காதல் என்ற வார்த்தை கேட்பதற்கு இனிமையானதாகத் தோன்றினாலும் அதன் இன்னொரு பக்கமானது கடுமையான வலிகளையும் மன வேதனைகளையும் துரோகங்களையும் ஏமாற்ற ங்களையும்,கொண்டது.வெற்றியடைந்த காதல்களை நாம் விட்டு விடலாம்.
தோல்வியடைந்த காதல்களை காதலர்களைப் பற்றியே நாம் இந்தக் கட்டுரையில் அலசவிருக்கிறோம்.நீங்கள் காதலித்துக் கொண்டி ருக்கும் போது நீங்களே எதிர்பார்க்காத நேரத்தில் உங்கள் காதலனோ அல்லது காதலியோ பின்வருமாறு கூறியிருக்கலாம்.
- நாங்கள் இத்தோடு எல்லாவற்றையும் நிறுத்தி விடுவோம்.
- இனிமேலும் உங்களோடு பேச விருப்பமில்லை
- உங்களைப் பிடிக்கவில்லை அல்லது உங்களோடு வாழப் பிடிக்கவில்லை.
- என்னுடைய அம்மாவிற்கு அல்லது அப்பாவிற்கு அல்லது மாமாவிற்கு அல்லது அம்மம்மாவிற்கு அல்லது எங்கள் வீட்டு நாய்க்குட்டிக்குப் பிடிக்கவில்லை
- எங்கள் வீட்டில் வேறு கல்யாணம் பேசிவிட்டார்கள்.
- உனக்கு என்னை விட வேறு பெண்/ஆண் கிடைப்பார்கள்.
- பணம்தான் இங்கே எல்லாம்.உனக்கு என்ன இருக்கிறது..?
- நான் இல்லாமல் வாழப் பழகிக்கொள்
- விதி இருந்தால் அடுத்த ஜென்மத்தில் சந்திக்கலாம்.
- உன்னுடைய அந்தஸ்த்து வேறு என்னுடைய அந்தஸ்த்து வேறு
- காதல் பத்து ரூபாவிற்கு பிரயோசனம் இல்லாதது.
- நாம் இனிமேல் நண்பர்களாக இருக்கலாம்.காதல் சரிவராது.
இவ்வாறு சொல்பவர்களிற்கெல்லாம் பின்வரும் கேள்விகளை முன்வைக்கலாம்.
உங்களிற்கெல்லாம் எதற்கு காதல்....?
- இன்னொரு மனதை நோகடிப்பதற்காகவா...?
- இன்னொருவர் மனதில் ஆசைகளை வளர்த்து விட்டு பின்னர் ஏமாற்றுவதற்காகவா...?
- உங்களை முழுவதுமாக நம்பிய நபருக்குப் பச்சையாகத் துரோகம் இழைப்பதற்காகவா...?
- உங்கள் மேல் அவன்/அவள் வைத்திருக்கும் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் ஒரு நொடியில் சிதைப்பதற்காகவா...?
- உங்களுடைய பொழுது போக்கிற்காகவா..?
இவ்வாறு அவர்கள் சொன்னதும் நீங்கள் உடைந்து போய் விடுவீர்கள்.உங்கள் பதிலை உங்களை விலகிச் செல்பவர் எதிர்பார்க்கப் போவதில்லை என்பது சத்தியமான உண்மை.அவர்கள் சென்று விட்டால் உங்கள் வாழ்க்கை ஒன்றும் முடிந்து போய் விடாது.தொடரத்தான் போகிறது.இந்த மாதிரியான சூழ்நிலைகளில் நீங்கள் அமைதியாக இருங்கள்.கட்டுரையாளருக்கு இது போன்ற சூழ்நிலையைக் கடந்து போன அனுபவங்கள் காணப்படுவதால்தான் அதே அனுபவத்தை வாசகர்களிற்குச் சொல்கிறார்.அவர்கள் இழந்தது ஒரு பொக்கிஷத்தை. தன்னை நம்பியவர்களிற்கு துரோகமிழைக்கும் படி அவர்களை வளர்த்தற்காக அவர்களுடைய பெற்றோர்தான் வெட்கப்பட வேண்டுமே தவிர நீங்களல்ல..
நீங்கள் என்னதான் படித்திருந்தாலும் பட்டங்களைப் பெற்றிருந்தாலும் நுண்ணறிவு உடையவர்களாகத் திகழ்ந்தாலும் உங்களை நம்பியிருக்கும் காதலன் அல்லது காதலியை ஏமாற்றுவதென்பது நீங்கள் கற்றிருக்கும் கல்விக்கே இழுக்கான செயலாகும்.ஒரு இதயத்தை நோகடிப்பதற்காகவா..? நீங்கள் இவ்வளவும் கற்றீர்கள்..?அல்லது உங்கள் அறிவு அவ்வளவுதானா..?
சரி இனி காதல் தோல்வியிலிருந்து எவ்வாறு மீள்வதென்பதைப் பற்றி விரிவாக அலசலாம்.
- உங்கள் காதலன் அல்லது காதலி பற்றி உங்களின் நினைவில் வந்தால்,உடனே நீங்கள் கோபம் கொள்ளாமல் உங்கள் மனதை சாந்தமாக்கிக் கொள்ளுங்கள் ஏனென்றால் உங்கள் மனதின் கட்டுப்படுத்தும் திறனை இச் செயல் அதிகரிக்கும்.
- உங்கள் கவனத்தை திசை திருப்பி உங்களிற்குப் பிடித்த வேறு விடங்களில் உங்களை அதிகம் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
- மீண்டும் மீண்டும் செய்த தவறுகளை திருப்பிச் செய்யாமல் இருத்தல் வேண்டும்.தினமும் உங்களுடன் நீங்களே பேசிக் கொள்ள வேண்டும்.இதனை ஆங்கிலத்தில் "Self&realization என்பார்கள்
- நிச்சயம் உங்கள் நேரத்தை இயற்கையுடன் பகிர வேண்டும். அப்போதுதான் உங்கள் மனம் அமைதியாக இருக்கும்.
- உங்கள் தாய்,அக்கா,தங்கை,அண்ணா,தம்பி இவர்களுடன் அதிகமான நேரத்தைச் செலவிடுங்கள்.இது உங்கள் மனதிற்கு மிகச்சிறந்த மாற்றத்தைத் தரும்.
- தினமும் 5 மணிக்கு எழுந்து பழகுங்கள்.பிறகு உங்களின் மன மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.
- தனியாக இருக்கும்போது உங்களிடமுள்ள நல்ல விடங்களை ஒரு புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.இது பிற்காலத்தில் உதவி செய்யக் கூடும்.
- ஒவ்வொருவருக்கும் உதவி செய்து பழகுங்கள்.இது உங்களின் மனதை லேசாக்கும்.
- சிந்தனை செய்து ஒவ்வொரு விடயத்திலும் கால் வைத்து இறங்க வேண்டும்.இது உங்களின் கவனத்திறனை அதிகரிக்கும்.
- மீண்டும் மீண்டும் செய்த தவறுகளை திரும்ப செய்யாமல் பார்த்துக் கொள்வது மிகச் சிறந்த பண்பாகும்.
- காதல் பிரிவிற்குப் பின் நண்பர்களாகத் தொடர்வது சினிமாவிற்கு வேண்டுமானால் ஒத்து வரலாம்.வாழ்க்கையில் கடினமான ஒன்றாகும்.Facebook,Whatsapp,Viber,Instagram,Telegram என அனைத்து விதமான சமூக வலைத்தளங்களிலிருந்தும் உங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலியை செய்து விடுங்கள்.அவர் என்ன செய்கிறார் என்று தெரிந்து கொண்டு நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது
- சேர்ந்து இருக்கும்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்,நினைவுப் பரிசுகள் என அனைத்தையும் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்காமல் எல்லாவற்றையும் அழித்து விடுங்கள்.அவர் தொடர்பான எந்த தடயமும் இல்லாமல் இருத்தல் நன்று.
- சில காலம் வெளியூர் பயணம் செய்யலாம்(இதை மறக்க நினைக்கிறேன் என்று எண்ணாமல்,இயற்கையை இரசிக்க செல்வதாக மூளையிடம் கூறுங்கள்.)
- ஒரே அடத்தில் முடங்கி இருக்க கூடாது.இது வலியை இன்னும் அதிகமாக்கும்.
- புதிதாக எதையாவது கற்றுக் கொள்ளுங்கள்.அது கலையாகவோ(இசைக்கருவிகளை வாசிப்பது)புத்தகம் வாசிக்கும் பழக்கமாகவோ,Blogging போன்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.உடற்பயிற்சி செய்யத் தொடங்கலாம்.உங்கள் மனதையும் உடலையும் ஒரு நிலைப்படுத்த உதவும்.ஒரு வாரம் செய்துவிட்டு அதிலிருந்து விலகாமல்,தெனை சரியாக தொடர்ந்து கடைப்பிடியுங்கள்.
- தியானம்,யோகா செய்வதற்குப் பழகுங்கள்.அது மனதை ஒரு நிலைப் படுத்த உதவும்.
- அநாதை இல்லங்களிற்கும்,முதியோர் இல்லங்களிற்கும் சென்று வாருங்கள்.உண்மையான அன்பின் வாசத்தை உணர்வீர்கள்.
- சமையல்,ஓவியங்கள்,கதை எழுதுவது என நீங்கள் இதுவரை உங்கள் வாழ்க்கையில் செய்திராத விடயத்தை செய்யத் தொடங்குங்கள்.
- உங்கள் நண்பர்களைச் சந்திக்கும்போது முக்கியமாக உங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலி பற்றி பேசுவதைத் தவிருங்கள்.ஒரு விடயத்தை பற்றிப் பேசிக் கொண்டேயிருந்தால் எப்படி வெளிவருவது..?
- உங்களை விட்டுச் சென்றவர்கள் திரும்பவும் வருவார்கள் என்று கனவிலும் எதிர்பார்க்காதீர்கள்.அவ்வாறு திரும்பி வந்தாலும் அந்த உறவில் உண்மைத் தன்மை இருக்காது.ஏனென்றால் உங்களின் உறவு ஏதாவது காரணத்தினால்தான் பிரிந்திருக்கும். நீங்கள் கவலையில் இருக்கும்போது அந்தக் காரணங்கள் பெரிதாகத் தெரியாது.ஆனால் நீங்கள் திரும்பி சேரும்போதுதான் அந்த விடயங்கள் பெரிதாக தெரியத் தொடங்கும்.
- மறக்க நினைக்காதீர்கள்.நீங்கள் எந்தளவிற்கு மறக்க நினைக்கிறீர்களோ,அந்தளவிற்கு உங்களுடைய பழைய ஞாபகங்கள் வந்தவண்ணமே இருக்கும்.அதனால் மறப்பது என்பதை முக்கியமாகக் கருதாதீர்கள்.அதற்கு முயற்சியும் செய்யாதீர்கள்.எப்போதெல்லாம் அந்த எண்ணங்கள் வருகிறதோ அது பாட்டிற்கு வந்துவிட்டுப் போகட்டும்.உங்கள் வேலையில் கவனத்தைச் செலுத்துங்கள்.அந்த எண்ணங்கள் திரும்பத் திரும்ப வருகிறதே என்னால் யோசிக்காமல் இருக்க முடியவில்லையே என்ற எண்ணம் வந்தால் உங்களால் அந்த இடத்திலிருந்து மீள வரமுடியாது.
- மேற்கண்ட எதுவுமே பயனளிக்கவில்லை என்றால் தனிமையிலோ,நெருங்கிய நண்பரிடமோ,தாயிடமோ மனம் விட்டுக் கூறி இரண்டு,மூன்று நாட்கள் அல்லது வாரங்கள் கூட அழுது விடுங்கள் அது மனதிற்கு ஆறுதலளிக்கும்.
Post a Comment