.

உலகில் அதிகரித்துவரும் பருவநிலை மாற்றம் மிகப்பெரிய பேரழிவுகளிற்கு இட்டுச் செல்லுமென்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் பருவநிலை பற்றிய அறிக்கை உலகநாடுகளை எச்சரித்துள்ளது. தலைக்குமேல் ஆபத்து காத்திருப்பது தெரிந்தும் உலக நாடுகள் அது பற்றிக் கவலைப்படுவதில்லை.பருவநிலை மாறுபாடு என்பது உலகளாவிய பிரச்சனையாக மாறி வருகிறது.இதனை எதிர்கொள்வதற்காக 2015ம் ஆண்டு பாரீசில் நடந்த மாநாட்டில் 191 நாடுகள் கையெழுத்திட்டன.அதன்படி 2030ம் ஆண்டிற்குள் வெப்பநிலை உயர்வை 1.3 டிகிரி செல்சியஸ் ஆகக் குறைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் அதன்படி உலகநாடுகள் புவிவெப்பத்தைக் குறைக்க தீவிரம் காட்டவில்லை அதன் காரணமாக புவி வெப்பத்தை 1.3 டிகிரி செல்சியஸ் ஆகக் குறைக்கும் இலக்கை எட்ட முடியவில்லை.

மாறாக புவி வெப்பநிலை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கிறன.புவி வெப்பமடைதல் அளவு அதிகரிக்கும்போது வெள்ளம்,கடும் மழை,நிலச்சரிவு,காட்டுத்தீயை ஏற்படுத்தும் வெப்ப அலைகள்,சூறாவளி,சுனாமி,பனிக்கட்டி உருகுதல் போன்ற இயற்கை சீற்றங்கள் அதிகரிக்கும்.

புவி வெப்பமடைதலினால் ஏற்கனவே பருவ நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறன.அது மேலும் அடிக்கடி அதிகரித்து இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும்.

கடந்த 5000 ஆண்டுகளில் இல்லாதளவிற்கு கடல்மட்டம் உயர்ந்து வருகிறது.அடுத்த நூறு ஆண்டுகளிற்கு கடல்மட்ட உயர்வு தொடர்ந்தும் அதிகரித்தபடியே இருக்கும்.இதனால் கரையோர பகுதிகள்,துறைமுக நகரங்கள் மூழ்கிக் கொண்டே வரும்.

கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடல் வெப்பமாதல் 2 முதல் 5 மடங்கு வரை ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றவாறு அதிகரித்து காணப்படும்.கடந்த 1000 ஆண்டுகளில் இல்லாதளவிற்கு ஆக்டிக் பனிப்பாறைகள் கடந்த 20 ஆண்டுகளில் வேகமாகக் குறைந்து வருகிறது.

பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை இப்போது கட்டுப்படுத்தினாலும் கூட அடுத்த ஆயிரம் ஆண்டுகளிற்கு ஏற்படும் சில பாதிப்புக்களைத் தடுத்து நிறுத்தவோ,மீட்டெடுக்கவோ முடியாது.அண்டார்டிக்கா,ஆர்டிக் பனிச்சிகரங்கள் அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் கூட அவற்றின் பழைய நிலையை அடைவது சாத்தியமில்லை.

புவியை ஒரு போர்வை போல கரியமில வாயு,மீதேன்,நைட்ரஜன் ஒக்சைட் போன்ற பசுங்குடில் வாயுக்கள் சூழ்ந்துள்ளன.இந்தப் போர்வையில் 76 வீதமாக இருப்பது கரியமில வாயு கடந்த 20 இலட்சம் ஆண்டுகளில் இல்லாதளவிற்கு அதிகரித்து ஆபத்தாகக் கருதப்படும் நிலையை அது கடந்து விட்டது.என்ன செய்தாலும் அடுத்த இருபது ஆண்டுகளிற்கு 2.3டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிப்பதை தடுக்க முடியாது என்று சர்வதேச ஆய்வுக்குழு கூறியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சில நாடுகளில் வழக்கத்திற்கு மாறாக வெள்ளம்,காட்டுத்தீ ஏற்பட்டு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.அண்மையில் கூட சீனாவில் ஆயிரம் ஆண்டுகளில் இல்லாதளவிற்கு மழை கொட்டித் தீர்த்தது.இதனால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் திண்டாடினர்.

பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவர் என்று யுனிசெப் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.வரட்சி, வெள்ளம், காற்று மாசுபாடு ஆகியவை ஆசியாவில் லட்சகணக்கான குழந்தைகளை வீடற்றவர்க ளாக்குவதோடு அவர்களின் பட்டினிச்சாவிற்கு காரணமாக அமையும்.

புவி வெப்பமடைவதால் அதன் தொடர்ச்சியாக நிகழும் பருவநிலை மாற்றத்திற்கு மனிதர்களே முழுமுதற்காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி மக்கள் பேரழிவுகளால் வீடகளை விட்டு வெளியேறுகிறனர்.கடந்த 20 ஆண்டுகளில் இயற்கைப் பேரழிவுகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் பருவநிலை தொடர்பான நிகழ்வுகளால் 12.3 இலட்சம் மக்கள் இறந்துள்ளனர்.520 கோடிப்பேர் வெள்ளம், வரட்சி,காட்டுத் தீ போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐநா கூறுகிறது.

அண்டார்டிக் பகுதியில் பனிப்பாறைகள் உருகி வருவதால் கடந்த 20 ஆண்டுகளில் கடல் மட்டம் 20செ.மீ உயர்ந்துள்ளது.உலகளவில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களால் கார்பன்,மீதேன் அதிகளவில் வெளியேறி பூமி வெப்பமடைகிறது.உலகநாடுகளைச் சேர்ந்த 238 பேர் கூட்டாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.அதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு செய்தியும் எச்சரிக்கையாகவே உள்ளது.உலக நாடுகள் இதனை அபாய அறிவிப்பாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இது பற்றி ஐ.நா பொதுச் செலாளர் கூறுகையில்  'இந்த அறிக்கை மனித குலத்திற்கு சிவப்பு எச்சரிக்கையாகும்.உலக நாடுகளின் தலைவர்கள் வெப்பத்தை குறைப்பதற்கு தம் இலக்கை எட்டுவர் என்று நம்புவோம் புவி வெப்பமடைதலைத் தடுக்க குறைந்த பட்ச நடவடிக்கைகளில் இருந்தாவது முயற்சிகளைத் தொடங்குவோம். ஒவ்வொரு சிறிய நடவடிக்கையும் குறைந்த பட்ச பலனையாவது அளிக்கும்.முயற்சிகளை விட்டுவிடக் கூடாது என்று கூறியுள்ளார்'

பருவநிலை மாற்றத்திற்கான சர்வதேசஅரசுக்குழு(Intergoverment Panel on Climate Change-IPCC) என்பது ஐ.நாவின் பருவநிலை மாற்றத்திற்கான அமைப்பாகும்.1948ம் ஆண்டு முதல் 195 உறுப்புநாடுகளால் உருவாக்கப்பட்டது.ஏறாக்குறைய ஏழு ஆண்டுகளிற்கு ஒருமுறை பருவநிலை மாற்றங்களை குறித்து அறிக்கைகளை உருவாக்கி ஆய்வுக்கு உட்படுத்தி,பாதிப்புக்களை ஏற்படுத்தும்,அவற்றிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது போன்ற அறிக்கைகளை வெளியிடுகிறது.

IPCC எந்த ஆராய்ச்சியையையும் தானாக நடாத்துவது இல்லை.உலக அளவில் நடத்தப்படும் ஆராய்ச்சிகளை தொகுத்து உலகத்தின் பார்வைக்குத் தருகிறது.இதற்கு முன்னர் ஐந்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளது

எல்லா நாடுகளும் ஏற்றுக் கொண்ட பிறகே IPCC அறிக்கைகளை வெளியிடுகிறது.எதிர்கொள்ளும் ஆபத்துக்களை விஞ்ஞான பூர்வமாகத் தெரிவிக்கவும் அவற்றை கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளும் உலக நாடுகள் பருவநிலை மாற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க தயக்கம் காட்டுகிறன.ஆனால் இயற்கையோ,பருவநிலை மாற்றமோ யாருக்காகவும் காத்திருப்பதில்லை.அதைத்தாண்டி மனித குலம் தன்னை மாற்றிக் கொண்டால் மட்டுமே இந்தத் தாக்கங்களிலிருந்து தப்பிக்க முடியும்.இந்த மனப்பாங்கை வளர்த்துக் கொள்ள வேண்டும்.இதிலிருந்து தப்பித்து எங்கும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.கார்பன் வெளியேற்றத்தை குறைப்பது மட்டுமே தீர்வாகும்.

இப்போது எமக்கு இந்தப் பூமியை விட்டால் வேறு இடம் இல்லை.ஆராய்ச்சிகள் தொடர்கிறனவே தவிர மனிதன் குடிபெயர்வதற்கு வேறு கோள்கள் இதுவரைக் கிடைக்கவில்லை. அப்படியிருக்கும் போது இந்தப் பூமியை இழக்க மனித குலம் துணியாது.பூமியைக் காக்க போராடுவோம் வாருங்கள்...!!!

காலநிலை மாற்றம்



Post a Comment

Previous Post Next Post