.

வெகு காலத்திற்கு முன் அடர்ந்த காட்டுப் பகுதியில்... ஒரு குரங்குக் கூட்டம் வசித்து வந்தது. குரங்குகளின் அரசன் உயர்ந்தும் பலமுடனும் மதியூகத்துடனும் அவர்களை வழிநடத்தினான்.

குரங்குகள் நதிக்கரையில், ஓங்கி வளர்ந்த மாமரத்தைக் கண்டுபிடித்தன. அவற்றில் பெரியதும் சுவையானதுமான மாம்பழங்கள் காணப்பட்டன. அறிவாளியான குரங்கரசன் மற்ற குரங்குகளிடம்,

குரங்கரசன்: ஒரு பழத்தைக்கூட நீங்கள் நதியோடு போகச் செய்துவிடாதீர்கள்.அப்படி போகச் செய்தால் இந்த நதி அதை மனிதர்கள் வாழும் பகுதிக்கு கொண்டு சென்றுவிடும். ஒரு முறை இதனை அவர்கள் அறிந்து கொண்டால் நாம் இங்கு பாதுகாப்பாக இருக்க முடியாது. அவர்கள் பழத்தை தேடிவந்து நம்மையும் அழிப்பது நிச்சயம்.

குரங்குகள் எல்லாம் மிகக் கவனமுடன் மரக் கிளைகளின் நுனிகளில் இருந்த பழுத்த பழங்களை பறிப்பதில் கவனமாய் இருந்தன.

ஆனால் ஒருநாள் ஒரு பெரிய பழுத்த சுவையான மாம்பழம் யாருடைய கவனிப்பும் இல்லாத நிலையில், விழுந்து வெள்ளத்தில் போனது. மாம்பழம் நீரலைகளில் அடித்துச் செல்லப்பட்டு மறுகரை ஓரமாய் சென்றது.

அங்கு அரண்மனை சலவைத் தொழிலாளி துவைத்துக் கொண்டிருந்தான். அவன் இந்த மாம்பழம் மிதந்ததைக் கண்டு எடுத்தான்.அந்த மாம்பழம் சுவையாகவும் இனிமையாகவும் இருக்கும் என்று கருதினான். அதை தன் எஜமானன் ஆன அரசனுக்கு பரிசாக அளிக்க எண்ணினான்.

சலவைத் தொழிலாளி: அரசே இந்த தங்க மயமான மாம்பழத்தை காட்டுக்குள் நதிக் கரையில் கண்டெடுத்தேன். நீங்கள் இந்த உயர்ந்த பழத்தை விரும்புவீர்கள் என்று கருதினேன். ஆதலால் உடனே எடுத்து வந்தேன்.அரசன் அந்தக் கனியை உண்டான். என்றுமே சுவைத்திராத சுவையைத் தந்தது அந்த மாம்பழம். மேலும் பழ பழங்களை பெற விரும்பி சலவைக்காரன் நதியில் கண்டெடுத்த மாம்பழம் நிச்சயம் எதிர்புறக்கரையிலிருந்து வந்து ஒதுங்கியிருக்க வேண்டும். எனவே அங்கு நிச்சயம் ஒரு மாமரம் இருக்கும்.

மாம்பழத்தின் இருப்பிடத்தை அடைய விரும்பி சில படை வீரர்களுடன் படகில் எதிர்புறமாய் பயணம் செய்தான். படகி லிருந்தே அவர்களால் தொங்கும் மாம்பழங்களை காணமுடிந்தது. மாம்பழங்கள் பலவற்றை சுவைக்க முடியும் என்று அரசன் மகிழ்ந்தான்.

இதற்கிடையில் சில குரங்குகள் சில மனிதர்கள் வருவதைக் கண்டன. ஓடிச் சென்று பழச் சோலையை நோக்கி சிலர் படகில் வருவதை அரசனுக்கு தெரிவித்தன.

நாம் உடனே இந்த பழச் சோலையை விட்டு வெளியேற வேண்டும்.நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராக கொடிகளின் வழியே எதிர்புறம் சென்றுவி டுங்கள். நீங்கள் அனைவரும் பத்திரமாக சேர்ந்ததும் நானும் வருவேன்.


குரங்கரசனின் உயர்ந்த குணம்

அரசக் குரங்கு, குழந்தைகளையும் வயதான குரங்குகளையும் தாவி மறுகரை செல்ல உதவி செய்தது.

மற்றவர்கள் எதிர்புறம் காத்திருக்கும் நிலையில் தானும் புறப்படத் தயாரானது.
கொடியோ மிகவும் பலமிழந்த நிலையில் குரங்கரசனின் கனத்தை தாளாமல் அறுபட, குரங்கரசன் வெள்ளத்தில் விழுந்து சிக்கினான். எல்லாக் குரங்கினமும் உதவிக்கு ஓ என்று அலறின. மறுகரையில் அரசன் இதை கவனித்தபடி இருந்தான்.

குரங்கரசனின் பொறுப்பும் நிதானமும் மதியூகமும் கடமையும் அவனை மிகவும் கவர்ந்தன. நீரில் தத்தளித்த குரங்கரசனைக் காப்பாற்றும்படி வீரர்களுக்கு ஆணையிட்டான். வீரர்கள் குரங்கரசனை வெள்ளத்தில்
இருந்து காப்பாற்றி அரசன் முன் நிறுத்தினார்கள்.

மன்னன்: நான் உங்கள் அறிவுத் திறமையையும் பொறுப்பையும் மெச்சுகின்
றேன். உங்கள் குடிகளும் எதிர்புறம் பாதுகாப்பாக உள்ளனர். நீங்களோ சோர்வாக காணப்படுகிறீர்கள். என்னோடு வந்து என் அரண்மனையில் தங்கும்படி அன்போடு அழைக்கின்றேன், வாருங்கள்.

குரங்கரசன்: அரசே உங்கள் அன்பான அழைப்புக்கு நன்றி. நான் உங்களுடன் வர இயலாது. என் குடிகள் இருக்கும் இடமே என் சொர்க்கம். அவர்களுடன் இருக்கவே விரும்புகின்றேன்.

மன்னன்: உண்மையிலேயே நீங்கள் உயர்ந்தவர். அரசனுக்குள்ள பொறுப்புகளை அறிந்தவர். நானும் ஒரு அரசனே. உமக்கோ உமது குடிகளுக்கோ ஒரு தீங்கும் இழைக்க மாட்டேன். தங்க மாம்பழங்களுக்காகவே இங்கு வந்தேன். எனினும் இனி அவற்றைத் தொடப்போவதில்லை. இது உங்கள்
அரசாங்கம். எந்த ஆபத்தும் தரமாட்டேன். நீங்கள் உங்கள் உடமைகளோடு வாழுங்கள்.

குரங்கரசன்: எங்களைக் காக்க நீங்கள் எடுத்த முயற்சிகளுக்கு நன்றி. ஒரு பரிசும் தராமல் எனது உயிர் நண்பனை நான் அனுப்ப விரும்பவில்லை. தயவு கூர்ந்து சில பழுத்த மாம்பழங்களை எனக்காக கொண்டு செல்லுங்கள். உங்கள் அரண்மனைக்கு வருடா வருடம் மாம்பழங்களை அனுப்பி வைக்கின்றேன். அவை நம் நட்பை பலமாக்கி வைக்கும்.

அரசனுடைய ஆட்கள் மாம்பழங்களை படகில் ஏற்றி அரண்மனையில் சேர்த்தார்கள்.குரங்குகள் காட்டிலேயே தங்கி வசித்தன.

பார்த்தீர்களா.... குரங்கரசனின் கதையை. எத்தனை பொறுப்பானவன், எத்தனை அன்பானவன், எத்தனை கனிவு தன் மக்களின் மீது. நீங்களும் அப்படித்தான் இருக்க வேண்டும். 

நீதி- எல்லோருடனும் கனிவுடன் பழகுங்கள்.

Post a Comment

Previous Post Next Post