.

 ஒரு காதல் என்பது 

வெறும் வார்த்தையா

கொஞ்சிக் குலாவுவதா..?

ஆண் பெண் இணைவதா

பேசித் தீர்ப்பதா

என்ற ஆயிரம் கேள்விகளிற்கு

ஒரே முடிவாய் இது நீயும் நானும்.

நான் உன்னை நினைக்கும் போதும்

நீ என்னை நினைக்கும் போதும்

மனதில் பாயும் நதி.

இதயத்தில் எழுதிச் செல்லும்

ஒரு வரிக் கவிதைதான் காதல்..!!


ஒரு காதல் என்ன செய்யும்..?

ஓர் காதல் என்ன செய்யும் என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்..? இப்படி என்னதான் செய்து விடப்போகிறது இந்தக் காதல் உங்களை..?அட என்னதான் செய்யும்..?

காதலது எதுவும் செய்ய வைக்கும்.எல்லைகள் தாண்ட வைக்கும்.ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஏதோ ஓர் அதிசயப் புதையலை அடைய ஓடிய சாகச வீரர்கள்போல் காதலனை அல்லது காதலியைத் தேடி கடல் கடந்து நாடு கடந்து ஓட வைக்கும்.

காதலதைக் கடக்காமல் ஆணும் பெண்ணும் வாழ்தலை கடத்தல் சாத்தியமில்லை.காதல் உணரப்படாது கரையும் வாழ்வு அர்த்த மற்றது.காதலுக்காக வரலாறுகளில் ஏன் மடிந்தார்கள் என்று வியந்ததெல்லாம் வியப்பல்ல சாசுவதமே என்பதை உணர்த்த நாம் ஓர் காதலைக் கடந்தே ஆக வேண்டும்.அது சரி காதலும் கடந்து போகும் என்பார்களே,அப்படியானால் அது எங்கே கடந்து போனது அடித்து துவைத்து குற்றுயிரும் குலையுயிருமாக விட்டுப் போனது என்ப தாகவே இருக்கும்.சிலர் மட்டும் கரை சேர்ந்தவராய் இருப்பர். கரைசேர்கிறோமோ கடலில் மூழ்கிறோமோ காதலதில் நீந்தாவிடில் பிறவி பயனற்றது.

பால் நிலவொன்று நதியில் மிதந்து வரும் இராப் பொழுதினிலே மேகம் ஒன்றை மறித்து அதன் ஈரலிப்பில் சிலிர்த்து அதன் மேல் மிதந்து ஆகாய வெளியில் நட்சத்திரங்களை கையால் தட்டி விளையாட எட்ட இருக்கும் பூமியை சற்றே எட்டிப் பார்த்து எள்ளி நகையாடி எல்லாம் மீறி எல்லை இன்பம் கடந்துபேரின்ப வாயிலில் கட்டிய திறப்புவிழா கயிற்றை அறுத்து உள்நுழைய வைக்கும் இக்காதல்.ஒரு முகம் வெறும் முகம் அல்ல அது உன் உயிரின் மறு உருவம்,உயிரே உடலாய் மாறி நடமாடும் உண்மைகளை காதல் புரிய வைக்கும்.

எம் உடலில் எந்த வலியும் இல்லை ஆனால் அந்த உடலின் மனதின் வலி இந்த உடலைக் கொன்று போடும் மாய விந்தை காதலில் மட்டுமே சாத்தியம்.

இமை மூடும் நொடி கூட விட்டு விலகாத ஓர் உணர்வில் இலகுவாய்ப் பறந்தே செல்வதை காதல் உணர வைக்கும்.எல்லாம் என்பது ஏதும் அல்ல அது அவளோ அவனோ என்று இதயத்தில் ஆணி அடித்துச் சொல்லும் இந்தக் காதல்.

பிடித்த பித்து நிலை இறுதி வரை நீங்காதிருப்பதே காதல்.அப்பித்து நிலை நீங்கிடின் காதல் இல்லை அவ்வளவுதான்.காதலில் மட்டும் மூளையைக் கழற்றி வைத்து முட்டாளாய் பிறப்பெடுத்தல் வரமாகும். ஒட்டுமொத்த உலகையும் ஒருவனுக்காய் அல்லது ஒருத்திக்காய் எதிர்த்து நிற்கச் செய்யும்.

பிரெஞ்சு தத்துவக் கவிஞர் பிளெய்ஸ் பாஸ்கல் சொன்னதாக ஒரு கூற்று உண்டு.கிளியோபாட்ராவுக்குச் சப்பை மூக்காக இருந்தி ருந்தால் ஜீலியஸ் சீசரோ,மார்க் ஆண்டனியோ அவளிடம் விழுந்திருக்க மாட்டார்கள்.மாபெரும் சரித்திர யுத்தங்கள் காதலின் காரணத்தால் நிகழ்ந்ததுண்டு.

தனக்கான காதலைத் தேடி இளவரசி டயானா அரண்மனை வாழ்வையும் இளவரசி பட்டத்தையும் துறந்தார்.அன்பைக் கொடு த்தால் உயிரைக் கொடுக்கும் ஜீவன்கள் இருக்கும் வரை எதனையும் செய்ய வைக்கும் ஆற்றல் மிக்கதுதான் காதல்.

காதல் என்பதோர் சத்தியம்.அது ஓர் ஏழதப்படாத சாசனம்.காதலே வாழ்வின் முதலும் கடைசியுமான நம்பிக்கை.காதல் நிறைந்து ததும்பும் முத்தமதுடன் மடிந்து விடல் சூட வரம்தான்.காதல் சாகச ங்களை நிகழ்த்தவல்லது.உண்மைக் காதலில் வாழ்ந்து மரிப்போம். போலியாகயும் துரோகங்களை செய்பவர்களையும் நடிப்பவர்களை வெறுப்போம்.






Post a Comment

Previous Post Next Post