.

அந்த ஊரில் குமரேசன் என்ற குல்லா வியாபாரி ஒருவர் இருந்தார். நகரத்திற்குச் சென்று விதவிதமான தலைக் குல்லாய்களை வாங்கி அவற்றை எல்லாம் ஒரு பெரிய மூட்டையாகக் கட்டி தலை சுமையாக நடந்து சென்று பக்கத்து ஊர்களிலும் சந்தை கூடும் இடங்களிலும் விற்பனை செய்துவந்தார். அவரும் தனது தலையில் எப்போதும் குல்லா அணிந்திருப்பார்.

வெயில் காலம் தொடங்கியது. மக்கள்வெயிலுக்கு பயந்து குல்லா வாங்கி அணிய ஆரம்பித்தனர். வாங்கி வந்த குல்லாக்கள் அனைத்தும் உடனே விற்று தீர்ந்துவிட்டதால்,குமரேசன் நகரத்திற்குச் சென்று விதவிதமான குல்லாக்களை வாங்கி பெரிய மூட்டையாகக் கட்டி பஸ்ஸில் ஏற்றி தன் ஊருக்கு கொண்டு வந்தார்.

அடுத்தநாள் காலை அந்த மூட்டையை தன் தலைமீது வைத்து சுமந்துகொண்டு பக்கத்து ஊருக்குச் சென்றார். முதலில் போன ஊரில் சில குல்லாக்கள் மட்டுமே விற்பனையானது. குல்லா வியாபாரி வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்கத்து ஊருக்கு சென்று கொண்டிருந்தார். ஊர் எல்லையில் இருந்த ஆலமரத்தின் கீழே சற்று நேரம் ஓய்வெடுக்க நினைத்து குல்லா மூட்டையை இறக்கி வைத்து விட்டு சற்று நேரம்தூங்கிவிட்டார்.

குல்லா வியாபாரி குல்லா மூட்டையுடன் தூங்குவதை அந்த மரத்தில் தங்கியிருந்த குரங்குகள் கண்டன. அவர் அணிந்திருந்த குல்லாவை ரசித்தன. பின்னர் மரத்தில் இருந்து இறங்கிவந்து, குல்லா மூட்டையை பிரித்தன.இதைக்கண்ட வயதான குரங்கு ஒன்று குரங்கு நண்பர்களே மூட்டையை அவிழ்க்காதீர்கள். அந்த மனிதர் மிகவும் ஏழ்மையானவர் இந்தக் குல்லாக்களை விற்றுதான் அவர் பிழைத்து வருகிறார். தயவு செய்து மூட்டையை பிரிக்காதீர்கள் என்றது.

மற்ற குரங்குகளோ போ போ கிழட்டுக் குரங்கே உனக்கு ஒன்றும் தெரியாது, அவர் தலையைப் பார்,அந்த குல்லா எப்படி கச்சிதமாக இருக்கிறது. பார் நாங்களும் அவரை போல குல்லா அணியப் போகிறோம்.நீ பேசாமல் வேடிக்கைப் பார் என்று கூறி விட்டு குல்லா க்களை ஆளுக்கு ஒன்றாக எடுத்து குரங்குகள் தலையில் அணிந்து கொண்டன.

தூக்கம் கலைந்து எழுந்த குல்லா வியாபாரி குல்லா மூட்டை அவிழ்ந்து கிடப்பதைக்கண்டு திடுக்கிட்டார்.அப்போது கிழட்டுக் குரங்கு,குல்லா வியாபாரியே, உம்முடைய குல்லாக்களை குரங்குகள் எடுத்து தலையில் அணிந்து கொண்டன.நான் எவ்வளவோ கூறியும் அவை எனது பேச்சை கேட்கவில்லை என்றுகூறியது.

குல்லா வியாபாரி ஆலமரத்தை ஏறிட்டார்.மரத்தில் இருந்த குரங்குகள் ஒவ்வொன்றும் குல்லாக்களை அணிந்திருந்தன.உடனே குல்லா வியாபாரி, குரங்குகளேஎனது குல்லாக்களை கொடுத்து விடுங்கள். நான் அவற்றை விற்பனைக்காக வைத்திருக்கிறேன் என்றார்.

குரங்குகள் அவரின் பேச்சை காதுகளில் போட்டுக்கொள்ளவில்லை. உடனே குல்லா வியாபாரி கோபத்துடன் தான் அணிந்து இருந்த குல்லாவை தூக்கி வீசினார்.உடனே குரங்குகளும் குல்லாவை கழற்றிவீச முயன்றன. ஆனால் அவைகளால் குல்லாவை கழற்ற முடியவில்லை.குல்லா தலையில் இருந்து கீழே இறங்கி அவற்றின் கண்களை மறைத்தன. இதனால் குரங்குகள் பயந்து நடுங்கின. உடனே குமரேசன், குரங்குகளே அந்தக் குல்லாக்கள் மனிதர் களுக்காக தயாரிக்கப்பட்டவை. உங்கள் தலைக்கு ஒத்துவராது.இந்த புதுக் குல்லாவை தலையில் மாட்டுவது சுலபம், ஆனால் கழட்டுவது மிகவும் கடினம். எனவே அதை கழற்றும் விதமாகத்தான் கழட்ட வேண்டும். ஒவ்வொருவராக வாருங்கள், நான் கழற்றிக் கொள்கிறேன், இல்லை என்றால் அந்தக் குல்லாக்கள் உங்கள் கண்களை மறைத்து நீங்கள் கிளைகளை விட்டு கிளைக்கு தாவ முடியாமலும் உணவை அடையாளம் காண முடியாமலும் தவியாய் தவிக்கநேரிடும் என்று கூறினார்.

உடனே குரங்குகள் குல்லா வேண்டாம்,தலை தப்பினால் போதும் என்று குல்லா வியாபாரி முன்பு வரிசையில் வந்து நின்றன. வியாபாரியும் குல்லாக்களை குரங்கின் தலையில் இருந்து கழட்டி எடுத்துக்கொண்டார்.

பிறர் பொருட்களை அவரின் அனுமதியின்றி அபகரிப்பது அடி முட்டாள்தனமான காரியம். அது அநாகரீகமும் கூட. அந்த செயலைத்தான் நீங்கள் செய்திருக்கிறீர்கள். உங்கள் செயலுக்கு துணைபோகாத வயதான குரங்கு மட்டும் தான் நாகரீகம் பேணிய நல்ல குரங்கு.அந்த வயதான குரங்குக்கு நான் ஒரு பரிசு கொடுக்கப் போகிறேன் என்று கூறிய குல்லா வியாபாரி, தான் தலையில் அணிந்திருந்த விலை உயர்ந்த ஜரிகை வேலைப்பாடுடன் கூடிய குல்லாவை எடுத்து அந்த வயதான குரங்கின் தலையில் அணிவித்தார்.

வயதான குரங்கும் அந்த குல்லாவை மகிழ்ச்சியுடன் தலையில் அணிந்துகொண்டது.மற்ற குரங்குகள் அந்த வயதான குரங்கை ஏக்கத்துடன் பார்த்தன. இனிமேல் பிறர்பொருட்கள் மீது ஆசை வைக்கக்கூடாது என்றுமுடிவெடுத்தன.

குல்லா வியாபாரி குல்லாக்களை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு புறப்பட்டார்.

நீதி:-பிறர் பொருட்களிற்கு ஆசைப்படாதே





Post a Comment

Previous Post Next Post