.

வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி,இதுவரை உலகம் ஐந்து முறை பேரழிவை எதிர்கொண்டிருக்கிறது. உலகின் ஏனைய உயிரினங்கள் பேரழிவை எதிர்கொள்ளும் போதெல்லாம் அதன் தொடர் விளைவாக மனித இனமும் ஏதாவது வகையில் பாதிக் கப்பட்டு பேரழிவை சந்தித்துள்ளது. இப்போதைய சூழலியல் மாற்றங்கள் உலகம் ஆறாவது பேரழிவை நோக்கி நகர்கிறதோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். இந்நிலையில்,சூழலியல் மாற்றங்கள் எதிர்காலத்தில் எத்தகைய பேரழிவை ஏற்படுத்தும் என்பது குறித்த அறிக்கையை ஐ.நா, காலநிலை அறிவியல் குழு வெளியிட்டுள்ளது

2018 ஆம் ஆண்டு, கணிக்கப்பட்டது போல் அல்லாமல் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே 2030ஆம் ஆண்டுக்குள், உலகளாவிய வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கவுள்ளது.

கடல் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 1901 முதல் 1971 வரையிலான கால கட்டத்தில் ஆண்டுக்கு, சராசரியாக 1.3 மில்லிமிட்டர் அளவு உயர்ந்த கடல்மட்டம்,2006 முதல் 2018 வரை, 3.7 மில்லியிட்டச் அதிகரித்துள்ளது.அதாவது இரண்டு மடங்கு வேகமாக உயர்ந்துள்ளது.

1950களிலிருந்து வெப்ப அலைகள் உள்பட வெப்பத்தின் தீவிரம் அதிகரிப்பது அடிக்கடி நிகழ்ந்துள்ளது.குறிப்பாக, நிலப்பரப்புகளில் அதன் நிகழ்வு அதிகமாக இருந்துள்ளது.இதற்கு நேர்மாறாக, குளிர் அலைகள் உள்பட குளிரின் தீவிரம் நிகழ்வது வெகுவாக குறைத்துள்ளது.மனிதர்களின் நடவடிக்கைகளால் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

உலக வெப்பமயமாதலின் மையமாக நகரங்கள் உள்ளன. பசுமை இல்ல வாயுக்கள் அதிகமாக இருப்பதாலும் நீர்நிலைகள், தாவரங்கள் ஆகியவை குறைவாக உள்ளதாலும் நகரங்களில் வெப்பமயமாதல் அதிகமாக உள்ளது.

பத்தாண்டுகளுக்கு ஒரு முறை, 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் கனமழை,வறட்சி ஆகியவை அடிக்கடி நிகழ்ந்துள்ளது.அதன் தீவிரத்தன்மையும் அதிகரித்துள்ளது.தீவிர வானிலை நிகழ்வுகளால் ஏற்படும் தாக்கங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இவை பல்வேறு இடங்களில் பல மாதிரியாக சேர்ந்து நிகழ்வும் வாய்ப்புள்ளது. எடுத்துக்காட்டாக,வெப்ப அலைகள், வறட்சி ஆகிய இரண்டு நிகழ்வுகள் ஒன்றாகவும் தீவிரமாகவும் நிகழ் வாய்ப்புள்ளது.குறிப்பிட்ட தீவிரமான நிகழ்வுகளின் காரணத்தை கண்டு பிடிப்பது கடினமாக உள்ளது. இருப்பினும், மனிதர்களின் செயல்களால் எந்தளவு தாக்கம் ஏற்படுகிறது என்பது குறித்து விஞ்ஞானிகள் கூறலாம்.

காலநிலை மாற்றமும் தரமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். இவ்விரண்டு பிரச்சினைகளையும் ஒன்றாக எதிர்கொண்டால் பொருளாதார ரீதியாக நல்ல பலன் கிடைக்கும்,புதைபடிவ எரிபொருள்களை பயன்படுத்துவதை குறைத்தல், பச்சை வீட்டு வாயுக்கள் வெளிப்பாட்டை குறைத்தல் போன்றவற்றில் உடனடியான தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொண்டால் இந்த நூற்றாண்டிலேயே உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்த முடியும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உயிரினங்களின் அழிவு

1970 முதல் 2016 வரையிலான 46 ஆண்டுகளில் மட்டும் பல்வேறு உயிரினங்களின் எண்ணிக்கை சராசரியாக 68வீதம் குறைத்திருக்கிறது. சில உயிரினங்கள் முற்றிலுமாக அழித்திருக்கின்றன. வேறு பல அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.இலங்கையிலும் கடந்த பத்து வருடங்களில் நீரிலும்,நிலத்திலும் வாழக்கூடிய பெரும்பாலான உயிரினங்கள் அழிவடைத்துள்ளமை தெரிய வந்துள்ளது. நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய அழிவடைந்த சுமார் 35 உயிரினங்களில் இலங்கைக்கே உரித்தான 21 உயிரினங்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாவரங்கள் மற்றும் ஆபத்தான விலங்கினங்களைப் பாதுகாக்க காடழிப்பு அல்லது உயிரினங்களை அழிப்பதை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு இதன்போது அரசிடம் அறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

காற்று மாசு

உலக சனத்தொகையில் 90 வீதமானவர்கள் அசுத்தக் காற்றை சுவாசிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.இதனால் வருடத்திற்கு 4.2 மில்லியன் பேர் உயிரிழப்பதாகவும் அதனை தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமெனவும் அது வலியுறுத்தியுள்ளது.

108 நாடுகளின் 4300 நகரங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்லில் இருந்து இந்த விடயம் தெரியவந்துள்ளது. அதேவேளை உலக அளவில் நிகழ்ந்த இறப்புகளில் 9 மில்லியன் பேரின் மரணங்களோடு தொடர்படையதாக காற்று மாசுபாடு இருந்துள்ளது என்று ''த லென்செட் மருத்துவ சஞ்சிகை தெரிவித்துள்ளது.

உலக அளவில் காற்று மாசுபாடுகளால் அதிக மரணங்கள் ஏற்படும் நாடுகளில் எமது அயல் நாடான இந்தியா ஐந்தாவது இடத்தில் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, உலகம் முழுவதிலும் இருக்கும் முதல் இருபது காற்று மாசாக்கப்பட்ட நகரங்களில், பத்து நகரங்கள் இந்தியாவில் உள்ளன. இதன்மூலம் காற்று மாசால் இலங்கையர்கள் பெருமளவில் உயிரிழப்பதற்க்கான காலம் வெகு தொலைவில் இல்லையென்பதனை இது உறுதிப்படுத்துகின்றது.

இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள அனல் மின்நிலையங்களினால் பெரும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டதுடன் காற்றும் மாசடைந்திருந்தது. நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் மின்சாரத்தை மட்டுமல்லாமல் கரித்துகள்கள் நிறைந்த காற்று மாசுபாட்டையும் உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது. முறையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யாததால் வெளியாகும் இம்மாசு,புத்தளம் மாவட்டத்தில் உள்ள பொது மக்களை மட்டுமல்லாது. அப்பகுதியில் விளையும் காய்கறிகள் முதல் அங்கு அமைத்துள்ள பள்ளிகளில் படிக்கும் இளம் மாணவர்கள் அனைவர் மீதும் கரும்புகையை படியச் செய்கிறது. பருவக் காற்றின் காரணமாக மின் நிலையத்திலிருந்து வெளியேறும் துசி துகள்கள் காற்றுடன் கலக்கும்போது மக்கள் சுவாச நோய்களுக்கு முகம் கொடுக்க நேரிடுவதாக சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்புக்களினால் சிறிது காலத்திற்கு முன்னர் கடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அதேவேளை அளவுக்கு மீறிய வாகனப் பாவனைகளினால் இலங்கையின் பெரு நகரப்பகுதிகளில் காற்று மாசடைவதாகவும் அதனால் இவ்வாறான நகரப்பகுதிகளில் வாழும் மக்கள் ஆஸ்துமா,நுரையீரல் புற்றுநோய் போன்ற வற்றினால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதே நேரம் நேஷனல் அகடமி ஒப் சயன்ஸ் அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை முழு உலகையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. முன்பு விஞ்ஞானிகள் கணித்திருந்த கணிப்பின்படி, எதிர்வரும் 2100ஆம் ஆண்டு கடல்மட்டம் ஒரு மீட்டருக்கும் குறைவான அளவே உயரும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய நிலை மிகவும் மோசமா கியிருப்பதால், 6 மீட்டர் அளவுக்கு அதாவது 19 அடி வரைக்கும் அதிகமாக கடல் மட்டம் உயரும் ஆபத்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு க்ரீன்லாண்ட் மற்றும் அண்டார்ட்டிகா விரைவாக உயர்வதே காரணம் என்று கூறும் விஞ்ஞானிகள் இந்த கடல் மட்டம் உயர்வதன் காரணமாக 1.9 மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலத்தை கடல் விழுங்கி விடும் எனவும் எதிர்வு கூறியுள்ளனர்.

கடல் மட்டம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அமெரிக்காவின் புவி அறிவியல் ஆராய்ச்சித்துறையில் பணியாற்றும் ரொபர்ட் கூப், கார்விங் ஹே, எரி மாரோ மற்றும் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜெர்ரி மிட்ரோவிகா ஆகியோர் அவர்களின் கடல் மட்ட உயர்வு தொடர்பான ஆய்வை சமர்ப்பித்திருந்தனர். அந்த ஆய்வில் கடந்த 2700 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறிப்பாக, 14 செ.மீ. அளவுக்கு கடல் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும் இதற்கு மனிதர்களால் ஏற்படும் உலக வெப்பமயமாதலே காரணம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


2018ஆம் ஆண்டு உலகின் வெப்பமான ஆண்டாகப் பதிவாகியிருந்ததாக உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.தொழில் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில்(1850-1900) இருந்த அளவை விட 2018 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் உலகின் சராசரி வெப்பநிலையானது கிட்டத்தட்ட ஒரு செல்சியஸ் அதிகரித்தது.கடந்த 22 ஆண்டுகளில் உலகிள் 20 வெப்பமான ஆண்டுகள் பதிவாகியுள்ளன. அதில் 2015-2018 வரையிலான ஆண்டுகள் மிக அதிக வெப்பமான ஆண்டுகளாகப் பதிவாகியுள்ளன.இந்த நிலை நீடித்தால் 2100 ஆம் ஆண்டில் 3-5 செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயரக்கூடும் என உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.இதனால் உலக வெப்பமயமாதல் காரணமாக தற்போது உலகில் பல்வேறு இடங்களில், அந்தந்த இடங்களின் சூழ்நிலைக்கு ஏற்ப அசுர வேகத்தில் பனிப்பாறைகள் உருகுவதன் வேகமும் அதிகரித்து வருகிறது. இதனால், கடல்நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது.

மேற்கு அண்டார்ட்டிகாலில் உள்ள ஸ்மித் பனிப்பாறையே மிக வேகமாக உருகி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேற்கு அண்டார்ட்டிகாவின் அமண்ட்சன் கடலில் உள்ள ஸ்மித் பனிப்பாறை, கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுதோறும்  230 அடி அளவுக்கு தடிமன் குறைந்து வந்துள்ளது.

இது புவி வெப்பத்தின் அதீத தாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.மேற்கு அண்டார்ட்டிகா மற்றும் கிரீன்லேண்ட்டில் உள்ள பனிப்பாறைகள், கடல் மட்டத்தை பல மீட்டர் அளவுக்கு உயர்த்தக்கூடியவை இவை முற்றிலும் உருகினால், அருகில் உள்ள பல நகரங்கள் மட்டுமல்லாது, ஆற்றங்கரையோர பகுதிகளும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.

தற்போது கிரீன்லேண்ட்டில் உள்ள பனிப்பாறைகள் 24 மணி நேரத்தில் 11 பில்லியன் தொன் உருகி கடல் நீர்மட்டம் அதிகமாகி உள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு மாதத்தில் மட்டும் கிரீன்லாந்தில் 21% பில்லியன் தொன் கணக்கான பனிப்பாறைகள் உருகியுள்ளன.இது குறித்து நாசா கூறுகையில் கிரீன்லேண்ட் பனிப்பாறைகள் மிகப்பெரிய உருகும் நிகழ்விற்குத் தயாராக உள்ளன. பில்லியன் தொன்களில் உருகும் நீர் அட்லாண்டிக் கடலில் கலப்பதால் கடல் மட்டம் கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. அதிக வெப்பத்தின் காரணமாகவே, அதிக அளவில் பனிக்கட்டிகள் உருகியுள்ளன. எதிர்காலத்தில் இன்னும் மோசமான நிலையை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது. இப்படி கடல் மட்டம் உயரும்போது போது 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழக்க வேண்டியநிலை ஏற்படும்.



அதேவேளை புவி வெப்பமயமாதல், காற்று மாசுபாடு போன்றவற்றால் இமயமலை உருகி கடல் மட்டம் உயர்ந்து வருவதால் இந்தியாவின் 45 கடலோர துறைமுக நகரங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் குறிப்பாக சென்னை, மும்பை, கொல்கத்தா, சூரத் ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் கடல்நீர் புகும் அபாயம் இருப்பதாகவும் சர்வதேச பருவ நிலை மாறுபாடு ஆய்வு குழுவின் ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதனால் எமது நாடான இலங்கையின் கடலோர நகரங்களும் கடலினால் விழுங்கப்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளபோதும் அப்படி ஒரு கடல் மட்ட உயர்வினால் இலங்கை பாதிக்கப்படுமா என்பது தொடர்பிலான எந்தவொரு கேள்விக்கும் தெளிவான பதிலையோ ஆய்வுத் ஆய்வுத் தகவல்களையோ பெற
முடியவில்லை. இலங்கை, சுமார் 160 கி.மீ நீளமுடைய கடற்கரையைக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 532000 சதுர கிலோமீற்றர் பரப்பளவுடைய கடற்பிரதேசத்தைக் கொண்டுள்ளது. இது தவிர 261000 ஹெக்டேயர் பரப் பளவுடைய உள்நாட்டு நீர் நிலைகளையும் கொண்டுள்ளது.அத்துடன் நான்கு புறங்களும் கடலினால் சூழப்பட்டதொரு தீவாகவே இலங்கை உள்ளது. இவ்வாறான நிலையில் இலங்கையிலும் கடல் மட்டம் அதிகரிக்குமானால் முழு இலங்கையுமே கடலினால் விழுங்கப்பட்டுவிடும் நில அமைப்பே இங்குள்ளது.

உலகம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புதான். இதை ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்கும் மேலாக அறிந்திருந்தும் போதுமான நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கிறோம்.இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்கிற உணர்வு மக்கள் மத்தியில் ஏற்படவில்லை சூழலியலுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் காரணமாக பருவநிலை மாற்றமும், அதன் விளைவாக உயிரினங்களுக்கு இனப்பெருக்க அச்சுறுத்தலும் உருவாகியி ருக்கின்றன,இதே நிலைமை தொடர்ந்தால், அடுத்த சில நூற்றாண்டுகளில் உலகில் மனித இனமும் அழிவை நோக்கி நகரத் தொடங்கும் என்பதை நாம் ஏனோ உணர மறுக்கிறோம்.






Post a Comment

Previous Post Next Post