ஒரு நல்ல வெயிற் கால பகல் பொழுதில் ஒரு முயல் தென்னை மரம் ஒன்றின் நிழலில் படுத்துறங்கியது. பகலில் நிறைய கேரட்டுகள் சுவைத்து பகல் உணவாக்கியது. குறட்டையுடன் ஆழ்ந்த உறக்கத்தில் விபரீதமான கனவு ஒன்றைக் கண்டது. இந்த உலகமே நொறுங்கி பொடிப் பொடியானது, திடீரென்று ஒரு கூரிய சத்தம், கனவு கண்டபடி மரத்தடியில் படுத்திருந்த முயலின் பக்கத்தில் காய்ந்த தேங்காய் ஒன்று விழுந்தது.
சடாரென்று எழுந்த முயல் ஓலமிட்டது. காதில் விழுந்த சத்தம் உண்மையிலேயே உலகம் பொடிப் பொடியானதாகக் கருதி உலகம் அழியப் போவதாக உரத்தக் குரலில் கூவியது. முயலின் இந்த கூக்குரலைக் கேட்டதும் மற்ற விலங்குகளும் வந்து சேர்ந்துகொண்டு உலகமே அழியப்போவதாக ஒருமித்த குரலில் சத்தம் போட்டன. கடைசியில் எல்லா மிருகங்களும் காட்டின் நடுப்பகுதியை வந்தடைந்தன.அங்குதான் காட்டின் அரசனான சிங்கத்தின் வசிப்பிடம் இருந்தது.
சிங்கம் அப்போதுதான் தனது உணவை முடித்துவிட்டு உறங்கத் தொடங்கி இருந்தது.விலங்குகளின் கூப்பாடு சத்தம் அதன் தூக்கத்தை கலைத்துவிட்டது. உடனே குகையில் இருந்து வெளியே வந்து
சிங்கம்: ஏன் இப்படி கத்துகின்றீர்கள்? உங்களுக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது ?
யானை: அரசே இந்த உலகம் அழியப்போகின்றது. அதுதான் நாங்கள் கதறி ஓடக் காரணம் என்றது.
சிங்கம்: என்ன உளறுகின்றீர்கள்.யார் சொன்னது அப்படி?
யானை உடனே கரடியையும் கரடி காட்டெருமையையும் கை காட்ட ஒருவரை ஒருவர் சுட்டிக்காட்டிக் கொண்டனர். சிங்கமோ கோபமாக யார் இந்த வதந்தியை பரப்பியது என்று அறிவதில் கவனமாய் இருந்தது. கடைசியில் மான், முயல்தான் இதைத் தொடங்கியது என்று சொல்ல நடுக்கத்துடன் சிங்கத்தின் முன் நின்றது முயல்.
சிங்கம்: எதனால் நீ உலகம் அழியப்போவதாக கருதுகின்றாய் சொல்?
முயல்: நான் தென்னை மரத்தடியில் உறங்கியபோது கனவில் ஒரு பெரும் சத்தம், அதை வைத்துத்தான்... சிங்கம் உடனே தெளிவுடன் எல்லா மிருகங் களையும் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றது.
சிங்கம்: இந்த சிறு முயல் மேலிருந்து விழுந்த தேங்காயின் சத்தத்தைக் கேட்டு அதிர்ந்து இந்த வதந்தியைப் பரப்பியுள்ளது. நீங்களும் அதை நம்பிவிட்டீர்கள். இனிமேலாவது வதந்திகளை நம்பமாட்டேன் என்று முடிவெடுங்கள். எல்லா மிருகங்களும் வெக்கத்துடன் தலை குனிந்தபடி எதையும் இனிமேல் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என முடிவெடுத்தன.
மிருகங்கள் கண்மூடித்தனமாக வதந்தியை நம்பி ஏமாந்ததை அதுவும் ஒரு சிறு முயலின் வார்த்தையை நம்பி ஏமாந்தது தெரிகிறதா?
இந்தக் கதையின் நீதி என்னவென்றால் இனிமேல் நீங்கள் எதையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது. அது என்ன, ஏன்,எப்படி என்று ஆராய்ந்து பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்.....
Post a Comment