.

இன்று உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தல் விடுக்கும் பிரச்சினையாக
காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினை மாறியுள்ளது. உலகில் காலத்திற்கு காலம் காலநிலை மாற்றத்தின் பலனாக தோற்ற மெடுத்து வரும் சூறாவளிகள், வெள்ளம், மண்சரிவுகள்,காற்று, காட்டுத் தீ, வரட்சி என்பவற்றாலும் அதனோடிணைந்த பிரச்சினை களாலும் பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்தும் உடை மைகளையும் சொத்துக்களையும் இழந்து நிர்க்கதிக் குள்ளாகியும் வருகின்றனர்.

தற்போது போர்த்துக்கல், ஸ்பெயின்,பிரான்ஸ் உள்ளடங்கலான ஐரோப்பிய நாடுகளில் காலநிலை மாற்றத்துடன் தொடர்புபட்ட வரலாறு காணாத வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள அனல் காற்று மற்றும் காட்டுத் தீ என்பவற்றின் விளைவாக 1,100 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.


காலநிலை மாற்றப் பிரச்சினையானது தனி மனிதனால் தோற்றுவி க்கப்பட்டபிரச்சினையாக விசுவரூபமெடுத்து எதிர்கால சந்ததியின் இயல்பு வாழ்க்கை மற்றும் இருப்பு நிலையைக் கேள்விக் குறியாக்குவதாக மாறியுள்ளது. மனிதன் இயற்கையுடன் ஒத்தி சைவாக வாழ்வதை விடுத்து பேராசையால் உந்தப்பட்டு தனக்கென பணத்தையும் வசதிகளையும் பெருக்கிக் கொள்வதை மட்டுமே நோக்காகக் கொண்டு இயற்கையின் கொடைகளான நிலம் மற்றும் வளங்கள் என்பவற்றை சுரண்டி அந்த வளங்களைப் பாதுகாப்பது தொடர்பில் தனக்குள்ள கடப்பாட்டை மறந்து செயற்படும் போது இயற்கை அன்னை காலநிலை மாற்றம்என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்து தனது சீற்றத்தை வெளிப்படுத்துகிறாள்.

இயற்கைச் சுற்றோட்டத்தின் இயல்பான சுழற்சிக்கு மாறாக மனிதனால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு செயற்பாடும் அதன்
சமநிலையில் குழப்பத்தை ஏற்படுத்தி பாதகமான விளைவுகளைத் தருவனவாக உள்ளன.

நவீன கைத்தொழில் மயமாக்கம், போக்குவரத்துகள், விவசாய இரசாயனங்கள் மற்றும் கனிம எரிபொருளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இதர தொழிற்றுறைகள் என்பன காலநிலை மாற்ற பிரச்சினைக்கு வித்திடுவனவாக உள்ளன.தனிப்பட்டவர்களின் சமையலறை மாசு வாயு வெளியீடுகள் கூட ஒன்றிணைந்து இயற் கைக்கு பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தி காலநிலை மாற்றப் பிரச்சினைக்குவழிவகை செய்கின்றன.

காலநிலை மாற்றத்தால் ஏற்படக் கூடியவிளைவுகள் தொடர்பில் விஞ்ஞானிகளும் நிபுணர்களும் விடுத்த தொடர் எச்சரிக் கைகளையடுத்து 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி பிரான்ஸின் பாரிஸ் நகரில் இடம்பெற்ற கூட்டத்தின் போது முன்வைக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான்காம் திகதி அமுல்படுத்தப்பட்ட காலநிலை மாற்ற உடன்படிக்கையில் உலகிலுள்ள 192 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் கைச்சாத்திட்டுள்ளன.இந்த உடன்படிக்கை யானது பூகோள வெப்பநிலை மாற்றத்திற்குக் காரணமான பச்சை இல்ல வாயுவான காபனீரொட்சைட்டின் வெளியீட்டை குறைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.

உலகில் வளிமண்டலத்திற்கு அதிகளவு காபனீரொட்சைட்டை விடுவித்து காலநிலை மாற்றத்திற்கு பெரிதும் பங்களிப்புச் செய்து வரும் நாடாக அமெரிக்கா உள்ளது. அந்நாட்டிற்கு அடுத்ததாக அதிகளவு காபனை வளிமண்டலத்திற்குள் விடுவிக்கும் நாடு என்ற பெயரை சீனா பெறுகிறது. எனினும் சில வருடங்களுக்கு முன்னர் இந்த வரிசையில் முதலிடத்தில் இருந்த சீனா நிலக்கரி பாவனையைக் குறைக்க எடுத்துக் கொண்ட உறுதிப்பாடு உள்ளடங்கலான நடவடிக்கைகளால் மேற்படி பட்டியலில் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தான் ஜனாதிபதியாக பதவி வகித்த சமயத்தில் மேற்படி உடன்படிக்கையிலிருந்து தனது நாட்டை வெளியேற்றும் தான் தோன்றித்தனமான முடிவை எடுத்தமை அமெரிக்காவின் காபன் மாசு வெளியீடுகளின் அளவு அதிகரித்தமைக்கு காரணமாக கூறப்படுகிறது. எனினும் கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவிப் பிரமாணம் செய்த நிலையில் அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அந்த உடன்படிக்கையில் மீள இணைந்து கொண்டுள்ளது.

காபனீரொட்சைட் வாயுவைப் பொறுத்தவரை தாவரங்கள் ஒளித்தொகுப்பை மேற்கொண்டு உணவு தயாரிப்பதற்கு பங்களிப்புச் செய்து வரும் முக்கிய வாயுவாக உள்ளது. ஆனால் அந்த வாயுவின் அளவு வளிமண்டலத்தில் வரையறையைத் தாண்டி அதிகரிக்கும் போது அது பூமியை சூரிய வெப்பம் நேரடியாகத் தாக்குவதிலிருந்து பாதுகாக்கும் ஓசோன் படலத்தைப் பாதித்து பூகோள வெப்பமாதலைத் தூண்டுகிறது.

ஒளித்தொகுப்பு செயற்கிரமத்தின் போது காபனீரொட்சைட் வாயுவை அகத்துறிஞ்சுவதுடன் உயிர் வாழ்க்கைக்குத் தேவையான ஒட்சிசனை வெளியிட்டு வளிமண்டல வாயுக் கூறுகளின் சம நிலையைப் பேணி பச்சை இல்ல வாயு விளைவுகளைத் தடுப்பதில் தாவரங்களின் பங்களிப்பு மகத்தானது.

ஆனால் மனிதன் அபிவிருத்தித் திட்டங்களைக் காரணம் காட்டி தொழிற்சாலைகளையும் குடியிருப்புக் கட்டிடங்களையும் நிர்மா ணிக்கவும் விவசாயம் செய்யவும்,தாவர வளம் நிறைந்த காடுகளை நிர்மூலமாக்கி வருவது உலகம் வெப்பமடைந்து காலநிலை மாற்றம் என்ற நச்சு சுழற்சிக்குள் சிக்கிக் கொள்ள வழிவகை செய்கிறது.

பாரிஸ் காலநிலை உடன்படிக்கையானது கைத்தொழில் புரட்சிக்கு முன்னரான வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில் 2 பாகை செல்சி யஸுக்கு மேல் அதிகரிக்காத வகையில் பூகோள வெப்பமாதலை வரையறை செய்வதை வலியுறுத்துகிறது.அத்துடன் வெப்பநிலையை 1.5 பாகைசெல்சியஸுக்கு மேல் அதிகரிக்காது வரையறை செய்வது இந்த உடன்படிக்கையின் நோக்காக உள்ளது.

வெப்பநிலை மாற்றத்தால் துருவப் பனிப்பாறைகள் உருகி வருவது தீவிரமடைந்துள்ளமை கடல் நீர் மட்டம் உயர்ந்து உலக நாடுகளின் தாழ்நிலக் கரையோர நிலப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயத்தை அதிகரித்துள்ளது.

அந்தாட்டிக்காவிலுள்ள மிகப் பெரிய பனிப்பாறைகளில் ஒன்றான தவெய்டஸ் பனிப்பாறை கடந்த 5,500 ஆண்டுகளில் இல்லாத வகையில உருகி தனது பனி உள்ளடக்கத்தை இழந்துள்ளதாக அண்மைய ஆய்வொன்று தெரிவிக்கிறது.

மேற்படி பனிப்பாறை முழுமையாக உருகும் பட்சத்தில் பூகோள கடல் மட்டமானது உலகம் அழியும் நிலையைத் தோற்றுவிக்கும் என்பதைக் குறிக்கும் அந்தப் பனிப்பாறை உலக அழிவு தின பனிப்பாறை எனப் பொருள்படும் வகையில் செல்லமாக அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடல் மட்டங்கள் அதிகரிப்பதால் மாலைதீவு, வணுவத்து, துவாலு, சொலமன்,தீவுகள், சமோவா மற்றும் நாவுறு உள்ளடங்கலான நாடுகளும் தீவுகளும் கடலில் மூழ்கி காணாமல் போகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றமானது இயற்கைச் சீற்றங்களை தோற்று விப்பதுடன் மட்டு மல்லாது அந்த சீற்றங்களின் விளைவாக ஏற்பட்ட மக்களின் வகைதொகையற்ற இடம்பெயர்வு, வறுமை, நீர்ப் பற்றாக்குறை, பட்டினி, மோதல்கள், பொருளாதார நெருக்கடி, சமூகக் குழப்ப நிலைகள், வாழ்வாதார இழப்புகள் எனப் பல்வேறு பிரச்சினைகளும் தோன்றக் காரணமாக அமைந்துள்ளன.

பருவநிலை மாற்றத்தால் உலகின் கோதுமை செய்கை மேற்கொள்ளப்படும் வயல்களின் அளவானது 2050 ஆம் ஆண்டுக்குள் 35 சதவீதத்தால் குறைவடையும் அபாயம் உள்ளதாக மதிப் பிடப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பெறுபேறுகள் உலகில் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் வரிசையில் முன்னிலை யிலுள்ள 25 நாடுகளில் 14 நாடுகளில் உள்நாட்டு மோதல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கின்றன.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களால் உடைமைகள் இழக்கப்பட்டு பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டு வறுமை நிலை அதிகரிப்பதால் வாழ்வாதார வளங்களைப் பெறுவதில் ஏற்படும் பற்றாக்குறை மற்றும் போட்டியால் சமூக மட்டத்திலும் நாடளாவிய ரீதியிலும் பிணக்குகள் ஏற்படுவது அதிகரித்து மோதல்கள், வன்முறைகள் தீவிரமடைந்து வருகின்றன.

தொழிற்றுறை மற்றும் வீட்டுப் பாவனைக்கான சக்தி வளப் பயன்பாட்டில் 80 சதவீதமானவற்றுக்கு மீள்சுழற்சிக்கு உட்படுத்தக் கூடிய சக்தி வளங்களைப் பயன்படுத்தும் ஐஸ்லாந்து உலகில் குறைந்தளவு காபனை வளிமண்டலத்திற்கு விடுவிக்கும் நாடுகள் வரிசையில் முதலிடத்தில் உள்ளது. மேற்படி தரப்படுத்தலில் முன்னிலையிலுள்ள 20 நாடுகள் வரிசையில் 16 நாடுகள் ஐரோப்பிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் தற்போது வரலாறு காணாத
வகையில் வெப்பம் அதிகரித்து பனிப்பொழிவின் அளவு வீழ்ச்சியடைந்து காட்டுத் தீ வேகமாகப் பரவி வருகிறது.சில பிராந்தியங்களில் 43 பாகை செல்சியஸிலிருந்து 45 பாகை செல்சியஸ் வரை உயர் வெப்பநிலை நிலவி வருகிறது.

அத்துடன் பிரித்தானியாவிலும் வரலாறு காணாத வெப்ப அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அதேசமயம் வெப்ப நாடுகளாக கருதப்பட்ட ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கடும் பனிப்பொழிவுகள் இடம் பெற்றுள்ளன.

இது காலநிலை மாற்றப் பிரச்சினையானது அத்துமீறலை மேற்கொள்ளும் தனியொரு நாட்டை மட்டுமல்லாது உலகம் முழுவதையும் ஒட்டுமொத்தமாக பாதிப்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

ஒரு நாட்டில் மேற்கொள்ளப்படும் காலநிலை மாற்றம் தொடர்பான அத்துமீறல்கள் உலகளாவிய ஒட்டுமொத்த காலநிலை மாற்றத்திற்கும் பங்களிப்புச் செய்வதாக அமைகிறது.

உதாரணத்திற்கு சூரிய வெப்பம் நேரடியாக பூகோள மேற்பரப்பை வந்தடைவதைத் தடுக்கும் ஓசோன் படலத்தில் பச்சை இல்ல வாயுக்களால் ஏற்படும் துவாரம் உலகளாவிய ரீதியான வெப்பநிலை அதிகரிப்புக்கும் அதனோடிணைந்த இயற்கை அனர்தங்களுக்கும் வழிவகை செய்வது விஞ்ஞான பூர்வமாக அறியப்பட்ட உண்மையாகும்.

ஓசோன் படலத்தைப் பாதுகாப்பது தொடர்பில் 1987 ஆம் ஆண்டு செயகொள்ளப்பட்ட மொன்றியல் உடன்படிக்கை வரலாற்று முக்கியத்துவம் மிக்க சுற்றுச்சூழல் உடன்படிக்கையொன்றாகக் கருதப்படுகிறது. மேற்படி உடன்படிக் கையானது ஓசோன் படலத்தை சேதப்படுத்தும் குளோரோபுளோரோ காபன் வெளியீடுகளை பெருமளவில் குறைக்க வழிவகை செய்திருந்தது.

கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக காலநிலை மாற்றத்தை முறியடிப்பதற்கான இலக்குகளுக்கான நிதிவசதி மற்றும் செயற்கிரமங்களை முன் னெடுப்பதில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதை மறுப்பதற்கில்லை.

இலங்கையைப் பொறுத்தவரை காலநிலை மாற்றமானது புயல், வெள்ளம்,மண்சரிவுகள் என்பன இடம்பெறுவதற்கு வழிவகை செய்கின்ற நிலையில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 30 சதவீதம் முதல் 38 சதவீதம் வரையானோர் மண்சரிவு அபாயமுள்ள பிராந்தியங்களில் வாழ்வதாக தேசிய நிர்மாண ஆய்வு அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட பிந்திய ஆய்வொன்று கூறுகிறது.

இலங்கையின் சனத்தொகை 2 கோடியே15 இலட்சத்து 96 ஆயிரத்து 370 என ஐக்கிய நாடுகள் பையின் பிந்தியதரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மேற்படி சனத்தொகையில் 50 சதவீதத்தினர் காலநிலை மாற்றத்தால் பெரிதும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள மேற்கு, தெற்கு, தென்மேற்குப்பிராந்தியங்களிலும் தாழ் நில கடற்கரைப் பிராந்தி யங்களிலும் வசித்து வருகின்றனர்.

2017 ஆம் ஆண்டில் உலக காலநிலை மாற்ற அபாய சுட்டெண் பட்டியலில் 109 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 2019 ஆம் ஆண்டில் மேற்படி பட்டியலில் 31ஆவது இடத்திற்குக் கீழிறக்கப்பட்டு தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுச்சூழல் அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. காலநிலை மாற்றம் தொடர்பான இந்த சுட்டெண்ணானது புயல்கள், வெள்ளம், சூறாவளிகள், வரட்சி போன்ற காலநிலையுடன் தொடர்புடைய உயிராபத்து மற்றும் பொருளாதாரப் பாதிப்பு விளைவுகளால் பாதிக்கப்படும் நாடுகள் மற்றும் பிராந்தி யங்களை தரவரிசைப்படுத்துகிறது.

இந்நிலையில் காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சமூக, நிறுவன, நாடுகள் மற்றும் உலகளாவிய ரீதியில் அனைத்து மட்டங்களிலும் ஒத்துழைப்பும் அனுசரணையும் பொறுப்புணர்வும் தேவையாகவுள்ளது.


சுயநல நோக்கான நிகழ்கால வசதிகளுக்கும் சுக போகங் களுக்குமாக எதிர்கால தீர்க்கதரிசனமின்றி செயற்படுவது எமது எதிர்கால சந்ததியினருக்கு காலநிலை மாற்றத்தின் கோரப் பிடியில் சிக்கிய உயிர் வாழ்க்கைக்கு பொருந்தாத உலகொன்றை விட்டுச் என்ற தீராத பாவத்திற்குள் ஒவ்வொருவரையும் தள்ளும் என்பதை மறந்து விடக்கூடாது.

@இக் கட்டுரையானது வீரகேசரிக்காக R.ஹஸ்தனியால் எழுதப்பட்டது.

Global warming
பூமி சூடாதல்


Post a Comment

Previous Post Next Post