சூர்ய புத்திரன் கர்ணனின் மறைவிற்கு அர்ஜூனனை ஒரு காரணமாக சொல்ல முடியாது.கர்ணன் இறந்ததும் குந்திதேவி போர்க்களத்தில் நுழைந்து கர்ணனை தன் மடியில் கிடத்தி மகனே என ஆரம்பித்தாள். இச்செய்தியை கேட்ட பாண்டவர்கள் விவரம் புரியாமல் கர்ணனை நோக்கி ஓடினர் அர்ஜுனனும் பதை பதைத்தான். கர்ணன் வீழ்ந்த செய்தி கேட்டு துரியோதனனும் அழுது கொண்டே ஓடிவந்தான். குந்தி அழுதுக் கொண்டே தன் மகன் தான் கர்ணன், பாண்டவரில் மூத்தவர் என்றுக் கூற பாண்டவர்கள் துடித்து விட்டனர். தங்கள் அண்ணனை கொன்றோமே என்று அனைவரும் அழுது புலம்ப, அர்ஜூனன் கிருஷ்ணர் மீது கோபம் கொண்டான் " கண்ணா உனக்கு தான் கர்ணன் என் அண்ணன் என்று தெரியுமல்லவா, அதை என்னிடம் மறைத்து என் அண்ணனையே கொல்ல வைத்துவிட்டாயே, உன்னால் என் அண்ணனைக் கொன்றேனே, நான் பெரும் பாவி ஆயிற்றே, உன்னால் தானே கொன்றேன் எனக் கதறினான்".அதற்கு கிருஷ்ணர்" பார்த்தா, ஏற்கனவே இறந்தவனை கொன்றுவிட்டு நான் கொன்றேன், நான் கொன்றேன் என இறுமாப்பு கொள்ளாதே" கர்ணனை கொல்லும் வீரம் உன்னிடம் இல்லை என்றார் .
கர்ணன் கடோத்கஜனைக் கொல்லுதல் |
உனக்கு முன்பே பலர் கர்ணனைக் கொன்று விட்டனர் என்று காரணம் கூறினார்.
- கர்ணன் வினோத சத்தம் கேட்டு , அத்திசையை நோக்கி எய்த அம்பு பிராமணரின் கன்றைக் கொன்றது. கர்ணன் அறியாமல் செய்த தவறாகினும் பிராமணர் கர்ணனை மன்னிக்க மறுத்து " உதவியற்ற நிலையில் ஒருநாள் கொல்லப்படுவாய்" என சபித்தார்.
- பிராமணன் என்று பொய் சொல்லி பரசுராமரிடம் வித்தையை கற்றான் கர்ணன். கர்ணனின் மடியில் பரசுராமர் தூங்கும் போது கர்ணனால் அர்ஜூனன் உயிருக்கு ஆபத்து நேரக்கூடாது என்று அர்ஜூனனின் தந்தையான இந்திரன் வண்டு உருவம் எடுத்து கர்ணணின் தொடையை குடைந்து மறுபுறம் வந்து விட்டான் குருவின் தூக்கம் கலையக் கூடாது என்று வலியை பொறுத்துக் கொண்டான் கர்ணன். குருதி பெருகி பரசுராமரின் முகத்தை நனைக்க விழித்த அவர் பிராமணனால் இவ்வளவு வலியை தாங்க இயலாது , நீ சத்திரியன் "பொய் சொல்லி நீ கற்ற வித்தைகளும் , பிரம்மாஸ்திரமும் முக்கிய வேளையில் மறந்து போகும் " என சபித்தார்.
- பூமியில் சிந்திய நெய்யை நினைத்து சிறுமி அழுவதை கண்ட கர்ணன் பூமாதேவிக்கு வலிக்கும் வகையில் வழித்தெடுத்தான். கோபம் கொண்ட பூமாதேமி தக்க சமயத்தில் அவர் தேர் பூமியில் சிக்கிக் கொள்ளும் என சபித்தாள்.
- * கவசக்குண்டலம் இருக்கும் வரையில் கர்ணனை எவரும் வெல்ல இயலாது என்பதை அறிந்த இந்திரன் தன் மகன் அர்ஜுனனை காக்க பிச்சைக்காரன் வேடமிட்டு கர்ணனிடம் கவச குண்டலத்தை யாசகம் பெற்றான். சூரியன் கர்ணனை எச்சரித்தும் கர்ணன் தானம் கொடுத்தான்.
- குந்தி தேவி அர்ஜூனன் மீது நாகாஸ்திரத்தை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற வரத்தை கர்ணனிடம் வாங்கினாள். பாண்டவரில் மற்ற 4 பேரையும் கொல்வதில்லை என்ற வரத்தினையும் அளித்தான். அர்ஜுனனை கொல்லாவிடில் , கர்ணன் அர்ஜுனனாக் கொல்லப்படுவான் என்பது குந்திக்கு தெரியும்.
- போர் உக்கிரமாக நடைபெறும் போது கர்ணனின் தேர் சிக்கிக் கொள்ள, தேர் சக்கரத்தை எடுக்குமாறு சல்லியனை கர்ணன் பணிக்க அது என் வேலை இல்லை என்று தேரோட்டி சல்லியன் இறங்கி சென்று விடுவான். தேரோட்டி இன்றி கர்ணன் தேரையும் ஒரு கையில் செலுத்தி மறு கையில் வில்லேந்துவதும் சிரமம்.
- சாபங்கள் ஒன்று சேர கர்ணன் வித்தைகளை மறந்தான் , தேரும் சேற்றில் சிக்கிக் கொண்டது. ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தேர் சக்கரத்தை கர்ணன் தூக்க முயற்சித்த போது கிருஷ்ணர் இது தான் சரியான சந்தர்ப்பம் கர்ணன் மீது சரமாரியாக அம்பெய்த கூறினார். அர்ஜுனன் அது தர்மமல்ல என்று மறுத்த போது அபிமன்யுவின் இறப்பிலும் தர்மம் பின்பற்றவில்லை என்று அதர்ம வழியிலே கர்ணனை கொல்ல சொன்னார்.
கௌரவ சேனையில் கர்ணனை விட பெரிய வீரன் எவரும் இல்லை. பாண்டவரில் கடவுள் கிருஷ்ணர் தேராட்டியாகவும் சூத்திரதாரியாகவும் இருக்க அர்ஜுனன் தேரில் மேல் கொடியில் ஹனுமான் இருந்து திவ்விய அஸ்திரங்களிலிருந்து அர்ஜுனனை காத்தார். கர்ணன் போரில் இறக்க முக்கிய காரணங்களில் அர்ஜுனனின் தந்தை இந்திரனின் பங்கு பெரியது .
முற்றும் உணர்ந்த பரசுராமருக்கு கர்ணன் பிறப்பு தெரியாமலா இருக்கும்? அவரின் சாபத்தினால் அர்ஜுனன் பிழைக்க கர்ணன் இறந்தான். வரம் பெற்ற குந்திக்கும் பங்கு உண்டு.
பாண்டுவிடம் உண்மையை கூறியிருக்கலாம் அல்லது தாய் சொல்லை தட்டாத பாண்டவர்களிடமாவது உண்மையை கூறியிருக்கலாம். தர்மம் அறிந்த கிருஷ்ணர் அதர்மப்படி கர்ணனை கொல்ல அர்ஜூனனை பணித்திருக்க கூடாது.
கர்ணனின் தவறுகளையும் மறைக்க முடியாது.
- இந்திரன் கொடுத்த சக்தி அஸ்திரத்தை அர்ஜூனன் மீது பிரயோகிக்காமல் கடோத்கஜனை கொல்ல பயன்படுத்தியது.
- பரசுராமர் கொடுத்த விஜயா ஆயுதத்தை பயன்படுத்தாமலே வைத்திருந்தது.
- சல்லியன் அறிவுரைப்படி கர்ணன் அர்ஜுனன் நெஞ்சிற்கு குறி வைத்து நாகாஸ்திரம் எய்திருந்தால் அர்ஜுனன் இறந்திருப்பான்.
- சூரியன் அறிவுரைப்படி கவசகுண்டலம் தராமல் இருந்தாலும் பிழைத்திருப்பான்.
கர்ணன் எவர் அறிவுரையையும் ஏற்றதில்லை. போரில் வெல்லும் சந்தர்ப்பத்தில் எல்லாம் தவறான முடிவுகளால் முடிவை தேடினான்.
எதுவாகினும் கர்ணனின் புகழ் வானாளாவியது. ...
Post a Comment