.


உலக தற்கொலை தடுப்பு தினம் September 10 ஆம் திகதியாகும். தற்கொலை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனைத் தடுக்கும் முகமாக உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் உலக மன ஆரோக்கிய சம்மேளனம் என்பவற்றுடன் இணைந்து சர்வதேச தற்கொலை தடுப்பு சங்கத்தால் இந்தத்தினம் 2003 ஆம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தத் தினத்துக்கான 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிக்கான தொனிப்பொருள் 'செயற்பாட்டின் மூலம் நம்பிக்கையைச் சிருஷ்டித்தல்' என்பதாகும்.

உலக சுகாதார ஸ்தாபனத்தால் இந்த ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் உலகளாவிய ரீதியில் வருடந்தோறும் 703,000 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதன்பிரகாரம் ஒவ்வொரு 40 செக்கனுக்கும் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். அதே சமயம் 15 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடை யவர்களின் மரணத்திற்குப் பங்களிப்புச் செய்யும் நான்காவது காரணியாக தற்கொலை உள்ளது. 77 சதவீத தற்கொலைகள் வறிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களில் இடம் பெறுகின்றன.

உலகில் அதிகளவில் தற்கொலைகள் இடம்பெறும் நாடாக ஆபிரிக்க நாடான லெஸோதோ உள்ளது. அந்நாட்டில் வருடாந்தம் 100,000 பேருக்கு 72.4 என்ற வீதத்தில் தற்கொலைகள் இடம்பெற்று வருவதாக தரவுகள் கூறுகின்றன.தற்கொலை செய்துகொண்டவர்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் தற்கொலை முயற்சியில் களம் இறங்கி உயிர் தப்பியவர்கள் தொகை 25 சதவீதம் அதிகம் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.அத்துடன் பெருந்தொகையானவர்கள் தற்கொலை தொடர்பான எண்ணத்தால் ஆட்கொள்ளப்பட்டு விரக்தி நிலையில் வாழ்கின்றனர்.

தற்கொலைகளுக்கு 90 சதவீதம் பங்களிப்புச் செய்யும் காரணியாக மன அழுத்தம் உள்ளது.மற்றும் உளவியல் ரீதியான காரணிகள் தற்கொலை எண்ணத்தைத் தூண்டுவதில் செல்வாக்குச் செலுத் துகின்றன.உடலியல் மற்றும் உளவியல் ரீதியான காரணிகள் தற்கொலை எண்ணத்தை தூண்டுவதில் செல்வாக்குச் செலுத்துகிறன.

இன்றைய இயந்திர உலகில் கணினிகள் மற்றும் கையடக்கத்தொலை பேசிகளில் மூழ்கிப் போயுள்ள சமுதாயங்களில் குடும்ப உறுப்பினர்களுடன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள பலருக்கும் நேரம் கிடைக்காத சூழ்நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக மனதிற்குள் வெளிப்படாது தேங்கும் உணர்வுகள் ஒரு சமயத்தில் மன ஆரோக்கியத்தையும் சிந்தனைப் போக்கையும் பாதித்து தற்கொலை எண்ண த்துக்கு வித்திடும் அபாயம் உள்ளது.

அன்புக்குரிய உறவை இழப்பது,குடும்ப உறவுகளிலான முரண்பாடுகள்,பொருளாதார நெருக்கடி, கடன் சுமை,போதைவஸ்துப் பாவனை, பரீட்சை மற்றும் காதல் தோல்வி, விவாகரத்து,வேலையின்மை, வேலைப் பளு, திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காமை, நம்பிக்கைத் துரோகம், எதிர்மறை எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மை, அவமானம், நோய்கள் காரணமாக ஏற்படும் தாங்க முடியாத உடல் வலிகள் மற்றும் உபாதைகள், எதிர்பார்ப்புகள் நிறைவேறாமை, வாழ்க்கை தொடர்பில் நம் பிக்கையை இழத்தல், பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள், பயம், இணையத் தளங்கள் மூலம் ஏற்பட்ட உளவியல் ரீதியான தாக்கங்கள் மற்றும் மரபணு ரீதியான மனப்பாதிப்புகள் என் மன அழுத்தத்தை மேலோங்கச் செய்து ஒருவரை தற்கொலையை நாடத் தூண்டுகின்றன.

இலங்கையைப் பொறுத்தவரை தற்கொலை செய்து கொள்பவர்களின் தொகை 2015 ஆம் ஆண்டிலிருந்து வீழ்ச்சி கண்டு வந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 2019 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வருடமொன்றுக்கு தற்கொலை செய்து கொள்பவர்களின் தொகை இலட்சம் பேருக்கு 14 ஆக உள்ளது. இந்நிலையில் தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமையை மோசமாக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த கால அரசாங்கங்களின் தீர்க்க தரிசனமற்ற சுயநலப் போக்கான அரசியல் நகர்வுகளாலும் திட்டங்களாலும் இன்று இலங்கைப் பொருளாதாரம் வரலாறு காணாத நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் உள்ளட ங்கலாக அனைத்துப் பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் அதி வேகத்தில் அதிகரித்து வருகின்ற நிலையில் நாளாந்த வாழ்க்கையை வாழ மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

தேசிய வருமானத்தை விடவும் கடன்பன்மடங்கு அதிகரித்துள்ளதால் நாடு மீள முடியாத கடன் சுமையில் சிக்கி விடுபட முடியாது திணறிக் கொண்டிருக்கிறது.இது சமுதாய மட்டத்திலும் குடும்ப மட்டத்திலும் பாரிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. இந்நிலையில் கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்திய பாதிப்புகளால் ஏற்கனவே பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள வறிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு  முடியாத நிலையில் சிக்கித் தவித்து வருகிறனர். பொருட்களுக்கான தட்டுப்பாடு, பொருட்களைப் பெற முடியாத நிலையில் சிக்கித் தவித்து வருகிறனர்.நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடுகின்றமை, எதிர்காலம் பற்றிய பயம் என்பனவும் மக்களை மன அழுத்தத்திற்குள்ளாக்குவ னவாக உள்ளன.



தற்கொலை எண்ணம் என்பது மரபணு சார்ந்ததாக இல்லாத சந்தர்ப்பங்களில் அதிலிருந்து விடுபடுவது தனிநபர்கள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள குடும்ப உறுப்பினர்கள் மத்தியிலான விழிப்புண ர்வில் தங்கியுள்ளது.

பொருளாதார நெருக்கடிகளைக் கண்டு மலைத்து மனமுடைந்து விடாமல் அதிலிருந்து மீள்வதற்கான சந்தர்ப்பங்களைத் தேடிக்கொள்ள முயற்சிப்பது குடும்ப உறுப்பினர்கள் விரக்தி நிலையொன்றுக்குள் தள்ளப்படுவதை தவிர்க்க உதவும். கிடைக்கும் வருமானத்தைக்   கொண்டு வாழ்க்கையை எவ்வாறு வரவு, செலவிற்குள் முன்னெடுப்பது என்பதைத் திட்டமிடுவது இத் தருணத்தில் அவசியமாகிறது.

ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்பது எழுதப்படாத விதி.அந்த வகையில் ஏதோ ஒரு வாய்ப்பு எமக்காகக் காத்திருக்கிறது என்ற மனப்பக்குவத்துடன் அதனை நோக்கிய முயற்சிகளில் ஈடுபடுவது மனவிரக்தி நிலையி லிருந்து விடுபட உதவும்.

எப்போதும் தனிமையை நாடுதல்,எதிலும் நாட்டமில்லாத நிலை, எப்போதும் உறங்கிக் கொண்டோ அல்லது உறக்கமில்லாத நிலையிலோ இருத்தல்,நடத்தையில் மாற்றம், மரணம் மற்றும் தற்கொலை தொடர்பில் வேடிக்கையாக அல்லது தீவிரத்தன்மையுடன் எப்போதும் பேசிக்கொண்டிருப்பது போன்ற அறிகுறிகள் ஒருவரிடம் காணப்படுமானால் அவர் மன அழுத்தத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு தற்கொலை எண்ணத்திற்கு ஆட்படும் நிலையில் உள்ளார் என்பதை அறிந்து அவரை அதிலிருந்து விடுவிக்க முயற்சிப்பது அவசியமாகும்.

தற்கொலை எண்ணம் ஒருவரை அண்டாமல் காப்பதற்கான செயற்கிரமங்கள் அவரது சிறுவயது முதலே முன்னெடுக்கப்பட வேண்டியவையாக உள்ளன.ஆன்மிக சிந்தனை, வாழ்வியல் ஒழுக்கங்கள், தன்னம்பிக்கை, மனக்கட்டுப்பாடு என்பன தொடர்பில் சிறுபராயத்திலிருந்தே போதிக்கப்படுவது தேவையாகவுள்ளது. பிள்ளைகள் பரீட்சைகளில் தோல்வியடையும் போது பெற்றோர் அவர்களைக் கண்டிப்பதை விடுத்து அடுத்த கட்ட முயற்சிக்கு ஊக்குவிப்பது அவசியமாகும். சில பிள்ளைகளுக்கு பிறப்பிலேயே கற்றல் குறைபாடுகள் இருக்கலாம். அவர்களை இனங்கண்டு சிகிச்சை அளிப்பது அவசியமாகும். அது அவர்கள் பிற் காலத்தில் மனவிரக்தி நிலைக்கு உள்ளாகுவதைத் தடுக்க உதவும்.அத்துடன் தற்கொலை எண்ணத்தால் தூண்டப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு உரிய உளவியல் சிகிச்சையளிப்பது அவசியமாகவுள்ளது.

பல தற்கொலை முடிவுகள் கண நேரக் கோபம், உணர்ச்சி வசப்பட்ட சூழ்நிலை என்பவற்றின் போது எடுக்கப்படுகின்றன. இத்தகைய சந்தர்ப்பங்களில் பகுத்தறிவுக்கு ஒரு சில கணங்கள் இடங்கொடுக்கும் பட்சத்தில் அநேக தற்கொலைகள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்ப தை மறுக்க முடியாது. தற்கொலை செய்தவர்களை விடவும் தற்கொலை எண்ணம் தலை தூக்கிய நிலையில் வாழ்பவர்களின் வாழ்க்கை நரகத்திற்கு ஒப்பானதாக உள்ளது.

தற்கொலை என்பது பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாகாது. ஒரு சமயத்தில் பூதாகரமாக அச்சுறுத்தும் பிரச்சினைகள் கால ஓட்டத்தில் ஒன்றுமே இல்லாது போன சந்தர்ப்பங்களை நாம் கண்டுள்ளோம். தற்கொலை என்பது பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தயங்கி அதிலிருந்த தப்பிக்க எடுக்கப்படும் ஒரு கோழைத்தனமான முடிவாகும்.ஒவ்வொருவரும் பிரச்சினைக ளுக்கு அஞ்சி உயிரைப் போக்கிக் கொள்வதற்கு எடுக்கும் துணிகர முயற்சியை அந்தப் பிரச்சினையைப் போராடி முறியடிக்க பயன்படுத்தும் பட்சத்தில் பிரச்சினைகள் கானல் நீராக மறைந்து வாழ்வு வளமாவதைக் காண முடியும்.



@இக் கட்டுரையானது வீரகேசரிக்காக R.ஹஸ்தனி எழுதியது



ஏனைய கட்டுரைகள்.இவற்றையும் பார்வையிடுங்கள்.
  1. அமில மழையின் தாக்கம்-சூழல் மாசடைதல்
  2. QR Code எப்படி இயங்குகிறது..?
  3. காதல் தோல்விக்குப் பின்-முன்னாள் காதலன் அல்லது காதலிக்கு 
  4. காதல் தோல்வியிலிருந்து மீள்வது எப்படி..?
  5. ஒரு காதல் என்ன செய்யும்..?
  6. காலநிலை மாற்றத்தின் பிடியில் உலகம்....
  7. இலங்கைத் தமிழிற்கும்  இந்திய தமிழிற்கும் இடையிலான வேறுபாடு 
  8. திருமணங்களும் மணமுறிவுகளும்
  9. பருவநிலை மாற்றமும் மனித செயற்பாடும்-காலநிலை மாற்றம்
  10. வளி மாசடைதல்
  11. குவேனியின் சாபம்
  12. 2000 தூர வெறித்த பார்வை-Tom lea
  13. மாதவிடாய்க் கோப்பை( Menstrual cup)
  14. மனிதர்களிற்கும் ஆடுகளிற்குமிடையிலான யுத்தம்
  15. பெண்களிற்கு எதிரான வன்முறைகள்
  16. கர்ணனின் இறப்பிற்கு காரணம் யார் ஒரு பார்வை
  17. யூதப் படுகொலை-ஹோலோகோஸ்ட்

Post a Comment

Previous Post Next Post