மணிகண்டன் தன் பெற்றோருடன் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.மிகவும் சோம்பேறி, அவன் எந்த வேலையையும் விருப்பமுடன் செய்யமாட்டான்.அவன் பெற்றோர்களோ மணியை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வந்தார்கள்.
மணியை நல்ல ஒழுக்கத்தோடு வளர்க்க வேண்டும் என்று நினைத்தார். அப்பா மணியிடம் நீ அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்,காலைக் கடனை முடித்துவிட்டு,சிறிது உடற் பயிற்சி செய்ய வேண்டும். அதன்பிறகு குளித்து விட்டு கடவுளை வணங்க வேண்டும். பிறகு பள்ளிப்பாடங்களை எடுத்து ஒருமுறை படித்துவிட்டு, காலை உணவு உண்டவுடன் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டார்.
மணியோ சரி சரி என்று கேட்டு விட்டு... அவனால் அதிகாலையில் எழுந்திருப்பது என்பது மிகவும் கடினம். உடற்பயிற்சி செய்வதோ நினைத்துப் பார்க்க முடியாத விடயம். இவ்வாறு அப்பாவின் எண்ணத்திற்கும் மணியின் சோம்பேறித் தனத்திற்கும் இடையே பெரிய போராட்டமே நடந்தது. அவன் செயலால் அப்பா தினமும் மணியை திட்டிக்கொண்டிருந்தார். மணியும் வருத்தமுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தான்.
பள்ளிப் படிப்பிலும் மணியால் சீரான மதிப்பெண்கள் பெற முடியவில்லை.அப்பாவின் திட்டும் பள்ளி ஆசிரியரின் கண்டிப்பும் மணிக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டு பண்ணியது.
தன்னால் எதையும் சரியாக செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டான். மணி சோம்பேறி என்பதைத் தவிர மிகவும் நல்ல பிள்ளை. அப்பாவிற்கும் சரி நம்ம பையன் திறமை, அவ்வளவுதான் எனறு சலித்துக் கொண்டார். ஒருநாள் ஊரிலிருந்து மணியின் மாமா வந்தார்.
மணிக்கு மாமா என்றால் மிகவும் பிடிக்கும். எப்பொழுது வந்தாலும் மணிக்கு பரிசு,விளையாட்டு சாமான்கள் வாங்கி வருவார்.
மணியின் படிப்பு பற்றியும் சோம்பேறித்தனத்தை பற்றியும் அப்பா,
மாமாவிடம் கவலையுடன் கூறிக் கொண்டார். மாமா, இது ஒரு விடயமா, எல்லாம் சரியாகிவிடும் என்றார்.
மறுநாள் காலையில் மாமா எழுந்து
மணியிடம் வந்தார். மணி நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். மாமா மணியின் அருகில் அமர்ந்து மணி நான் கடைத்தெருவுக்கு போகிறேன், உனக்கு ஏதாவது விளையாட்டு சாமான் வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன், நீயும் என்கூட வருகிறாயா, வந்தால் விளையாட்டு சாமான் வாங்கலாம் என்று சொல்லி முடிக்கும் முன் மணி வருகிறேன் மாமா என்றான். மாமாவுக்கு ஆச்சரியம், எப்படி கூப்பிட்டாலும் எழுந்திருக்க மாட்டான் மணி, அப்படியிருக்க
விளையாட்டு சாமான் என்றதும்
துள்ளிக் குதித்து எழுந்து விட்டானே.
உடனே மாமாவுக்கு ஒரு
யோசனை வந்தது. சரி நான் உனக்கு 20 வினாடி தருகிறேன், அதற்குள் உன் கடமைகளை முடித்து தயாராக இரு போகலாம் என்றார்.
என்ன ஒரு ஆச்சரியம், 20 வினாடிக்குள் அனைத்தையும் முடித்து
விட்டு நான் தயாராக உள்ளேன் என்றான். மாமாவுக்கு மகிழ்ச்சி. இரு
வரும் கடைக்குச் சென்றனர்.மணிக்கு பிடித்த பொருளை மாமா வாங்கித் தந்தார்.
மணியும் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தான். அன்று இரவு மணியிடம் மாமா உரையாடிக் கொண்டிருந்தார். மணி உனக்குப் பிடித்த
விடயம் என்ன என்று கேட்டார்.எனக்கு விளையாட்டு சாமான்கள் என்றால் மிகவும் பிடிக்கும், இனிப்பு பிடிக்கும் என்றான்.அதைக் கேட்ட மாமா சிரித்துக்கொண்டே அருமை என்றார். அப்போ படிக்க பிடிக்காதா?,விளையாட பிடிக்காதா? என்றார்.
மணி சிரித்துக்கொண்டே அவ்வளவு பிடிக்காது மாமா என்றான்.
மாமா மணியின் முதுகை வருடி கொடுத்துக் கொண்டே தொலைக்காட்சி பார்ப்பது,தூங்குவது என்பது ஒரு மனிதனை நல் வழிப்படுத்தாது, நல்ல மனிதனாக வாழ நல்ல பழக்க வழக்கங்கள் மற்றும் நல்ல படிப்பு தேவை. எப்பொழுதும் நம் கடமைகளை நாம் சிறக்க செய்ய வேண்டும் மணி என்றார் மாமா. உன் வயதில் நீ நன்றாக படிக்க வேண்டும், விளையாட வேண்டும் மற்றும் நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்றார். மணி சிறிது நேரத்திற்குப் பிறகு சரிங்க மாமா என்றான்.
மாமா மகிழ்ச்சியுடன் நீ உன் அப்பா பெருமை படும்படி,ஆசிரியர் பாராட்டும் படி நடக்க வேண்டும். உன்னால் எல்லாம் முடியும். நீ அற்புதமான குழந்தை என்றார். இவ்வாறு பேசிக்கொண்டே
வீடு திரும்பினார்கள். மறுநாள் காலை மாமா ஊருக்கு புறப்பட்டார்.
மணி . . மாமா ஒரு மாதம் கழித்து உனக்கு ஒரு பரிசு வாங்கி அனுப்புகிறேன், அதற்குள் உன் மாற்றத்தை பார்க்கவேண்டும் என்றார். மணிமாமாவை கட்டித் தழுவி சரிங்க மாமா என்றான்.
மணி தனக்குள் பேசிக்கொண்டான் மாமா சொல்வதைப்போல் நடந்தால் மாமா பரிசு வாங்கித் தருவார். நாளையிலிருந்து நான் என் கடமையை செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டான். முதல் நாள், இரண்டாம் நாள் மணிக்கு தன் கடமைகளை செய்ய கடினமாக இருந்தது.அவன் முயற்சியைப் பார்த்த அப்பாவிற்கு மிகவும் மகிழ்ச்சி. மணி அப்பாவின் திட்டு இல்லாமல் பள்ளிக்குச் சென்றான்.பள்ளிப் படிப்பிலும் ஆர்வத்தைக் காட்டினான். அதனால் நல்ல புள்ளிகளைப் பெற்றான். ஆசிரியரும் பாராட்டினர். மணிக்கு நம்பிக்கை பிறந்தது.
இவ்வாறு நாட்கள் கடந்தன. ஒருநாள் பள்ளியிலிருந்து வீடு
திரும்பிய மணிக்கு பரிசு காத்திருந்தது. ஆர்வமுடன் பரிசுப் பொருளை திறந்து பார்த்தான். அவனுக்குப் பிடித்த விளையாட்டு சாமானும் ஒரு நல்லொழுக்க சிறுகதைப் புத்தகமும் இருந்தது. மணிக்கு மிக்க மகிழ்ச்சி. இப்பரிசு மணியை மீண்டும் ஊக்கப்படுத்துவதைப் போல் இருந்தது. மணி தன் கடமையிலிருந்து தவறாமல் வெற்றிநடை போட்டான்.
எங்கள் இணையத்தளத்தை விட்டுச் செல்வதற்கு முன் இவற்றையும் பார்வையிடுங்கள்.உங்களுக்கு வாழ்க்கைக்கு தேவைப்படும் குட்டிக் கதைகளாக அமையும்.
Post a Comment