.

இதுவரை நான் பார்த்திராத பக்கங்கள்.எனினும் மிக்க லாவகமாக வழுக்கிச் செல்லும் வருடங்களையே அத்தியாயங்களாக்கி இது நாவல் என்ற பிரமைக்குள்ளிருந்து இது நாங்கள் கண்ட வாழ்க்கைச் சுவடுகள் என்ற நிலையைக் கொண்டமைந்திருக்கிறது போக்காளி நாவல்.

சாதாரணமாக ஒவ்வொரு வீட்டிலும் நடந்திருக்கக்கூடிய நிகழ்வுகளைக் கொண்டு தொடங்கும் 1988 ஆம் ஆண்டு. வவுனியாவில் அப்படியில்லை.ஆயினும் வல்வெட்டியிலிருந்து என் தங்கை தன் பிள்ளைகளை வவுனியாவில் இருந்த எமது வீட்டில் அடைக்கலமாகத் தந்துவிட்டுத்தான் வீட்டுக்குத் திரும்பினாள். நள்ளிரவில் வீடு சுற்றிவளைக்கப்பட்ட காலம், காலையில் எழுந்து காட்டோரத்தில் மலசலங் கழிக்கச் சென்றால் அங்கு பூரி மணக்கும். பற்றைகள் செத்தைகள், மூலை முடுக்குகள், சந்து பொந்துகள் எங்கும் அவர்கள்தான். அக் காலத்திற்தான் போக்காளியை தாய் துரத்துகிறாள்.

பயணங்கள் பற்றிய விவரணங்கள் மிக நேர்த்தியாகப் படிப்பவரை வசீகரிக்கும் வண்ணம் எழுதப்பட்டிருந்தாலும் அது எங்களுடைய பயணங்களின் பரிமாணத்தை அல்லது கோரத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து வருந்தவே முடிகிறது. உண்மையில் இந்த நாவல் முப்பதாண்டு போரையும் அதே காலத்தில் வன்னியில் வாழ்ந்த புலிகளையும் ஏனைய இயக்கங்களையும் மாந்தர்களையும் தனது நிலைக்களனாகக் கொண்டே நகருகிறது. ஏற்கனவே ஷோபாசக்தி கூறியது போல நாங்கள் வீட்டுக்கு வழியில்லாட்டியும் திட்டிப் போட்டாக்குற சனம் நக்க வழியில்லாட்டியும் லட்சக்கணக்கில கணக்குப்பார்க்கிற குணம். பாத்திரங்கள் பேசுகிற அரசியலும் அவர்களின் எதிர்பார் ப்புகளும் புதியதல்ல. ஏற்கனவே அவர்களை பத்திரமாக அனுப்பி விட்டு அங்கிருந்து வரும் பணத்தில் இங்கே மிக ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சமூகத்தை] நாமறிவோம். இவர்களிற் சிலர் தமது (பண) வலிமையால் பொறுப்பாளர்களுக்கு நாக்குக்கு ருசியாகச் சமைத்துப் பரிமாறியே வளைத்து வைத்திருப்பார்கள். இவர்களே இயக்கத்தின் மக்கள் அமைப்புகளில் முன்னணி வகிப்பர். அவர்களது உரையாடல்களே இந்த நாவலின் பாத்திரங்களில் தெறிப்பதாக தோன்றுகிறது.

அகதிக் கொட்டில் இது எமது வாழ்க்கை. அங்கே அகதிக்கு மாளிகை தொலைக்காட்சி மின் விளக்கு,காஸ் அடுப்பு, அட அட அட கட்டிலென்ன, மெத்தையென்ன, கட்டி முத்தமிடலென்ன. தொலைபேசிகள்,கடிதப் போக்குவரத்துகள். சிலிர்க்குதே. தொலைபே சிக்காகவே யுத்தப் பிரதேசம் விட்டு வெளியே சென்று காணி வாங்கி வீடு கட்டும் பேறு வாய்த்திருக்கிற குடும்பங்களை அப்போதே நாம் பொறாமையோடு பார்த்தோம்.

நிலம் மெழுகாத மண் தரையில் பாயுமின்றி தரப்பால் துண்டுகளை பரப்பிப் படுத்திருந்து, திறந்த வெளிக்கிணற்றில் ஆண், பெண் பேதமின்றி சமதை யாக குளித்த எமது மக்களுக்கு உடை மாற்றவும் மறைப்பில்லை. மலசலகூட மறைப்புகளும் பனங்கூடல்களாக இருந்தது என்பதையும் வைத்தியசாலைக்கு போக வழியின்றி அந்தக் கொட்டில்களில் பிரசவித்த பெண்களையும் அதைக்கூட மறைக்க முடியாமல் ஆண்களை தூரத்தள்ளி நில்லுங்கோ என்று விரட்டி யதையும் நினைத்துப் பார்க்க வைத்தது இந்த நாவல்.


இங்கே ஒரு பெண் தனக்குள் கருவை ஏற்க இந்தியாவுக்கே சென்று அங்கு தங்கியிருந்து குழந்தைப் பாக்கியத்தை பெற்றாள். அவளுக்கு அருமையான தம்பி வாய்த்திருந்தான். அவன் மட்டுமல்லாது அங்கு வாழ்பவர்களில் அதிகமானோர் தாம் அனுபவிக்காத,கண்ணால் காணாத மனைவி பிள்ளைகள், உறவுகளுக்காக தீக்குளிக்கிறார்கள். 

சொந்த மண்ணில் வாழ்க்கைக்காக ஏங்கும் லட்சக்கணக்கான மக்களைப் போலல்லாது அவர்கள் மொழியறியாத சுவாத்தியமற்ற சூழலில் கடுங்குளிரிலும் பனியிலும் அனல் உலைகளிலும் கொதித்துக்கொண்டு வெளிநாடுகளில் துயருற என்ன காரணம்? கதையின் நாயகனால் சொந்த நாட்டுக்கு வர முடிந்தபோதும் அவன் இங்கே தொடர்ந்து வாழ ஏன் விரும்பவில்லை?

அவன் எந்த இயக்கத்திலும் போராளியல்ல, ஆதரவாளனும் அல்ல. என்றாலும் அந்த மனிதனை சொந்த மண்ணிலிருந்து விரட்டுவது அவனைச் சூழ உள்ளவர்களது வாழ்க்கை நலன்களே. அவனது குடும்பத்தையும் உள்ளடக்கியே பேசுகிறேன்.எனக்கொரு கதை நினைவுக்கு வருகிறது. சுப்பரும் அவரது மனைவியும் பாலைப்பழம் வெட்ட காட்டுக்குப் போனார்களாம். வெட்டிக் கீழே விழுந்த கொப்பிலிருந்து பழம் ஆய்ந்து கொண்டிருக்கும்போது கரடி வந்துவிட்டது. சுப்பர் பாய்ந்து மரத்தில் ஏறிவிட்டார்.அவரது மனைவிக்கோ மரம் ஏறத் தெரியாது. எனவே அவள் கரடியைப் பார்த்து கூச்சலிட்டவாறே கையிலிருந்த முறத்தால் அதை அடிக்க ஆரம்பித்தாள். கரடி திகைத்தது. மேலேயிருந்த சுப்பரும் கத்தினார். எப்படி? குடடி பாக்கியம், நல்லாக் குடு, ஆற்ற மனிசியெண்டு நினைச்சார், விடாதையடி குடு என்று கத்தினார் கரடி ஓடியே விட்டது.

இதுதான் இந்தக் கதை முழுதும் ஓடிக்கொண்டிருக்கிற பிரதான உரையாடல்கள். விட்டிருந்தால் இவர்களது திட்டங்களே போராக மாறி வருவதுபோல ஒரு பிரமை. கதையினுள் ஊடாடும் சொலவடைகள் மிகஜோர். நாம் வெளிப்படையாகப் பேச நினைத்தாலும் பேச முடியாத பல சொலவடைகள் காத்துப் போயிரும்,ரிம்மில ஓடுது, தகடு வச்சிட்டாங்கள், கிட்ட வரட்டும்,திட்டமிருக்கு, வெண்டாத் தலைவர், தோத்தாத் தளபதி இப்படி எக்கச்சக்கமான வார்த்தைகளில் பல பதிவு பெற்றிருக்கிறது.

வெளிநாடுகளிலும் தமிழர்களுக்கேயான பரம்பரைப் புத்தி எனப்படும் பல விடயங்களைக் கைவிடாமல் வாழ முற்பட்டாலும் எல்லாமே மொத்தமாக சறுக்கி சகதியில் விழுவதாக கருதியிருக்கிறார் கதாநாயகன். ஆனால் இந்த வாழ்க்கையை இவர்கள் ஆரம்பிக்கு முன்பே வெளிநாடுகளில் படிக்க, தொழில் செய்யவெனச் சென்ற எமது கல்விமான்களின் வழிகாட்டுதல்களா? அல்லது எனது கார் எனது பெற்றோல் எனது வீதி என்ற மனோபாவமா? சேர் பொன் இராமநாதன், பொன்னம்பலம் அருணாச்சலம் போன்றோர் நாட்டிலே சீதனத்துக்கு ஒரு திருமணமும் போன இடத்தில் வெள்ளையினப் பெண்கள் பலரையும் மணந்து விவாக ரத்துகளும் புதிய வாழ்க்கையுமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் அல்லவா. எனவே அது கோத்திரத்துக்குள்ள குணம் என ஒதுங்கி விடுவோம்.

பெண்களுடன் விபச்சாரம், அவர்களோடு கூடி வாழ்தல், தனக்கென ஒன்றை சொந்த மண்ணிலிருந்து கொண்டு வருதல், அந்நியனுக்கு கல்யாணப் பதிவைசெய்து தனக்கான பெண்ணை அழைத்தல், இன்னும் புகைப்படத்துக்கு திருமணம் செய்து பெண்ணை அனுப்புதல், ஓட்டுமாட்டாக மணமகன் இல்லாமலே திருமணப் பதிவையும் செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் பெண்கள், 20 வயதில் எடுத்த போட்டோவை அனுப்பி 18 வயதுப் பெண்னை சிங்கப்பூருக்கோ இந்தியாவுக்கோ அழைத்து திருமணம் செய்தல், ஊருக்கே வந்து திருமணம் செய்து பெண்ணையும் விருந்துகளையும் அனுபவித்துவிட்டுப் போய் எடுக்கிறன் என்று கூறிப்போன மாப்பிள்ளைக்காக பல வருடங்கள் காத்திருக்கும் பெண்கள் என இப்படி ஏராளமான சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம். அதன் உண்மைத் தன்மையை நாவல் துலக்குகிறது. இந்தப் பெண்களை அங்கிருந்து கலோ என அழைத்தால் கிலோவில அதுகும் சிலோவாக இல்லாமல் வரும் பணமே கவர்ந்தது என்பதையார் மறுக்க முடியும்.

முழுக்க முழுக்க எனது சிந்தனைகளைத் தூண்டி விட்டிருக்கிறது இப் புத்தகம். இதை திறந்த நாள் முதல் யாரைப் பார்த்தாலும் இந்தப் புத்தகத்தைப் பற்றியே பேச வைத்திருக்கிறது. என்னைச் சந்திக்க வரும் எவரையும் இந்தப் புத்தகத்தைப் பற்றி அறியாமல் போக விடவில்லை என உணரும்போது நான் எழுதிய புத்தகங்கள் பற்றி நான் ஒருபோதும் பேசியதில்லை என்பதை நினைவூட்டியது. அட நாம் அப்படி என்னதான் எழுதிவிட்டோம். இதோ ஒரு இனத்தை அழிக்கத் துடித்த இனவாத அரசின் எந்தத் தூண்டுதலும் இல்லாமலே பெருந்தொகை தமிழர்கள்(போரில் கொல்லப்பட்டதைவிட பல மடங்கு என நினைக்கிறேன்) அவர்களது சந்ததி உட்பட அழிந் துபோன, அழிந்துபோகும் ஒரு வரலாற்றுப் பதிவே போக்காளி மாக்கியவல்லியின் இன அழிப்புக்காக குடியேற்றம் என்ற கோட்பாட்டை விட இது வேகமாகச் செயற்பட்டிருக்கிறது. மொழியும் நாடும் பண்பாடும் கலாசாரமும் எப்பொழுதும் மீள முடியாதபடிக்கு தொலைந்துவிட்டது. இன்னும் சில ஆண்டுகளின் பின் அங்கிருந்து எமது மக்களைத் தேடிவரும் காசோலைகளும் முடிவுக்கு வந்துவிடும்.

எத்தனை காலம் தூங்கிக் கிடப்பாய், வீட்டிலே தலைகுனிஞ்சு ஏன் நடக்கிறாய் ரோட்டிலே என்ற செல்லக்குட்டி அண்ணரின் பாட்டும்.

வீட்டுக்கொருவர் நாட்டைக் காக்க விரைந்து வாரீர்..விடுதலை இன்றேல் அழிவுகள் தொடரும் புரிந்து வாரீர்.. என்ற புதுவை அன்பனும் இந்த மண்ணில் விதைத்துச் சென்ற அந்த வீரிய எண்ணங்களை சுமந்து போராடிய அடிப்படை வசதிகளற்ற ஏராளமான போராளிகளின் கனவு வீரச்சாவுதான். இந்தப் போரை வென்று வீடு திரும்பும் நோக்கம் யாருக்கும் இருக்கவில்லை என்று கூற முடியாது. அனைவருமே நேசித்த பனங்கூடல்கள் அழிந்துவிட்டன. அனைவருமே பார்த்த தாயின் உடல் முதுமை யடைந்து நலிந்து அழிந்துவிட்டது.

நாடும் வெளிநாடுகளின் நாகரீகத்தை உள்வாங்கி மாறி வருகிறது. நாங்கள் முழுமையாக அவங்கள் தான் எனச் சொல்லிவிடுவோம் என்ன செய்வது தோல் காட்டிக் கொடுத்துவிடும். சொந்த மண்ணின் உறவுகளின் கனவுகளுக்காக இடைவிடாது உழைத்து அற்ப ஆயுசில் தம்மை அழித்துக்கொண்ட ஏராளமான போக்காளிகளை நாம றிவோம். இன்னும்கூட பேசப்படாத பக்கங்கள் நிறைய கைவிட்டுப் போயிருக்கிறது.என்றாலும் நவமகனின் இந்தக் கடுமையான முயற்சி தன் இலக்கை அடைந்து வாசகரை பூரிக்க வைக்கிறது. இந்த மண்ணில் வாழ்ந்துகொண்டே வெளிநாட்டுக் கனவில் உலவும் அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம் போக்காளி.

@தமயந்தி


எங்கள் இணையத்தளத்தை விட்டுச் செல்வதற்கு முன் இவற்றையும் பார்வையிடுங்கள்.நீங்கள் வாசிக்காத புத்தகங்களாக இவை இருக்க கூடும்.

சேப்பியன்ஸ்

மஞ்சள் பிசாசு

21 ம்நூற்றாண்டிற்கான 21 பாடங்கள்

நகைச்சுவைக் கதைகள்

ஹோமோ டியஸ்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

புதுக்காட்டுப் பள்ளங்கள்

கௌரவன்

நாகரிகங்களின் மோதல்

டாலர் தேசம்

மனித குலம் நம்பிக்கையூட்டும் வரலாறு 

அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு

பெண்களை உயர்த்துவோம் சமுதாயத்தை உயர்த்துவோம்

யசோதரை

இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு


Post a Comment

Previous Post Next Post