.

யுவால் நோவா ஹராரி எழுதிய 21ம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள் என்னும் புத்தகமானது 2100 வரை மனிதகுலம் என்னவெல்லாம் செய்யப் போகிறது¸செய்து கொண்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்கிறது அதாவது நிகழ்காலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இப்புத்தகம்.

இந்த நூற்றாண்டானது இனிவரும் காலங்களில் எப்படிச் செல்லப்போகிறது செயற்கை நுண்ணறிவு மனித சமுதாயத்தை எவ்வாறு ஆட்டுவிக்கப் போகிறது காலநிலை மாற்றம் எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தவிருக்கிறது என்பதையும் மனிதர்கள் என்னவெல்லாம் சவால்களை எதிர் கொள்ள விருக்கிறனர் அதற்கான தீர்வுகள் என்னவென்பதையும் எடுத்துரைக்கிறது இந்நூல்.

இந்நூலாசிரியரின் ஏனைய புத்தகங்களைப் போல இப் புத்தகமும் எந்த விதமான சோர்வையும் ஏற்படுத்தாமல் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியிருப்பது ஹராரியின் வெற்றியாகும்.அதற்கு இந்நூலில் இடம்பெற்றுள்ள பிரபலங்களின் கருத்துக்களும் பிரபல பத்திரிகைகளின் பின்னூட்டங்களுமே சாட்சியாகும்.

ஏமாற்றம்,வேலை,சுதந்திரம்,சமத்துவம்,சமூகம்,நாகரிகம்,தேசியவாதம்,மதம்,குடிவரவு,தீவிரவாதம்,போர்,பணிவு,கடவுள்,மதச்சார்பிமை,அறியாமை,நியாயம்,உண்மைக்குப் பிந்திய யுகம்,அறிவியல் புனைக்கதை கல்வி, அர்த்தம், தியானம் ஆகிய 21 தலைப்புங்களில் 21 பாடங்களாக எமக்கு விளங்கப் படுத்துகிறார் நூலாசிரியர் உண்மையில் நாம் தற்போது எதிர்கொண்டிருக்கும் முக்கிய பிரச்ச னைகளை விரிவாக விவாதிக்கிறார்.செயற்கை நுண்ணறிவுகள் மனிதர்களின் வேலைகளைப் பறிக்கும்போது என்ன நிகழும்..? உதவாக்கரை என்ன மக்கள் கூட்டம் உருவாகும் என்பதை ஆணியடித்தால் போல் கூறியிருக்கிறது இந் நூல் ஏற்கனவே நாம் அந்தப் பிரச்சனைகளை எதிர் கொள்ளத் தொடங்கி விட்டோம். கார்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது குதிரைகளிற்கு என்ன நடந்ததோ அதுதான் மனிதர்களிற்கும் நடக்க விருக்கிறது என்பதை கூறுகிறார் நூலாசிரியர்.

இந்நூல் உலகளாவிய ரீதியானது.உலகம் முழுவதிலுமுள்ள சமுதாயங்கள் அனைத்தும் செதுக்கி வடிவமைத்து,நம்முடைய ஒட்டுமொத்த பூமியின் எதிர்காலத்தின் மீது கவனம் செலுத்தியுள்ளார் நூலாசிரியர்.பொதுமக்களுடன் நூலாசிரியர் நடத்திய உரையாடல்களின் தொகுப்பே இந்நூலாகும்.ஏற்கனவே பின்னூட்டங்களைப் பெற்றுக் கொண்டு அவற்றை மேலும் செதுக்கி புத்தகமாக எங்களிற்கு அளித்துள்ளார்.இருபதாம் நூற்றாண்டின் முடிவில் பாசிசவாதம், கம்யூனிசவாதம்,தாராளவாதம் ஆகியவ ற்றுக்கிடையே முளைத்த கருத்து மோதல்களில் தாராளவாதம் மாபெரும் வெற்றி பெற்றது போல எங்களுக்குத் தோன்றியது. ஜனநாயக அரசியல், மனித உரிமைகள்,கட்டற்ற சந்தை முறை முதலாளித்துவம் ஆகியவை சேர்ந்து ஒட்டுமொத்த உலகத்தையும் வெற்றி கொள்ளவிருந்ததைப் போல தெரிகிறது. ஆனால் வழக்கம்போல வரலாறு ஓர் எதிர்பாராத திருப்பதை எதிர் கொள்கிறது.பாசிசவாதமும் கம்யூனிச வாதமும் சரிந்த பிறகு தாராளவாதம் ஒரு நெருக்கடிக்கு உள்ளானது ஆகவே நாம் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்று யாதார்த்தமான கேள்வியை விட்டுச் செல்கிறது இந்நூல்.

நூலாசிரியரின் முந்தைய நூலான ஹோமோ டியஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிர்தொழில்நுட்பத்தின் சங்கமத்தை பல நூற்றாண்டுகளிற்கு என்ன நிகழும் என்பதை ஆராய்கிறது.ஆனால் இந்நூல்,தற்போது நாம் எதிர் கொண்டுள்ள சமுதாய நெருக்கடிகள், பொருளாதார நெருக்கடிகள்,அரசியல் நெருக்கடிகள் ஆகியவற்றை அலசி ஆராய்கிறது.தொழில்நுட்பங்கள் பல அருமையான விளைவுகளிற்கு வித்திட்ட போதிலும் அவற்றின் ஆபத்துக்களைச் சுட்டுக் காட்டுகிறது இந்நூல்.தொழில் நுட்ப பரட்சிகளை முன்னின்று நடத்துகிற பெரு நிறுவனங்களும் தொழில் முனைவோரும் தங்களுடைய படைப்புக்களைப் பற்றி வீர முழக்கமிடுவதில் அவர்களுடைய சுயநலம் ஒளிந்திருக்கிறது அவர்கள் அதன் ஆபத்தைப் பற்றி மூச்சுக் கூட விடப் போவதில்லை தொழில்நுட்பங்களின் ஆபத்துப் பற்றி பேசும்   பொறுப்பை இந்நூல் எடுத்துக் கொள்கிறது.

மனிதர்கள் கடவுளின் பெயரை ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று பைபிளின் பத்துக் கட்டளைகளில் மூன்றாவது கட்டளை கூறுகிறது. பலர் இதை கடவுளின் பெயரை தாங்கள்  கூறக் கூடாது என்று நம்புகிறனர். ஆனால் இதன் அர்த்தம் உண்மையில் எம்முடைய அரசியல் நலன்களையும் பொருளாதார இலட்சியங்களையும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களையும் நியாயப்படுத்துவதற்கு நாம் கடவுளின் பெயரைப் பயன்படு த்தக்கூடாது என்பதாகும்.ஆனால்  யாரும் இதை  பெரிதாக எடுத்துக் கொள்வதுமில்லை, கடைப்பிடிப்பதுமில்லை.இந்தக் கட்டளையை அர்ப்பணிப்போடு கடைப்பிடித்தால் இவ்வுலகம் அதிகச் சிறப்பானதாக இருக்கும் என்கிறார் ஹராரி.

ஹராரியின் மதங்களைப் பற்றிய விமர்சனம் ஏற்றுக் கொள்ளத்தக்கதே.மத வெறியர்களிற்கு அது பிடிக்காமல் போகக்கூடும் ஆனால் நடுநிலையிலிருந்து யோசித்தால் அது ஏற்றுக் கொள்ளத்தக்கவொன்று. அனைத்து மதங்களையும்தான் சாடியுள்ளார். புனைக் கதைகளை அவர் தவிடுபொடியாக்குகிறார்.

இன்று உலகம் முழுவதும் உள்ள பெருளாதாரக் கொள்கைகளில் எதை வேண்டுமானாலும் அரசியல்வாதிக் தெரிவு செய்யலாம்.ஆனால் அவை முதலாளித்துவத்தையே பிரதிபலிக்கிறன.தாங்கள் தெரிவு செய்யப் பல்வேறு விடயங்கள் இருப்பதாக அரசியல்வாதிக் நினைக்கக்கூடும்.ஆனால் அது ஒரு மாயையே.உண்மையில் முக்கியமான தீர்மானங்கள் அனைத்தும் ஏற்கனவே பொருளாதார வல்லுனர்களாலும் வங்கியியலாளர்களாலும் தொழிலதிபர்களாலும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டன.இது போல் இன்னும் இருபது ஆன்டுகளில் செயற்கை நுண்ணறிவினால் தயாரிக்கப்படுகிற ஏதாவது நிரலிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் நாமும் அரசியல்வாதிகளும் இருப்போம் என்கிறார் ஹராரி.

நூலாசிரியரின் ஆழமான பார்வையும் அளவான எழுத்துக்களும் இணைந்து உருவாக்கியுள்ள இப்புத்தகம் எமக்குள் அடங்கிக் கிடக்கும் கவலைகளையும் தூக்கமின்மையையும் ஓர் ஆழமான அதிகமான வலுவூட்டப்பட்ட புரிதலாக மாற்றுகிறது.வரலாறு தொடர்பாக ஆர்வமுள்ளவர்களிற்கும் பொதுவாக அனைவருக்கும் ஏற்ற புத்தகமாகும்.வாசிப்போம்.

21ம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள்

21ம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள் நூலினை வாசிக்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.

You have to wait 30 seconds.

Generating Download Link...

Post a Comment

Previous Post Next Post