.

அ.வி.அனிக்கின் எழுதிய மஞ்சள்  பிசாசு என்னும் புத்தகம் ரஸ்ய மொழியில் வெளியான The Yellow Devil என்னும் புத்தகத்தின்  தமிழாக்கமாகும். வரலாறு சம்பந்தமாகவும் எதிர்காலம் சம்பந்தமாகவும் ஆர்வமிருப்பவர்களிற்கு ஏற்ற நூல் இது.இது தங்கத்தின் அரசியல் பொருளாதார வரலாற்றை சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்கிறது. அட்டைப் படத்திலேயே  இந்தப் புத்தகத்தைப் பிறரிடம் படிக்கக் கொடுத்தால் திரும்பி வராது,ஏன்? என்று கேட்டு வாசகர்களிற்கு படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது இந்நூல்.இக் கேள்விக்கான விடையும் இப் புத்தகத்திலேயே காணப்படுகிறது.வாசித்து தெரிந்து கொள்ளுங்கள் ஏன் புத்தகம் திரும்பி வராது என்று..

மார்க்ஸிம் கார்க்கி அமெரிக்காவிற்குச் சென்றதிலிருந்து அவர் தங்கத்தை மஞ்சள் பிசாசு என்று அழைத்தார்.மார்க்ஸிம் கார்க்கி என்பவர் ஒரு புகழ்பெற்ற ரஸ்ய எழுத்தாளராவார்.ஐந்து முறை இலக்கியத்திற்கான நோபல் பரிசிற்காக சிபாரிசு செய்யப்பட்ட எழுத்தாளராவார்.இவருடைய 'தாய்' என்னும் புத்தகம் தமிழிலும் கிடைக்கிறது(புத்தகம் அறிவோம் வலைத்தள வாசகர்களிற்காக)

பணத்தின் உலோகமாகவும் மதிப்பீட்டின் அளவாகவும் காணப்படும் இந்நூல் தங்கத்தின் கண்கவர் வரலாறாகக் காணப்படுகிறது. சமூகங்களில் அதன் உள்ளார்ந்த பொருளியல் அர்த்தங்களைப் பகுப்பாய்வு செய்கிறது இந்நூல்.பன்னாடு பணவியல் முறையில் தங்கம் வகிக்கும் சமூக அரசியல் பொருளாதார வரலாற்றுப் பிரச்சனைகளையும் விவரிக்கிறது இந்நூல்.

இந்நூலானது 1978ல் வெளியிடப்பட்டிருந்தாலும் சமகாலத்திலும் பொருந்துவதாக அமைகிறது.அதைவிட சோவியத் ரஸ்யா வீழ்ச்சியடைய முன்னர் எழுதப்பட்ட நூலாகையால் சில இடங்களில் சோசலிசத்தை உயர்த்தியே பிடிக்கிறார் நூலாசிரியர். முதலாளித்துவம் வீழ்ந்து விடும் என்கிறார் ஆனால் நடந்ததோ வேறு கதைதான்.அதைவிட இவருடைய தங்கத்தைப் பற்றிய எதிர்வு கூறல்கள் சரியாகவே அமைகிறன.தங்கம் எப்போதும் நெருக்கடியான காலகட்டத்தில் கைவிட்டதில்லை என்று புகழ்கிறது இந்நூல்.

தங்கத்ததைப் பற்றிய அலசலில் அது எப்போதும் இரும்பைப் போல துருப்பிடிப்பதில்லை,செப்பின் மீது நீலம்-பச்சை சேர்மம் படர்வதைப் போல அதற்கு ஏற்படுவதில்லை,வெள்ளியைப் போல கறுத்து விடுவதில்லை,அது எப்பொழுதும் பளிச்சென்ற தோற்றத்தையே கொண்டிருக்கிறது  அதனால்த்தான் அது உயர்ந்த உலோகம் என்கிறார்.

வராற்றின்படி லிடியர்கள்தான் முதன்முதலில் தங்கத்தை பணமாகப் பயன்படுத்தினர்.சரக்குகளைச் சில்லறையாக விற்பனை செய்தவர்களும் இவர்கள்தான்.கி.மு ஏழாம் நூற்றாண்டில் இது நடைபெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.லிடியாவின் அரசர் ஏராளமான தங்கத்தை வைத்திருந்ததால் செல்வம் படைத்த அரசராகக் கருதப்பட்டார்.பாரசீகர்களிற்கு எதிரான போரிற்கு முன்னர் அப்பல்லோ தெய்வத்தின் ஆலயத்தில் பெருந்தொகையான செல்வங்களைக் காணிக்கையாகக் கையளித்தார்.கிட்டத்தட்ட டன் கணக்கான தங்கம்தான்.ஆனால் இவ்வளவு அதிகமாக காணிக்கையளித்தும் கூட அவருடைய இராசதானியைக் கடவுள் காப்பற்றவில்லை என்பது சோகம்தான்.ஒருவேளை அந்த ஆபத்தை அது விரைவுபடுத்தியிருக்கலாம்.பின்னர் அவ்வளவு தங்கத்தையும் பாரசீகர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள்.என்ற தங்கத்தின் முதல் வரலாற்றுக் கதையை எமக்கு எடுத்துரைக்கிறார் நூலாசிரியர்.

தங்கம் எவ்வாறு தோண்டியெடுக்கப்படுகிறது எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது தங்கச்சுரங்கங்களின் நிலை என்ன..?தொழிலாளர்களின் நிலை என்ன பாதுகாப்பானதா என்பதில் தொடங்கி  உலகத்திலுள்ள தங்கம் அனைத்தும் எங்கே செல்கிறது என்று படம் போட்டுக் காட்டுவதன் மூலம் எம்மை புதியதொரு உலத்திற்கு அழைத்துச் செல்கிறார் அனிக்கின்.உண்மையில் தங்கம் பண உலோகம் என்னும் நிலையிலிருந்தாலும் தங்கச் சுரங்கங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் என்னமோ ஏழைகளாகவே தொடர்கிறனர்.அடிப்படை வசதி கூட சில சமயங்களில் கிடைப்பதில்லை.ஆனாலும் அவர்கள் அங்கேயே தமது உழைப்பைக் கொட்டுகிறனர்.நிறுவனங்கள் பெருத்த இலாபமடைகிறன என்கிறார் நூலாசிரியர்.

தங்கத்தைப் பற்றி யோசிக்கும்போது மகிழ்ச்சி நிரம்பிய உன்னதமான காலத்தைப் பற்றி நாம் யோசிக்கிறோம் ஆனால் உண்மையில் தங்கம் ஆட்சி செய்யாத காலம்தான் தங்கயுகம் என்கிறார்.தங்கத்திற்காக தனிமனிதன் தொடங்கி கூட்டமாக கொலை செய்தல் வரை எண்ணற்ற பேரழிவுகளும் கொலைகளும் வரலாறு முழுவதும் இடம்பெற்றுள்ளன.அவற்றை தனித்தனியாகத் தொகுத்திருக்கிறது இந்நூல்.உதாரணமாக ஹெய்ட்டியின் சுதேச மக்கள் அனைவரும் தங்கத்திற்காகவே அழிக்கப்பட்டனர். அடுத்ததாக இன்கா மற்றும் அஸ்டெக் நாகரிகங்களும் தங்கத்திற்காக ஸ்பானிஷ்கார்களின் தங்க வெறியினால் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டன.மஞ்சள் பிசாசிற்காக எத்தனையோ அருமையான கலைப் படைப்புக்களும் அழிக்கப்பட்டுள்ளன.அதனையும் தொட்டுச் செல்கிறார் நூலாசிரியர். இவ்வாறு இன்னும் இரத்தந் தோய்ந்த வரலாறுகளைத் தங்கம் கொண்டிருக்கிறது ஆனாலும் தங்க மோகம் தொடர்கிறது.

எந்தவொரு பண்டத்தின் மதிப்பும் மாறும் தன்மையைக் கொண்டிருக்கிறது.இது தங்கத்துக்கே சாலப் பொருந்துகிறது. தங்கத்தின் உபயோகம் கலப்பற்ற சமூகக் காரணிகளினால்தான் நிர்ணயிக்கப்படுகிறது.தங்கம் தற்போது தன் முகத்தை மாற்றியுள்ளது ஆபரணக் கைத்தொழில்,பல் மருத்துவம் என்று அது நீண்டு செல்கிறது.மஞ்சள் பிசாசு கடன்வசதி, முன்னேற்றம், தொழில்நுட்பம், கலை என்ற கௌரவ முகமூடிகளையும் அணிந்து கொள்கிறது. மக்களுடைய மனங்களில் பணநாகரிகத்தின் சின்னமாக, முதலாளித்துவத்தின் சின்னமாக வீற்றிருக்கிறது.

தங்கம் எதிர்காலத்தில் மேலும் பல அதிர்ச்சிகளை மனித குலத்திற்கு வழங்கவிருக்கிறது என்று எதிர்வு கூறியிருக்கிறார் நூலாசிரியர். அதன் எதிர்காலப் புதிர்களைப் புரிந்து கொள்ள இந்நூல் அவசியமானதாக காணப்படும்.

தங்கம் பற்றிய வரலாற்றினை அறிய ஆர்வமிருப்பவர்களிற்கு இப்புத்தகம் உதவியாக அமையும்.வாசிப்போம்.

மஞ்சள் பிசாசு புத்தகம்






Post a Comment

Previous Post Next Post