.

வளி இல்லாமல் எந்த உயிரினமும் இவ்வுலகில் வாழமுடியாது. வளியை கண்ணால் பார்க்க முடியாவிட்டாலும் அதற்கும் உயிரினங்களுக்குமிடையே ஒரு நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.இன்றைய காலகட்டத்தில் மனித சமூகம் மாத்திரமன்றி அனைத்து உயிரினங்களும் முகம் கொடுத்து கொண்டிருக்கும் மிகப்பெரும் சவால்களில் ஒன்றாக வளிமண்டலம் மாசடைதல் விளங்குகின்றது.

வாழுமிடத்திற்குள்ளான அல்லது வெளியேயான வளிமண்டலத்தில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட வாயுக்கள் அல்லது துணிக்கைகள் காணப்பட்டு அவற்றின் அளவு, தன்மை தேங்கி நிற்கும் காலம் போன்ற தன்மைகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக வளி மாசடைந்து மனிதனுக்கும், தாவரங்கள்,விலங்குகள் மற்றும் உடைமைகளுக்கும்தீங்கை ஏற்படுத்துகின்றது.

வளியில் நைதரசன், ஒட்சிசன், காபனீரொட்சைட் போன்ற பிரதான வாயுக்கள் காணப்படுகின்றன. இந்த வாயுக்களின் வீதம் மாறாத வகையில் வளிமண்டலம் அவற்றைப் பேணுகின்றது.இந்த இயற்கையான சமநிலையை குழப்பும் வகையில் மனித நடவடிக்கைகளால் வெளிவிடப்படும் வாயுக்கள், திடமான துகள்கள், தூசுக்கள் போன்றவை வளிமண்டலத்தில் அதிகளவில் சேர்வதால் வளியினுடைய பௌதீகத் தன்மையும் மாறுபட்டு வளிமாசடைகிறது.

ஆரம்பகாலத்தில் மனிதனின் பாதுகாப்புக்காக காணப்பட்ட சூழலை, இன்று மனிதன் பாதுகாக்க வேண்டிய துரதிஷ்ட நிலை ஏற்பட்டுள்ளது.  இதற்குக் காரணம் மிகையான சனத்தொகை பெருக்கத்தினால் மனிதன் தனது தேவைகளை நிறைவேற்றுவதற்காக சூழலை பல்வேறு விதமாக சுரண்டி சூழலில் வரையறையற்ற தாக்கங்களை ஏற்படுத்தியதன் விளைவாக, சூழல் மாசடைதல் என்ற சர்வதேச ரீதியான பிரச்சனைகள் உருவாகியுள்ளது.

இலங்கையில் அதிகரித்து வரும் வளிமாசடைதலின் பிரதான காரணிகளாக நிலையான தோற்றுவாய்கள்,  நகரும் தோற்றுவாய்கள் காணப்படுகின்றன.  அதாவது, இருப்பிடப் பிரதேசம்,  தொழிற்சாலைகளின் செயற்பாடுகள், சக்தி பிறப்பாக்கல், கழிவுகளை எரித்தல்போன்ற நிலையான தோற்றுவாய்களின் மூலம்பெருமளவில் வளி மாசடைகிறது.

நகரும் தோற்றுவாய்களில் போக்குவரத்து பிரிவு மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.உதாரணமாக, பெற்றோலியத்தின் நுகர்வு மிக மோசமான மாசுபடுத்தல்களை ஏற்படுத்துகின்றது. மேலும், புகைபோக்கிகளில் இருந்து வெளியேற்றப்படும் தூசுகள், துகள்கள், வெப்ப பிறப்பாக்கிகளின் செயற்பாடு மற்றும் புகைத்தல் காரணமாக வாழுமிடத்திலுள்ள வளி மாசடைகின்றது.

வளியை மாசுபடுத்தும் வேலையினை மனிதர்களே மேற்கொள்கின்றனர்.அதிகரித்து வரும் உலக சனத்தொகையும், அதனுடன் தொடர்பான தொழிற்சாலை மயமாக்கல்,வீடமைப்பு, குடியேற்றத் திட்டங்கள், அதிகரித்துவரும் போக்குவரத்து, அனல் மின்சாரநிலையங்கள், அணு உலைகள், சுரங்கங்கள் போன்ற இடங்களில் இருந்து வெளியேறும் நச்சுப்புகை மற்றும் சாம்பல்கள் அதிகளவில் வளிமண்டலத்தில் சேர்வதற்கு காரணமாக இருக்கின்றது.

வாகனங்களில் இருந்து வெளியேறும் காபனீரொட்சைட் வாயு, அனல்மின் நிலையங்களில் எரிக்கப்படும் நிலக்கரியால் உருவாகும் சல்பர் கந்தகவீரொட்சைட் போன்ற வாயுக்கள், குளிர்சாதன பெட்டிகளில் இருந்து வெளியேறும் குளோரோ புளோரோ காபன் வாயுக்கள் மற்றும் இலத்திரனியல் கழிவுகள் தகனமடைவதனால் வெளியேறும் நியோன் வாயு, சுரங்கங்கள்,கல் உடைக்கும் தொழிற்சாலைகள், சீமெந்து தொழிற்சாலைகள் போன்றவற்றில் இருந்து வெளியேறும் அதிக தூசு துகள்கள் காரணமாகவும் அதிகளவில் வளி மாசுபடுகின்றது.

குறிப்பாக, ஆரோக்கிய ரீதியில் மனிதன் முகம் கொடுக்கும் பல்வேறு விதமான தாக்கங்களுக்கும், நோய்களுக்கும் வளி மாசடைதல் காரணமாகின்றது. இருந்தும் அதன் பாரதூரம்,அதன் தாக்கங்கள், பாதிப்புக்கள்தொடர்பில் போதிய விளக்கமோ தெளிவோ பெரும்பாலான மக்கள் மத்தியில் காணப்படுவதில்லை என்பதற்கு அவர்களது நடத்தைகளும், செயற்பாடுகளும் வெளிப்படுத்தி நிற்கின்றன.

வளிமண்டலம் மாசடைவதால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் கவனயீனமாக நடந்துகொள்ளும் சிலர், தம் இல்லங்களில் சிறுபிள்ளைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் இருப்பதையும் பொருட்படுத்தாது புகைப் பிடிக்கின்றனர். இதன் விளைவாக குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் சுவாசத் தொகுதி தொடர்பான நோய்கள் உட்பட உடல்¸உள ரீதியில் பல பாதிப்புகளுக்கும் முகங் கொடுக்கின்றனர். அத்தோடு கருப்பையில் வளரும் யாதுமறியா பச்சிளம் குழந்தைகள் கூட இதன் தாக்கத்திற்கும், பாதிப்புக்கும் முகம் கொடுப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

சாதாரணமாக ஒரு வளர்ந்த மனிதன் நிமிடத்திற்கு 11 – 12 தடவைகள் மூச்சை உள்ளேஎடுத்து வெளியே விடுகின்றான். ஆனால் பிறந்த குழந்தைகளின் சுவாசிப்பு வேகம் முதல் 04 மாத காலமும் நிமிடத்திற்கு சுமார் 40 – 50 தடவைகள் மூச்சை உள்ளே எடுத்து வெளிவிடுகின்றது. இந்தக் குழந்தைகள் வளி மாசடைந்த பிரதேசத்தில் வாழுமாயின் வளர்ந்தவர்களை விட குழந்தைகள் மிக அதிகமாக பாதிப்புக்குள்ளாகி விடுகின்றனர். ஏனெனில் வளி மண்டல மாசு கீழ் மட்டத்தில் அதிகம் காணப்படுவதே அதற்கு காரணமாக அமைகின்றது.

இவை இவ்வாறிருக்க, வளிமண்டலம் அதிகம் மாசடைந்த பிரதேசங்களில் வாழும் கர்ப்பிணிப் பெண்கள் மத்தியில் கருச்சிதைவு, குறை மாதப் பிரசவம், நிறை குறைந்த குழந்தை பிறப்பு, குழந்தை இறந்து பிறத்தல், குழந்தை பிறந்த சொற்பகாலத்தில் இறத்தல் போன்றன அவதானிக்கப்பட்டுள்ளன. இவைகள் வளியில் காணப்படும் நச்சு வாயுக்கள் காரணமாகவே இடம்பெறுக்கின்றது என்று சிறுவர் நோயியல் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு, கண்டி, புத்தளம், வவுனியா,யாழ்ப்பாணம் உள்ளிட்ட தென்பகுதி தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளிலும் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதென தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் வளி மதிப்பீட்டு மத்திய நிலையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் வளி மாசடைந்ததை விடவும், இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் அந்த நிலையம் மேலும் குறிப்பிடுகிறது.

ஆண்டு ஒன்றுக்கு உலகளவில் 4.2 மில்லியன் மக்கள் தங்களுடைய ஆயுட்காலம் முடிவடைவதற்குள் இறந்து விடுகின்றனர். மேலும் வளி மாசடைவின் மூலம் பாதிப்புக்குள்ளான அதிகமான மக்கள் மருத்துவமனைகளை நாடும் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

கண்ணுக்குத் தெரியாத ஒரு கொலையாளியாக மாசடைந்த வளி இருக்கிறது.நுரையீரல் புற்றுநோயால் 29 சதவீதமானவர்களும்¸மூளை பக்கவாதத்தால் 24 சதவீதமானவர்களும், இதயநோயால் 25 சதவீதமானவர்களும்,நுரையீரல் நோய் தொற்றால் 43 சதவீதமானவர்களும் உயிரிழக்கின்றனர்.

வளிமாசுபடுவதனால் அதிகளவான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் சுவாசம் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். தோல் தொடர்பான நோய்கள், சுவாசப்பை அழற்சி, சுவாசப்புற்று நோய், ஆஸ்த்துமா போன்ற நோய்களும் உருவாகின்றன. குறிப்பாக, நகரப் பகுதிகளில் வாழ்கின்ற அதிகமான மக்கள் வளிமாசடைதல் தொடர்பான நோய்களால்பாதிப்புக்குள்ளாகின்றனர்.

வாகனப் புகையை சுவாசிப்பதனால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், கண் எரிச்சல்,தலைவலி, தொண்டை எரிச்சல் மற்றும் புற்றுநோய் ஏற்படுகின்றன. சுகாதாரமற்ற வளியை சுவாசிப்பதால் நுரையீரல் செயலிழக்கிறது. அது மட்டுமல்லாது, நகரங்களில் வசிப்போருக்கு தலைமுடி உதிர்தல், தோலில் அரிப்பு போன்றவை எற்படவும் இந்த நச்சுப்புகை காரணமாக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலும், வாகனப் புகையை சுவாசிப்பதனாலும் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் புத்தக பைகளை தோளில் சுமந்து செல்வது போல, எதிர்காலத்தில் ஒட்சிசன் உருளையை நாம் அனைவரும் சுமக்க நேரிடும்.

வளிமண்டலத்தில் கலக்கும் மாசுகள் மழை நீருடன் கலந்து நிலத்தை அடைகின்றன.இவை நீருடன் நிலத்துக்கு அடியில் சென்று நிலத்தடி நீரையும், ஆறுகள், குளங்கள் முதலியவற்றையும் மாசுபடுத்துகின்றன.வாகனப்புகை நிலைவிதிகள், தானியங்கி வாகனங்களிலிருந்து வெளியேறும் காற்றில் உள்ள மாசுக்களை சுவாசிப்பதன் மூலம் மனிதர்களுக்கு நேரடியாக தீங்கு விளைவிக்கின்றது. மேலும் மறைமுகமாக நீர், உணவு, தோல் மூலம் ஊடுருவி தொற்று நோயை உண்டாக்குகிறது. காற்றில் உள்ள மாசுக்கள் இரத்தக்குழாய் மற்றும் மூச்சுக் குழல் உள்ளே நுழைந்து மனிதர்களுக்கு சுவாச நோய்கள், நுரையீரல்நோய், ஒவ்வாமை, இதயநோய் போன்றவற்றிற்கு காரணமாகிறது.

வாகனங்களிலிருந்தும் நிலக்கரி எடுக்கப்படுதல் மூலமாகவும் மிகப் பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பாக¸அமில மழை ஏற்படுகிறது.கந்தக ஒக்ஸைட் மற்றும் நைட்ரஜன் ஒக்சைட் ஆகிய வாயுக்கள் அமில மழைக்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன. இவை நீராவியோடு சேர்ந்து ஓட்சிஜன் மற்றும் சூரிய ஒளியால் நீர்த்த கந்தக மற்றும் நைட்ரிக் அமிலமாக மாறி அமில மழையை உண்டாக்குகிறது. இதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றது.

வாகனங்களுக்கு உபயோகப்படுத்தும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றாலும் நிலக்கரி, எரிவாயு போன்றவற்றை எரியூட்டும்போதும் வளி மாசடைகிறது. ஐரோப்பிய நாடுகளையும், அமெரிக்கா போன்ற நாடுகளையும் ஒப்பிடும் போது, நமது நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றது. ஆனால் இங்குதான் வாகனங்களினால் ஏற்படும் புகை மாசுபாடு அதிகமாக உள்ளதாக உலகளாவிய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது.

ஹைட்ரோ கார்பன் அதிகளவு வளியில் கலப்பதனால் மனிதர்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. தாவர இலைகளின் வளர்ச்சி குன்றுதல், இலை சுருளுதல், காய்கள் முற்றாமலேயே பழுத்துவிடுதல் போன்ற அபாயத்தையும் எற்படுத்துகின்றது.

வாகனப்புகையிலிருந்து வெளியேறும் துகள்கள் மண்ணில் படிவதால், நிலங்கள், பயிர்கள் மற்றும் செடிகள் வளர்வதற்குத் தகுதியற்றுப் போகின்றன.

வளிமண்டலம் மாசடைவதன் பாரதூரத்தை உணர்ந்து மனிதனதும் சுற்றுச்சூழலினதும் ஆரோக்கிய நலன்களுக்கு நன்மை பயக்கும் வகையில் செயற்பாடுகளை அமைத்து கொள்வதில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். கொரோனாவுக்கு அஞ்சி முகக்கவசம் அணிவது போல, வளிமாசடைவால் முகக்கவசம் அணிகின்ற நிலை உலகின் மாசு பட்ட நகரங்களில் ஏற்பட ஆரம்பித்து விட்டது. இந்நிலை எமது நாட்டில் ஏற்படாமல் இருக்க வளிமாசுபடுத்துவதை நாம் நிறுத்திகொள்ள முயற்சிக்க வேண்டும்.

குறிப்பாக, வளிமண்டலம் மாசடைவதைக் குறைப்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதோடு மாசடைந்த வளியைச் சுவாசிப்பதைத் தவிர்த்துக் கொள்வதிலும் அக்கறை கொள்ள வேண்டும். எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தரமான எரிபொருளைத் தயாரிப்பதற்கு ஏற்ப தொழில்நுட்பத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். வளியினால் ஏற்படும் மாசடைவைக் குறைக்க நடவடிக்கை எடுப்பது நாளைய சமுதயாம் நலமுடன் வாழ வழி வகுக்கும் என்பது திண்ணம்.ஆகவே வளி மாசுவைக் கட்டுப்படுத்துவோம்.!தேசத்தைப் பாதுகாப்போம்.

@M.I.M பைசல் தினக்குரல் பத்திரிகைக்காக எழுதியது.


வளி மாசடைதல்

Post a Comment

Previous Post Next Post