என்னும் புத்தகத்தில் வெறும் அறிமுகப் பகுதியே காதல் என்கிறது இந்நூல். அறிவு மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் அமைந்த காதல்தான் நிலைத்திருக்கும்.காதல் உணர்வுகள் அனைத்தையும் இழந்து விட்ட தம்பதியினரும் தங்களுடைய காதல் மயக்கம் கலைந்து யதார்த்த உலகிற்கு திரும்பிய பிறகும் தங்கள் வாழ்க்கைத் துணைவரை காதலிக்கும் திறன் நிச்சயம் உண்டு என்கிறார் சேப்மேன்.அதாவது நான் உன்னைத் திருமணம் செய்து கொண்டுள்ளேன் உனது ஆர்வங்களிற்கு ஆதரவாக இருக்க விரும்புகிறேன் என்கிற மனப்போக்கினை வளர்த்துக் கொள்ள உதவுகிறது இந்நூல்.

பரிசுகளைப் பற்றி சேப்மேன் பின்வருமாறு கூறுகிறார்.பரிசுகள் என்பது அன்பின் காட்சி ரீதியான அடையாளங்கள்.பெரும்பாலான திருமண விழாக்களில் மோதிரங்கள் மாற்றிக் கொள்ளப்படுகிறன.அந்த மோதிரங்கள் முடிவே இல்லாத அன்பில் அவ் இதயங்களை ஒன்று சேர்க்கும் உள்ளார்ந்த இணைப்பிற்கான வெளியுலக அடையாளங்கள் என்று கூறுகிறார் சேப்மேன்.ஒரு திருமணம் முறிவடையும் போது நாம் அந்த மோதிரத்தை அணிவதை நிறுத்துகிறோம் என்ற சுட்டிக் காட்டுகிறார்.



திருமணத்திற்கு முன்பு நாம் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் செய்யும் காரியங்கள் திருமணத்திற்குப் பிறகும் நாம் அவற்றைச் செய்வோம் என்பதை எந்த விதத்திலும் சுட்டிக் காட்டுவதில்லை என்கிறார் சேப்மேன். திருமணத்திற்கு முன் நாம் காதல் மாயையில் சிக்குண்டு கிடக்கிறோம். திருமணத்திற்குப் பின் காதல் மாயையில் சிக்குவதற்கு முன் எப்படி இருந்தோமோ அப்படியே மாறிவிடுகிறோம்.இவை நமது சொந்த ஆளுமை பெற்றோர்கள்,தேவைகள் விருப்பங்களின் தாக்கத்திற்கு உட்படுகிறன. ஆனால் ஒரே விடயம் மட்டும் உறுதி காதல் வயப்பட்டிருந்தபோது நாம் நடந்து கொண்டதைப் போல இருக்காது என்கிறார் சேப்மேன்.அதற்கான தீர்வுகளையும் விளக்கமாக அவரே முன்வைக்கிறார்.

மோசமான தேர்ந்தெடுப்புக்களைச் செய்யும் திறன் எமக்கு உண்டு.நாம் அனைவரும் மோசமான தேர்ந்தெடுப்பக்களைச் செய்திருக்கிறோம்.பிறரைக் காயப்படுத்தியிருக்குpறோம்.அந்தக் கணத்தில் அவை நியாயமானதாகத் தோன்றினாலும் பின்னர் அவற்றைப் பற்றிப் பெருமை கொள்வதில்லை.கடந்த காலத்தில் நாம் மோசமாக நடந்துள்ளோம் என்பதால் எதிர்காலமும் அவ்வாறுதான் இருக்க வேண்டும் என்பதில்லை.நாம் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும் போது பல திருமணங்கள் முறிவிலிருந்து மீள்கிறன.

அன்பு கடந்த காலத்தை அழிப்பதில்லை மாறாக எதிர்காலத்தை வேறுவிதமாக மாற்றியமைத்து விடுகிறது.நம் காதலை நமது வாழ்க்கைத் துணையிடம் வெளிப்படுத்தும்போது நமது கடந்த கால முரண்பாடுகளையும் தோல்விகளையும் கையாள்வதற்குரிய ழலை உருவாக்குகிறோம் என்கிறது இந் நூல்.

காதல் ஒரு சர்வரோக நிவாரணி அல்ல.ஆனால் எம்மைத் தொந்தரவு செய்யும் விடயங்களுக்கான விடைகளை நாம் தேடுவதற்கு பாதுகாப்பான ச10ழலை உருவாக்கி கொடுக்கும்.வேறுபட்ட இரு நபர்களால் இணக்கத்துடன் ஒன்றாகச் சேர்ந்து வாழ முடியும்.உங்கள் வாழ்க்கைத் துணைவரைக் காதலிப்பதற்கு நீங்கள் மேற்கொள்ளும் தீர்மானம் அபரிமிதமான ஆற்றலை உள்ளடக் கியுள்ளது.அவரது முதன்மைக் காதல் மொழியைக் கற்றுக் கொள்வது அந்த ஆற்றலை யதார்த்தமாக மாற்றுகிறது.காதல் உண்மையிலேயே உலகைச் சுழலச் செய்கிறது என்கிறார் சேப்மேன்.

உண்மையில் இந்நூலானது திருமண பந்தத்தில் இணைந்தவர்களும் இனிமேல் இணையப் போகிறவர்களும் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகமாகும். வேறுபட்ட கனவுகளுடனும் ஆளுமையுடனும் வரலாற்றுடனும் திருமண பந்தத்தில் இணையப் போகிறவர்கள் நாம்.விவாகரத்து கருத்து வேறுபாடு என்பனவற்றை தவிர்ப்பதற்கு இப் புத்தகம் ஒரு வழிகாட்டியாகும்.வாழ்க்கைத் துணையைப் புரிந்து கொள்ளுங்கள்.



Post a Comment

Previous Post Next Post